Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வியாபம்' ஊழல்... மர்ம மரணங்கள்... முடிச்சுகளை அவிழ்க்குமா சிபிஐ விசாரணை?

மது நாட்டில் லஞ்ச ஊழலுக்கு மட்டும் குறைவே இல்லை போலும்.. நாளுக்கு நாள் லஞ்ச புகார்கள், புதிய வடிவங்களை எடுத்துக் கொண்டு புற்றீசல்போல கிளம்பிக் கொண்டு இருக்கின்றன. முத்திரைத்தாள் மோசடி, 2ஜி முறைகேடு வரிசையில் தற்போது நாட்டையே உலுக்கிக் கொண்டு இருப்பது, ‘வியாபம்’ மெகா ஊழல்.  

நாட்டில் நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் எத்தனையோ ஊழல்களை போலத்தான் இந்த ‘வியாபம்’ முறைகேடு என்றுதான் மக்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் சிக்கிய பலரும் மர்மமான முறையில் மரணம் அடைவதால், திடுக்கிடும் திகில் கதை போல இந்த ஊழல் விவகாரம் சர்ச்சைக்கு உரியதாக மாறியிருக்கிறது. இந்த மோசடியில் ஆளும்கட்சியினர், அரசியல் பிரபலங்கள் என பலரது பெயரும் சிக்கி இருப்பதால் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது இந்த விவகாரம்.
 
‘வியாபம்’ முறைகேடும் பின்னணியும்...

அரசுப்பணிக்கு தகுதி வாய்ந்த ஆட்களை தேர்வு செய்யும் பணியை தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி செய்து வருவது போல, மத்தியப்பிரதேச மாநிலத்தில் ‘வியாபம்’ என்ற அமைப்பு செய்கிறது. மருத்துவம், பொறியியல், ஆசிரியர் பயிற்சி, எம்.சி.ஏ போன்ற தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகளை நடந்துவது மட்டும் அல்லாமல், தொழிற்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமங்களுக்கான தேர்வுகளையும் இந்த அமைப்பே நடத்துகிறது.

அது என்ன 'வியாபம்'..? தொழில்முறை தேர்வு வாரியம் என்பதை ஹிந்தியில் ‘மத்தியப்பிரதேச வியாவ் சாயிக் பரீக் ஷா மண்டல்’ என அழைக்கிறார்கள். இதன் சுருக்கமே ‘வியாபம்’. இந்த அமைப்பு நடத்திய தேர்வுகளில் பல்வேறு குளறுபடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக மத்தியப்பிரதேசத்தில் நடந்த இந்த ஊழலை வெளி உலகுக்கு முதலில் கொண்டு வந்தவர், அசீஷ் சதுர்வேதி என்கிற சமூக ஆர்வலர். 2003 ல் அவர் 'வியாபம்' ஊழல் தொடர்பான பல ஆவணங்களை தோண்டி எடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

தொழிற்கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்று இருப்பது அம்பலமானது. பல இடங்களில் நுழைவுத் தேர்வுகளை மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்கள் எழுதினர். இன்னும் பலருக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் திருத்தப்பட்டு, மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது தவிர, அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திலும் மோசடிகள் செய்யப்பட்டன.

அரசியல்வாதிகள் பணம் வாங்கிக் கொண்டு ‘வியாபம்’ மூலமாக ஏராளமான பணி நியமனங்களை செய்தனர். அதிகாரிகளும் தங்களால் இயன்ற அளவுக்கு முறைகேடுகளை செய்தனர். மத்திய பிரதேசத்தில் ‘வியாபம்’ அமைப்பில் குளறுபடிகளை செய்து கொடுக்கவென்றே ஏகப்பட்ட ஏஜெண்டுகள் உருவானார்கள். அவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதே நிலையாக இருந்தது. இந்தூரை சேர்ந்த அசீஷ் திரிவேதி இந்த விவகாரத்தை கிளறியதும் ஆடிப்போனார்கள் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்.

