Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வியாபம்' ஊழல் வழக்கும்... தொடரும் மர்ம மரணங்களும்!

46 பேரின் உயிரைப் பலிவாங்கியுள்ள 'வியாபம்' ஊழல் மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு தழுவிய அளவில்  அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

 'வியாபம்' என்பது மத்தியப் பிரதேச மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு ஆகும்.இதில், அரசியல் செல்வாக்கும் பண பலமும் அதிகார துஷ்பிரயோகங்களும் நுழைந்து ஆடிய ஆட்டத்தின் விளைவு, இன்றைக்கு அங்கு ஆளும் பாஜக அரசுக்குப் பெரும் தலைக்குனிவை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத இந்தியாவின் கவனமும் ம.பி.நோக்கி திரும்பியுள்ளது.

ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான், ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பலர் மீதும் இந்த ஊழல் தொடர்பாக குற்றச்சாற்றுகள் சராமாரியாகச் சுமத்தப்படுகின்றன. பதவி நிலை, சேர விரும்பும் மருத்துவப் படிப்பு போன்றவற்றைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 1.47 லட்சம் பேர் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன. இதனால் இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவில், அதாவது லட்சக்கணக்கில் அரசுப் பணியிடங்களில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது ம.பி.யில்தான் என்று கூறப்படுகிறது.

இந்த மாபெரும் முறைகேட்டில் இன்னொரு அதிர்ச்சித் திருப்பமாக  'வியாபம்' ஊழல் குறித்த விசாரணைக்கு உதவி வந்த மருத்துவக் கல்லூரி `டீன்` மர்மமான முறையில் டெல்லி ஹோட்டல் ஒன்றில் நேற்று காலை (ஞாயிற்றுக்கிழமை) இறந்து கிடந்தார். 

அதற்கு ஒரு நாள் முன்னதாகத்தான் வியாபம் ஊழல் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்ந்த டெல்லி தனியார் சேனல் செய்தியாளர் அக்‌ஷய் சிங் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இவ்விவகாரத்தில் மர்ம மரணம் அடைந்த மாணவி நம்ருதா தாமோரின் பெற்றோரிடம் 2 நாட்களுக்கு முன்னர் பேட்டி எடுத்திருந்தார். இந்நிலையில் அக்‌ஷய் சிங்கின் மர்ம சாவு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. கூடவே செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர் இறந்துள்ளது ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதோடு 'வியாபம்' ஊழல் விவகாரம் பலிகொண்ட மனித உயிர்களின் எண்ணிக்கை 46 உயர்ந்துள்ளது. 
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும்  வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சவுகான் மறுப்பு தெரிவிப்பது, இவ்விவகாரத்தில் பெரிய அளவிலான அரசியல் நடப்பதை உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து முதல்வர் சவுகான் கூறும்போது, "வியாபம் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது நான் எப்படி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடியும். நீதியின் முன் அனைவரும் தலை வணங்கியே தீர வேண்டும். நீதிக்கு கட்டுப்பட்டே எனது அரசு செயல்படுகிறது.

மேலும் இந்த வழக்கில் மத்தியப் பிரதேசம், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், விசாரணை அமைப்பை மாற்றும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.

எனவே இந்த வழக்கை என்றைக்கு உயர் நீதிமன்றம் தனது மேற்பார்வையின் கீழ் விசாரிக்க முற்பட்டதோ அன்றைய தினமே ம.பி. அரசு விசாரணையில் எவ்வித குறுக்கீடும் இன்றி விலகிக் கொண்டுள்ளது. நாட்டில், வேறு எந்த ஒரு ஊழல் வழக்கும் இந்த அளவுக்கு விசாரிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும்,  செய்தியாளர் அக்‌ஷய் சிங்  மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில், அவரது உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் சோதனைக்கு அனுப்ப, சிவராஜ் சவுகான் ஒப்புக் கொண்டுள்ளார்.

அக்‌ஷய் சிங் இந்தியா டுடே பத்திரிகை குழுமத்தை சேர்ந்தவர். அவரது மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையைப் பெற விரும்புவதாக அப்பத்திரிகை நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ம.பி. முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு சவுகான் கடிதமும் எழுதியுள்ளார்.

'வியாபம்' ஊழல் வழக்கில் எதிர்க்கட்சிகள் மூலமாக மட்டுமில்லாமல் முதல்வர் சவுகானின் கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் ம.பி. மாநில அரசியலில் அனல் பறக்கிறது. சிவ்ராஜ் சிங் சவுகானின் போட்டியாளராக கருதப்படும் கைலாஷ் விஜய்வர்கியா, போபாலில் பிரம்மாண்ட பேரணியை மேற்கொண்டார். இந்தப் பேரணி நடத்தியதற்குதான் பாஜக தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டதே காரணம் என்று அவர் கூறினாலும், சிவ்ராஜ் சவுகானுக்கு தனது பலத்தை காட்டவே கைலாஷ் இந்தப் பேரணியை நடத்திக் காட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏரியில் பிணமாக கிடந்தார். அனாமிகா குஷ்வாகா என்ற அந்த பயிற்சி சப் இன்ஸ்பெக்டர், 'வியாபம்' வாரியத்தேர்வு மூலம் போலீஸ் வேலைக்கு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் மர்ம மரணங்கள் மத்தியப்பிரதேச அரசை உலுக்கி எடுக்கிறது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளதால், 'வியாபம்' முறைகேடு இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

'வியாபம்' மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவிக்கையில், " வியாபம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை தேவையில்லை. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நியாயமாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.மேலும் உச்ச நீதி மன்ற விசாரணைக்கு உத்தரவிட முடியாது" என்றார்.


இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்க வேண்டும் என்றும், அவரிடம் இவ்வழக்கு தொடர்பாக வாக்குமூலம் பெறவேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர்கள் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான மற்ற மனுக்களுடன் இந்த மனுவையும் சேர்த்து,  9 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தெரிவித்துள்ளது.

இனியாவது மர்ம மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close