Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதானிக்கு வெண்ணெய்... எங்களுக்கு சுண்ணாம்பா? - கொந்தளிக்கும் காற்றாலை உற்பத்தியாளர்கள்!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதானி குழுமம் மற்றும் தமிழக அரசு இடையே ஏற்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி ஒப்பந்தம். அதானி குழுமத்துடன் மின் ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்? யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.7.01  என எப்படி நிர்ணயிக்கப்பட்டது என கேள்விகள் பல எழுந்துள்ள நிலையில், காற்றாலை மின் உற்பத்தியாளர்களும், அரசின் இந்த ஒப்பந்தத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலக அளவில் அதிக காற்றாலை நிறுவியதில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 20 ஆயிரம்  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அளவுக்கு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 35 சதவீதத்துக்கும் மேல், அதாவது 7 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் காற்றாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியான வளர்ச்சி பெற்று இப்போது இந்த இடத்தை தமிழகம் எட்டியுள்ளது.

இந்தியாவில் அரசு சொந்தமாகக் காற்றாலை அமைக்கவில்லை. முதன் முதலில் 1980 களில் காற்றாலைகளை தனியார் நிறுவனங்கள் அமைத்தன. தமிழகத்தில் யாரெல்லாம் காற்றாலை நிறுவுகிறீர்களோ, அந்த மின்சாரம் அவர்களது தொழிற்சாலைகளுக்கு கொண்டுவந்து தரப்படும், மின்சாரத்தை மொத்தமாக பெற்று, ஆண்டுமுழுவதும் வழங்கும் பேங்கிங் வசதியும் செய்து தரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவித்தனர். இதை நம்பியே தமிழகத்தில் காற்றாலைகள் பரவலாயின. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் காற்றாலைகள் அதிகளவில் நிறுவப்பட்டன.

இதில் பெரும்பாலானவை, இங்குள்ள தொழில் முனைவோரால் நிறுவப்பட்டவை. தங்கள் தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு மின்சாரம் தேவையோ. அந்த அளவுக்கு காற்றாலைகளை தொழில் முனைவோர்கள் நிறுவினர். முக்கியமாக டெக்ஸ்டைல் மில்கள், பவுண்டரிகள் போன்ற தொழில் முனைவோர்கள் அதிகளவில் காற்றாலைகளை நிறுவி, தங்களுக்கு தேவையான மின்சாரத்தை காற்றாலை மூலம் பெற்று பயன்படுத்தி வந்தனர். மீதமுள்ளவற்றை மின்வாரியம் மூலம் விற்பனை செய்து வந்தனர்.

காற்றாலை மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.3.51 காசுகள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தவும், அதற்கான தொகையை முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என காற்றாலை உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், தற்போது அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் 1 யூனிட் மின்சாரத்தை ரூ.7.01 விலை கொடுத்து 25 வருடத்திற்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது காற்றாலை உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக காற்றாலை உற்பத்தியாளர்கள் சிலரிடம் பேசினோம். "எங்களை காற்றாலை அமைக்கச்சொல்லி எங்களிடம் இருந்து மின்சாரத்தை பெற்று வந்த தமிழக அரசும், மின்வாரியமும் கடந்த 4 ஆண்டுகளில் சரிவர மின்சாரம் பெறாமல் இருந்தது. 2012ம் ஆண்டு துவங்கி இரு ஆண்டுகளில் காற்று காலங்களில் கூட காற்றாலைகளை இயக்க செய்யாமல் நிறுத்தி வைத்தது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத்தில் இருந்து பல மணி நேரம் வரை காற்றாலைகள்  மின் உற்பத்தியில் இருந்து கழட்டி விடப்பட்டது.
எங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்காமல் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கினர். யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற விலையில் காற்றாலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.4.91. கொண்டு வரும் கட்டணம் ரூ.1.20 என ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.11க்கு பெறப்பட்டது. நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தற்போது ஓரளவு பரவாயில்லை. இந்நிலையில் அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காற்று காலமான மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான  5 மாதங்களில், காற்றாலைகள் மூலம் மொத்தம், ஏறத்தாழ 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதில் 60 சதவீத மின்சாரத்தை மட்டுமே அரசு எடுத்துக்கொள்கிறது. எங்களிடம் ரூ.3.51 காசுகளுக்கு மின்சாரம் வாங்க மறுத்து இப்போது அதானி குழுமத்துடன் மட்டும் ரூ.7.01க்கு பெறுவது எப்படி?" என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கஸ்தூரி ரங்கையனிடம் பேசினோம். "சூரிய ஒளி மின் சக்தி நிலையம் அமைத்து, 648 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாங்கள் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்கிறோம். ஆனால் அதானி குழுமத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 கொடுக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்தளவு கொடுப்பதில்லை. அதில் பாதிதான் கொடுக்கிறார்கள். மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் முடிவெடுத்தபடி இதை செய்திருக்கிறார்கள். ஆனால் இதில் நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை. இப்போது மின்சாரத்தை முழுமையாக எடுக்கவில்லை என்றாலும், முன்னரை விட நிலைமை பரவாயில்லை," என்றார்.
 
ச.ஜெ.ரவி

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close