2003 ஆம் ஆண்டு முதல் முறைகேடாக கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு பரிந்துரை செய்தவர்கள் என பெரிய பட்டியலையே அவர் தயாரித்தார். அத்துடன், முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள், அவர்களுக்கும் ஏஜெண்டுகளுக்கும் இடையே நடந்த எஸ்.எம்.எஸ். தகவல் பரிமாற்றங்கள் போன்ற முக்கிய தகவல்களையும் சேகரித்தார். இந்த அதிர்ச்சி பட்டியலை மீடியா முன்பாக வெளியிட்டதும் அதிர்ந்துபோனது, மத்தியபிரதேச அரசாங்கம்.

ஆளுநர், முதல்வருக்கு தொடர்பு?

'வியாபம்'  ஊழல் குற்றச்சாட்டு வெளிக்கிளம்பியதும் அதிர்ச்சி அடைந்த மத்தியப்பிரதேச அரசாங்கம், உடனடியாக இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவிடம் சமூக ஆர்வலரான ஆசிஷ் திரிவேதி, தன்னிடம் இருந்த ஆவணங்களை சமர்ப்பித்தார். அவர் கொடுத்த ஆவணத்தில் இருந்த லிஸ்டில் மத்தியபிரதேச முதல்வரான சிவராஜ்சிங் சவுகான் பெயரும் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சிறப்பு விசாரணைக் குழுவினர் அந்த ஆவணத்தை திருத்தியதாகவும், அதில் இருந்த முதல்வரின் பெயரையும், அவரது மனைவி சாதனாசிங் பெயரையும் நீக்கி விட்டு புதிய ஆவணத்தை தயாரித்ததாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பு புகாரை கிளப்பினர். இதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் நியமித்த கண்காணிப்புக் குழுவிடம் காங்கிரஸ் கட்சியினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. உடனடியாக இதில் தலையிட்ட மத்தியபிரதேச உயர்நீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமனம் செய்தது. அதனால், இப்போது வரையிலும் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் தவறு செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என இதுவரை 1200 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் இன்னும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விடவும் கூடுதல் அதிர்ச்சி.. இந்த முறைகேட்டில் மத்தியபிரதேச மாநில ஆளுநரான ராம் நரேஷ் யாதவ் பெயர் இடம் பெற்றது. சிறப்பு விசாரணைக்குழுவானது ஆளுநர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், ‘ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் மீது வழக்கு தொடர சட்டத்தில் வழியில்லை’ என்று தெரிவித்த உயர் நீதிமன்றம், அவர் மீதான புகாரை தள்ளுபடி செய்தது.

இருப்பினும், நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து டாக்டர் சஞ்சய் சுக்லா மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். அதில், " ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் மீது 361-வது சட்டவிதியின் படி வழக்கு தொடர முடியாது என நீதிமன்றம் தெரிவித்து இருப்பது சரியல்ல. ஆளுநர் பொறுப்பு தொடர்பாகவோ அவரது அலுவலகம் தொடர்பாகவோ இங்கே வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம். ஆளுநர் என்பவர் சாதாரணமான நபர் அல்ல. நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் போன்றவற்றை செய்யக் கூடியவர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கக் கூடியவர். குடியரசுத் தலைவரிடம் சில பரிந்துரைகளை செய்யக்கூடியவர். அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருந்த போதிலும் அவர் மீது குற்றப்புகார் இருப்பதால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஆளுநர் மீது குற்றப்பிரிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளனர். இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை (9 ஆம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

மர்ம மரணங்கள்!

'வியாபம்' ஊழல் தொடர்பாக 2003 ல் விசாரணை நடத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் வழக்கு விசாரணையில் பலர் அப்ரூவர்களாக மாறினார்கள். மேலும் சிலர் பல முக்கிய தகவல்களை விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர். இப்படி முழுமையான குழுவையும் பிடிக்க விசாரணைக்குழு தீவிரம் காட்டத் தொடங்கியதும் உயிர்ப்பலிகள் ஏற்படத் தொடங்கின.

