Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் ஓடும் மதுபான ஆறு...பெருகும் விபரீதங்கள்!

ந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மதுபான விற்பனை கனஜோராக அரசு மேற்பார்வையில் நடந்து வருகிறது.தெருவுக்கு தெரு... மூலைக்கு மூலை...  டாஸ்மாக் கடைகள் கோடிகளில் கல்லா கட்டி, குடி மக்களை  நிரந்தர 'குடி' மக்களாக மாற்றியுள்ளது தமிழக அரசு என்றால் அது பொய்யில்லை.

வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் பேதம் இல்லாமல், உறவு வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் குடிக்கிறார்கள்; அல்லது குடிப்பவர்களோடு வசிக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை?

கல்யாணம், காதுகுத்து நிகழ்வுகள், பக்தி தழைக்கும் கோவில் திருவிழாக்கள், உறவினர்களின் மரணச் சடங்கோ என்று எந்தவித நிகழ்ச்சிகளாய் இருந்தாலும் மது முக்கிய இடத்தைப் பிடித்து, தமிழக மக்களின் வாழ்வைக் குடித்து வருகிறது. டாஸ்மாக் மதுவகைகள் குடும்பங்களுக்குள்ளேயே ஆறாக ஓடுகிறது. 

 

   
வயது வித்தியாசமில்லாமல் எல்லோருடைய குரல் வளையையும் மது அரக்கனின் கோரக் கரங்கள் நெரிக்க ஆரம்பித்து விட்டது. மூன்று வயது குழந்தைக்கு மதுவை புகட்டி பார்க்கும் அளவிற்கு மது நோயாளிகள் சைக்கோக்களாக மாறி வருகிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அனைத்து வகையான குற்ற செயல்களுக்கும் பின்புலமாக மதுவே பிரதானமாக உள்ளது.

சம்பவம் 1 :
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு  மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து, அதை அந்தச் சிறுவனின் தாய்மாமன் உள்ளிட்ட 5 வாலிபர்கள் வேடிக்கை பார்த்தது மட்டுமில்லாமல்,  அதை பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துகொண்டார்கள். இதுதொடர்பாக கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் சோழங்குப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை, பிரேம்குமார், சிறுவனின் தாய்மாமன் முருகன், மணிகண்டன், ராஜாராம் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.அந்த அதிர்ச்சி மறைவதற்குள் தென்மாவட்டம் ஒன்றிலும் இதே பாணியில் சிறுவன் ஒருவனை குடிக்க வைத்து வேடிக்கை பார்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் இன்னும் பிடிபடவில்லை.

சம்பவம் 2 :
கோவை துடியலூர் பகுதியில் கடந்த 7ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் மது போதையில் தள்ளாடியடி வந்துள்ளார். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி, பள்ளிக்கு செல்லாமல் பாய் பிரண்ட் ஏமாற்றி விட்டான் என்று சொல்லி மற்ற மாணவிகளுடன் சேர்ந்து  மது அருந்தியுள்ளார். தெரிந்த  மாணவர்தான் சரக்கு வாங்கி கொடுத்துள்ளார். போதையில் நிலைதடுமாறி வந்த அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்தபோது வாய்க்கு வந்தபடி அவர்களை வசை பாடியுள்ளார்.  தகவல் கிடைத்து  போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இதைக் கண்ட  மாணவியின் பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.

சம்பவம் 3 :
கடந்த வருடம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது பிளஸ் டூ  படிக்கும் ஆறு மாணவர்கள், வகுப்பறையில் அமர்ந்து மது குடித்து விட்டு, ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டார்கள் அங்கு வேலை செய்யும் ஆசிரியை இவர்களால் பாதிக்கப்பட்டார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.  மறுநாள் பள்ளியின் தலைமை ஆசிரியர்,  அவர்கள் ஆறு பேரையும் பள்ளியில் இருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்பினார்.

சம்பவம் 4: கடந்த ஜனவரி மாதம்,  ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 6 பேர்,  பள்ளிக்கு வந்ததும் வகுப்புக்குச் செல்லாமல், விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். மாணவர்களின் இந்த விபரீத செயலை, அங்கு தற்செயலாக வந்த மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், அவர்களோ பாட்டிலை உடைத்து சீனியர் மாணவர்களை மிரட்டி உள்ளனர்.  இது தெரிந்து ஆசிரியர்கள் வருவதற்குள் போதை ஏறிய மாணவர்கள் புத்தகப் பைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். அதில் ஒரு மாணவன் ஓட முடியாமல்  போதையில் மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் அவனை தூக்கிச்சென்றனர். பள்ளிக்கு பதற்றத்துடன் வந்த பெற்றோர், மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

ஊடகங்களில் தொடர்ந்து இப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் சில சாம்பிள்கள்தான். ஒட்டு மொத்த தமிழகமும் மதுவால் சீரழிந்து கொண்டிருக்கிறது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவன் ஒரு மனித வெடிகுண்டுக்கு சமம் என்று நீதிமன்றமே கூறியுள்ளது.

முன்பெல்லாம் பெரியவர்களே மறைவாக சென்று யாருக்கும் தெரியாமல் குடிப்பார்கள். இப்போது டீன் ஏஜ் பையன்களே வெளிப்படையாகக் குடிக்கிறார்கள். கிராமம், நகரம், மாநகரம் என்று லெவலுக்கு தகுந்தாற் போல் குடி கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. பல முற்போக்காளர்களால் வலியுறுத்தப்பட்ட பெண்களுக்கான சுதந்திரத்தை, இதுபோன்ற உடல், மனதுக்கு கேடு தரும் போதை பழக்கத்துக்கு பயன்படுத்துவதுதான் பெண்ணுரிமை என்று சிலர் தவறாகப்  புரிந்து வருகிறார்கள்.

மதுவால் இவ்வளவு கொடுமையான சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும் இதைப்பற்றி தமிழக அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை.எதிர்க்கட்சிகள் தான் கவலையோடு மதுவை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.ஆனால் பலன் இல்லை.

மதுவுக்கு எதிராகப்  போராடி வரும் மதுரை சட்டக் கல்லுரி மாணவி நந்தினியிடம் கேட்டோம்.

‘’நானும் தொடர்ந்து பல போராட்டங்களை செய்து வருகிறேன். ஆனால், அரசு அதற்கு தகுந்த பதிலை சொல்லாமல், என்னுடைய போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையைத்தான் ஏவுகிறது. தற்போது கோவையில் நடந்துள்ள சம்பவத்தை பார்த்து பெற்றோர்கள் அனைவரும் அச்சப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் வாங்கும் அளவுக்கு மது சாதாரணமாகிவிட்டது. எங்கும், எப்போதும் கிடைக்கும் பொருளாகிவிட்டது மது. குடியால் வரும் ஆபத்துக்கள் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும், அரசை எதிர்த்து மக்கள் அனைவரும் போராட வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே மதுவில் என்னென்ன வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. அதன் காலாவதி தன்மை என்ன?தயாரிக்கும் முறை என்ன? நச்சுத்தன்மை உள்ளதா, என்று இன்னும் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டு,  சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர்  தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  மதுபானங்களில் நச்சுத்தன்மையை கண்டறிய டாஸ்மாக் மதுபான வகைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், ஒரு மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு  உத்தரவிட்டுள்ளது.

இனியும் விபரீதங்கள் நடக்கும் வரை காத்திருக்காமல், இப்பிரச்னைக்கு முடிவுகட்ட அரசாங்கம் ஒரு உறுதியான நடவடிக்கைக்கு முன்வரவேண்டும்!


-செ.சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