Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசின் மின் திட்டங்கள் பயன் தருமா?

டந்த திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தின் தீராத பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்த மின்வெட்டுப் பிரச்னை,  மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அது அடுத்து வந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்து திமுகவை ஆட்சியிலிருந்து இறக்கி, ஜெயலலிதா தலைமையில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியது.

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தரப்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் முதன்மையானது மின்வெட்டே இல்லாத மாநிலமாக, மின்மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றிட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது. ஆனால் அதிமுக அரசு அமைந்து நான்காண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் மின்வெட்டுப் பிரச்னையை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

கடந்த 8 ஆண்டுகளாக கடுமையாக நிலவும் மின்வெட்டால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி பின்னோக்கிச் செல்கிறது.விவசாயம் நலிவடைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் இன்ன பிற சிக்கலுக்கும் ஆளாகி மாநில மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த அன்றாட இன்னல்கள் குறித்து அவ்வப்பொழுது எதிர்க் கட்சிகள்  கட்சிகள் சார்பில் அறிக்கைகள் வெளிவந்தும், போராட்டங்கள் நடந்தும் வருகின்றன. ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை.

விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் வழங்கப்படும் வாக்குறுதிகளில் ஒன்றாக மின்சாரப் பிரச்னை மாறியிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையை சமாளிப்பதற்கான திட்டங்களை துல்லியமாக, தொலைநோக்கோடு  வகுத்து செயல்படுத்தியிருந்தால் தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்கி, மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை விற்பனை செய்திருக்க முடியும். ஆனால் நிலைமை இதற்கு நேர்மாறாக இருக்கிறது.

இதனால் மின்வெட்டு இல்லாத மாநிலம் என்பது கனவாகவே இருந்துவருகிறது. எதிர்க்கட்சிகள், "தமிழக அரசிடம் தொலைநோக்கு பார்வையில்லை, தனியாரிடம் இருந்து மின்சாரக் கொள்முதல் செய்வதன் மூலம் பெருமளவில் ஊழல் செய்ய வேண்டும் என்ற பேராசை இருக்கிறது, அதனால்தான் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவதில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது" என்று கடுமையாகக் குற்றம் சாற்றி வருகின்றன.ஆனால் இவை எதுவும் மாநில அரசின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை.

தமிழகத்தின் மொத்த மின்தேவையை நிறைவேற்றுவதில் அனல் மின் திட்டமும், நீர் மின்திட்டமும் பெரும்பங்காற்றுபவை. அதற்கு அடுத்த நிலையில் காற்றாலையும், அணு மின்சாரமும் இருக்கின்றன.இந்த வரிசையில் தற்போது சூரிய மின் உற்பத்தி இடம் பிடித்துள்ளது. மற்ற மின் உற்பத்தி திட்டங்களைக் காட்டிலும் சூரிய மின் உற்பத்தி, பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், வாய்ப்புள்ள  பிற மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக பிரதமர் மோடியின் நண்பர் அதானியின் நிறுவனம், தமிழக அரசுடன் சூரிய மின் உற்பத்தி திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதே சமயம் இந்த ஒப்பந்தம்  குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து, கூட்டுத்திட்டத்தின் கீழ் 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22–2–2009 அன்று ‘‘உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்’’ நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

பின்னர் அமைந்த அதிமுக ஆட்சியில் , உடன்குடியில் பி.எச்.இ.எல். நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தொடங்கிய திட்டத்தை முழுவதுமாக 2012 ஆம் ஆண்டு ரத்து செய்து விட்டு, தமிழக மின்வாரியம் மட்டும் தனித்தே அந்தத்திட்டத்தைத் தொடங்கப்போவதாகவும், 660 மெகாவாட்உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன. இதில் மத்திய அரசு பொது நிறுவனமான பி.எச்.இ.எல்.,மற்றும் சீனாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் உட்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மின் நிலையத்திற்காக திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், மின் வாரியத்திற்கு உரிமை மாற்றமும் செய்யப்பட்டது. தனியாருக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப்புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டதில், சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், ‘‘பெல்’’ (பி.எச்.ஈ.எல்.) நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விலைப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்படவேண்டும். ஆனால் நீண்ட இழுபறிக்குப் பின்னரே 2014ஆம் ஆண்டு நவம்பரில்தான் விலைப்புள்ளி திறக்கப்பட்டது.

இதில் பி.எச்.இ.எல்., மற்றும் சீனா நிறுவன டெண்டர்கள் மட்டும் பரிசீலனையில் இருப்பதாகச்  சொல்லப்பட்டது. அதிகாரிகள் ஒரு முடிவும், அரசு ஒரு முடிவும் தெரிவித்ததால், அந்த டெண்டரை யாருக்கு முடிவு செய்வது என்பதில் குழப்பம் நீண்ட காலமாக நீடித்தது. மின் வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த நிறுவனத்திற்கு, பணி ஆணை வழங்க, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என்றும் கூறப்பட்டது.