விசாரணைக்கு ஒத்துழைத்தவர்கள், சாட்சிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என பலர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த விசாரணை தொடங்கியதில் இருந்து இதுவரையிலும் 46 பேர் உயிர் இழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 25 பேர் மரணம் மர்மம் நிறைந்ததாகவும் சந்தேகத்துக்கு உரியதாகவும் இருப்பதால், இந்த வழக்கு வெளிவரக் காரணமாக இருந்த ஆசீஷ் திரிவேதி முதல், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த பலரும் தங்களுக்கு எப்போது என்னவாகுமோ என்கிற பதற்றத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

'வியாபம்'  ஊழல் வழக்கில், மத்தியப்பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணி நியமனத்தில் 10 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு 'வியாபம்' தேர்வில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முறைகேடு செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதல் சாட்சியம் குறித்த தகவல் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்தது. அடுத்த சில நாட்களில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் லக்னோவில் உள்ள வீட்டில் கிடந்தது. அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பது இதுவரையிலும் வெளிவராத மர்மமாகவே இருக்கிறது.

இது தவிர, வியாபம் முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்ட ஏஜெண்ட் நரேந்தர்சிங் தோமர் என்பவர் இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். வியாபம் தேர்வில் பங்கேற்ற சிலருக்கு ஆள் மாறாட்டம் செய்ய ஏற்பாடு செய்ததாக அவர் ஒப்புக் கொண்டு இருந்தார். தேர்வு எழுதிய ஒவ்வொரு நபருக்கும் வேறு ஆட்களை ஏற்பாடு செய்ய 4 லட்சம் முதல் 6 லட்சம் வரை கொடுத்ததாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து இருந்தார். ஆள் மாறாட்டம் செய்து கொடுத்து, அரசு பதவிகளை பெற்றவர்களின் பட்டியலையும், கல்லூரிகளில் இடம் பெற்றவர்களின் பட்டியலையும் அவர் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக அவர் சிறைக்கு உள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

செய்தியாளர் பலியான பரிதாபம்!

இதனைத் தொடர்ந்து இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நம்ரதா தாமோர் என்ற பெண் கடந்த 2012 ல் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்பம் இப்போது இருக்கும் நிலை பற்றியும், 'வியாபம்' ஊழல் தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஏதாவது தகவல் தர விரும்புகிறார்களா என்பது பற்றியும் விசாரிக்க டிவி டுடே சேனலின் செய்தியாளர் அக் ஷய் சிங் விரும்பினார். இதற்காக நம்ரதா தாமோரின் தந்தை மெகதாப்சிங் தாமோரை சந்தித்தார். அவரிடம் பேட்டி எடுத்த பின்னர் சில முக்கிய ஆவணங்களை அவர் கொடுத்தார். அவற்றை ஜெராக்ஸ் எடுப்பதற்காக செய்தியாளருடன் வந்திருந்த கேமராமேன்கள் சென்றனர்.

அக் ஷய்சிங் மட்டும் தனியாக அங்கே இருந்தார். சிறிது நேரத்தில் அவரது வாயில் இருந்து நுரை வந்ததுடன் மயங்கிச் சரிந்தார். இதனால் அச்சமடைந்த மெகதாப்சிங் தாமோரும் அவரது உறவினர்களுடம் உடனடியாக அந்த செய்தியாளரை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அங்கிருந்து குஜராத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்களோ அவர் ஏற்கனெவே இறந்து விட்டார் என தெரிவித்து விட்டதால் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

டாக்டரின் சந்தேக மரணத்தால் பரபரப்பு!

இது ஒருபுறமிருக்க மருத்துவக் கல்லூரிகளில் 'வியாபம்' முறைகேடு மூலமாக சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக, விரிவுரையாளர்களாக நியமனம் பெற்றவர்கள் குறித்த விசாரணைக்குழுவுக்கு உறுதுணையாக இருந்து, மோசடிகள் குறித்த தகவல்களை தந்து உதவியவர், டாக்டர் அருண் சர்மா. இவர் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியின் டீன். இந்திய மருத்துவ கவுன்சில் குழுவில் இடம்பெற்று இருந்த இவர், திரிபுரா மாநிலத்துக்கு செல்வதற்காக டெல்லி வந்திருந்தார்.