உடன்குடி டெண்டர் பற்றிய கோப்புகளை தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளிடமிருந்து பெற்று, எரிசக்தித் துறைச்செயலர் அலுவலகத்தில் பரிசீலித்திருக்கிறார்கள். மின் வாரிய அலுவலகத்தில் 13–3–2015 அன்று மாலையில் நடைபெறுவதாக இருந்த இயக்குனர் குழுக்கூட்டமும், தலைமைச்செயலகத்திற்கு மாற்றப்பட்டு, அங்கே அந்தக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் மின் வாரியத் தலைவர் சாய்குமார், இயக்குனர்கள் தேவராசன், அண்ணாதுரை, அருள்சாமி, கலைவாணன், தமிழக அரசின் சார்பில் எரிசக்தித் துறை, நிதித் துறை, தொழில் துறை செயலாளர்கள் கலந்து கொண்ட போதிலும், சிறிது நேரத்தில் மின்வாரிய இயக்குனர்களை அனுப்பி விட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் கலந்து பேசி, உடன்குடி மின்நிலையக் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை ரத்து செய்து விட்டு, புதிதாக டெண்டர் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு இவ்வளவு மாதங்கள் முடிவெடுக்காமல் கால தாமதம் ஏன் செய்தார்கள்? உடனடியாக அறிவித்திருக்கலாம் அல்லவா? உடன்குடி அனல் மின் நிலையக் கட்டுமானப்பணிகளை, 2013–ல்தொடங்கி, 2017–ல் முடிக்க, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதனால் 1,320 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. தற்போது அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தால், புதிதாக டெண்டர் விட்டு, அது யாருக்கு என்பது முடிவாகி, கட்டுமானப்பணிகள் முடிவுற்று மின்சாரம் கிடைக்க மேலும் நான்காண்டுகள் தாமதமாகும்.

திட்டச்செலவும் தற்போது 10,121 கோடி ரூபாயிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக அ.தி.மு.க. அரசின் கடும் தாமதம் காரணமாக ஏற்பட்டுள்ளது. 2013–ம் ஆண்டில் டெண்டர் கோரப்பட்டது. அது எப்போது திறக்கப்பட்டது? திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாதங்களாகின்றன? ஏன் இந்தத்தாமதம்? தாமதத்திற்கு யார் பொறுப்பு? இந்தத்தாமதத்திற்கு மின்துறை அமைச்சரும், சில குறிப்பிட்ட அதிகாரிகளும் தான் காரணம் என்பது உண்மையா? தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்துமின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் ஆர்வம்தான் தாமதத்திற்கும், இறுதியில் ரத்து செய்யப்பட்டதற்கும் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா?

இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு கோடி ரூபாய்? இந்த இழப்புக்கு யார் காரணம்? மின்சார வாரியமா? தலைமைச்செயலக உயர் அதிகாரிகளா? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத்திட்டத்தை முறைப்படிநிறைவேற்றியிருந்தால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது அல்லவா? அவ்வாறு மின் பற்றாக்குறை ஏற்பட்டதால்தானே, வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்க வேண்டியநிலை ஏற்பட்டது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு உண்மை விளக்கம் என்ன என்பது சொல்லப்படாமலேயே உள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க அரசு சார்பில்,  ஒரு யூனிட் ரூ.5.50 முதல் ரூ.15.14 வரை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். மேலும் காற்றாலை மின்சாரத்தின் விலை குறைவு என்பதால் இக்காலத்தில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தி விட்டு, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த செலவில் அதிக மின்சாரத்தைப் பெற முடியும். ஆனால், காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்தால் உடனடி பணப் பயன் கிடைக்காது என்பதால், காற்றாலை மின்சாரத்தைக்  கொள்முதல் செய்வதற்கு பதிலாக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்தே மின்சாரம் வாங்குவதற்கு  தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றும், பெயரளவில் மட்டுமே காற்றாலை மின்சாரம் வாங்கப்படுகிறது என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

அண்மையில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா, தனது பிரச்சார உரையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 4992 மெகாவாட்டுக்கான மின் திட்டங்கள் புதிதாக செயல் படுத்தப்பட்டுள்ளன என்று தடாலடியாகக் கூறியிருந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தின் மின் உற்பத்தி ஏறுமுகமாக இருக்கிறது என்றும், அதனால் தமிழகத்தின் மின் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் அந்த பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசியதை கடுமையாக விமர்சித்த திமுக,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திட்டமிட்டே தமிழக அரசாலும், முதல்வர் ஜெயலலிதாவாலும் தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டின.

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில்,  2,500 மெகாவாட் அளவுக்கு, புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டதற்கு, திமுக தலைவர் கருணாநிதி," இந்த புதிய மின் உற்பத்தி நிறுவு திறனுக்கான மின் திட்டங்கள், எங்கெங்கே, எந்தெந்த தேதியில், இவர்களுடைய ஆட்சியினால் துவக்கப்பட்டன என விளக்கிடத் தயாரா?

திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களிலிருந்துதான், இந்த 2,500 மெகாவாட் மின்சாரம், தற்போது கிடைக்க துவங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதாவால், புதியதாக துவங்கப் போவதாக, அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் ஏதும், இதுவரை துவங்கப்படவும் இல்லை; அதிலிருந்து, தற்போது, மின்சாரம் கிடைக்கவும் இல்லை" என்று கடுமையாக பதிலளித்து இருந்தார்.

அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறை சென்றார். தொடர்ந்து தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பால், மின் கட்டண உயர்வை அறிவித்து சாமானிய மக்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரையில் அதிர்ச்சியூட்டினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம்  தேதி பால் விலை, லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. அதே போல அடுத்து  டிசம்பர் மாதத்தில், தமிழகம் முழுவதும் அனைத்து வகையான மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

இந்த மின் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.  இல்லாத மின்சாரத்திற்கு கட்டண உயர்வா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனால் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்ட பிறகும் இந்த மின் கட்டண உயர்வில் மாற்றம் வரவில்லை.

தமிழகத்தில் காற்றாலைகள் மூலம்  தினமும் 25 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு யூனிட் ரூ.3.20 என்ற விலையில் கிடைக்கும் நிலையில், ஒரு யூனிட் ரூ. 5.50 என்ற விலையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் மின்சார வாரியத்திற்கு ரூ.60 லட்சம் வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காற்றாலை மின்சாரம் கிடைக்கும் 4 மாதங்களில்  தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.720 கோடி இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 4992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக  உற்பத்தி செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட புதிய மின்திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தப்படவில்லை என்பதே யதார்த்தம்.

பழைய திட்டங்கள் மூலமாக மட்டுமே இப்போது கூடுதல் மின்சாரம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய மின்திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூறித்தான் தனியார் மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.  இந்த உண்மை மறைக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில்தான் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க, பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம்,  தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்ட கடந்த 4 ஆம் தேதியன்றே, அவரது  முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதிலும் அரசியல் நலன் ஒளிந்துள்ளது என்று திமுகவும், பாமகவும் குற்றச்சாற்று தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே நாட்டில் அதிக வெப்பம் நிலவும் மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ள இந்த நிறுவனம், தற்போது தமிழகத்தில் அதிகபட்ச வெப்பம் நிலவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது உற்பத்தி மையத்தை நிறுவ முடிவெடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியில்,  5,000 ஏக்கர் நிலப்பரப்பில் மின் உற்பத்தி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ள அதானி நிறுவனம், ஒரு மெகா வாட்டுக்கு ரூ.7 கோடி வீதம் 200 மெகாவாட்டுக்கு ரூ.1,400 கோடியை முதலீடு செய்வது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து 1,000 மெகாவாட் வரை உற்பத்தி திறனை மேம்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவையான அளவு நிலம் கிடைத்ததும் அடுத்த சில மாதங்களில் பணிகளை நிறுவனம் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக எரிசக்தித்துறை வட்டாரத்தில்," தற்போதைய நிலவரப்படி சூரிய மின்னுற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் 7 ஆம் இடத்தில் உள்ளது. தற்போது வெல்ஸ்பென் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் சூரிய மின் உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்துள்ளன. வரும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில், சூரிய மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் மேலும் பல நிறுவனங்கள் முதலீடு செய்யும் " என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.  

இதனையடுத்து ராமநாதபுரம் தவிர தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் நிறுவப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இவற்றின் மூலம் தமிழகத்தின் மின்தேவையை நிறைவு செய்ய இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.

இந்தப் புதிய திட்டம் தமிழகத்திற்கு வந்ததன் பின்னணியில் பாஜக -  அதிமுக இடையேயான அரசியல் திட்டம் ஒளிந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பிருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில்," சூரிய மின் உற்பத்தி  நிலையம் ஒன்று 1,400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசுடன் குஜராத் அதானி குழுமம்  ஒப்பந்தம்  செய்து கொண்டிருக்கிறதாமே என்ற கேள்விக்கு, கடந்த 16-6-2015 அன்று நான் பதில் அளிக்கும்போது, “பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பரும், மிகப்பெரிய செல்வந்தருமான அதானிக்குச் சொந்தமான குழுமம், தமிழகத்தில் 1,400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது.

இதையும் ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்துவதற்கான பேச்சு வார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கின் மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் விடுதலைக்கும், அதானியின் இந்த சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது!“ என்று பதில் அளித்திருந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.சூரிய மின் உற்பத்தி பல்வேறு சர்ச்சைகளும் உருவாக்கியிருக்கிறது.

ஆக மொத்தத்தில் தமிழக அரசு போட்டுள்ள இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தினால்  ஆதாயம் அடையப்போவது தமிழக மக்களா அல்லது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல் அதானி  குழுமமும், அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தவர்களுமா என்பதற்கு  காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close