கடந்த 4 ம் தேதி டெல்லி வந்த அவர், விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார். மறுநாள் அதிகாலை அவர் தன்னை எழுப்பி விடுமாறு தெரிவித்ததால் ஹோட்டல் ஊழியர்கள் இண்டர்காமில் தொடர்பு கொண்டனர். ஆனால், போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். பின்னர் அறையை திறந்து பார்த்த போது அங்கே அவர் பிணமாக கிடந்தார். அவரது மரணத்துக்கான் காரணம், தெரியவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்பு 'வியாபம்' வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து கொடுத்த அதே மருத்துவமனையின் அப்போதைய டீன் டி.கே.சாக்லே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் 90 சதவிகித தீக்காயங்கள் இருந்தன. ஓராண்டுக்கு பின்னர் மற்றொரு மருத்துவர் மரணம் அடைந்ததால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

ஏரியில் மிதந்த சப் - இன்ஸ்பெக்டர் உடல்!  

இந்த பரபரப்புக்கு மத்தியில் வியாபம் ஊழலில் தொடர்புடைய மற்றொரு நபரும் ஜூலை 6 ஆம் தேதி மர்மமாக மரணம் அடைந்துள்ளார். மொரீனா மாவட்டத்தை சேர்ந்த அனாமிகா குஷ்வாகா என்ற பெண் சப் -இன்ஸ்பெக்டரின் உடல் அங்குள்ள ஏரியில் மிதந்தது. சாகர் பயிற்சி கல்லூரியில் சப்.இன்ஸ்பெக்டர் பயிற்சி எடுத்து வந்த அவர், 'வியாபம்' ஊழல் மூலமாக தேர்வானவர் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதனால் அவரது மரணம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது பற்றி சாகர் பயிற்சி அகாடமியின் ஏ.எஸ்.பி-யான சவீதா சோகன் கூறுகையில், " கடந்த சில நாட்களாக அனாமிகா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்.  கடந்த ஆண்டு தேர்வு எழுதி, தேர்வு செய்யப்பட்டவுடன் பிப்ரவரியில் பயிற்சிக்கு வந்தார். அவரது மரணம் சந்தேகமாகவே இருக்கிறது" என்றார். ஆனால், சாகர் நகர காவல்துறை கண்காணிப்பாளரான கௌதம் சோலங்கி, ‘‘அனாமிகாவுக்கும் 'வியாபம்' ஊழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 'வியாபம்' முறைகேடு மூலமாக அவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது தவறு" என மறுத்துள்ளார்.

சர்ச்சை மரணங்கள்..திகிலில் மக்கள்!

இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்து சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், நடந்த மரணங்களால் மக்கள் திகிலில் உள்ளனர். கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடக்கும் சந்தேக மரணங்கள் இந்த விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்து உள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் இந்த விவகாரத்தை குறித்தே விவாதிக்கிறார்கள். இதனை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன.

காங்கிரஸ், சி.பி.ஐ, திரிணாமுல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும் இந்த வழக்கை சி.பி.ஐ. -க்கு மாற்ற வேண்டும் என குரல் கொடுத்தன. ஆனால், அக்கோரிக்கையை முதலில் ஏற்க மறுத்த முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், "வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறது. உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடக்கிறது. அதனால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை கேட்போம்" என்றார்.

சிபிஐ-யிடம் செல்லும் விசாரணை

இந்நிலையில் நெருக்கடி அதிகரிக்கவும், 'வியாபம்' ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சவுகான். இது இவ்விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

திகில் கதைக்கு நிகரான இந்த விவகாரத்தில் சிபிஐ-யாவது நடந்த உண்மைகளையும், குற்றவாளிகள் யார் என்பதையும் கண்டறிந்து அம்பலப்படுத்த வேண்டும்.

 -ஆண்டனிராஜ்  
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