Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: யாருக்கு?

'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி'- என்ற வாசகங்களுடன் நேற்று ( 12.7.2015) சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்த  போஸ்டர்களும், அதே போஸ்டர் வாசகங்களுடன் அன்றைய நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட முழுப்பக்க விளம்பரங்களும்,   தமிழக மக்களை இலேசான குழப்பத்தில் ஆழ்த்தியது.  

அதற்கு விடை அன்று மாலை கோவையில் நடைபெற்ற பாமகவின் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டில் கிடைத்தது. ஏற்கனவே அன்புமணியை முதல்வராக வேட்பாளராக பாமக அறிவித்துவிட்ட நிலையில் சாதிக்கட்சி, தலித் விரோத அமைப்பு என்று அக்கட்சி மீது குத்தப்பட்டுள்ள முத்திரையை அகற்றும் முயற்சியாகவும், அன்புமணி எல்லாருக்குமான பொதுவான ஒரு தலைவர் என்ற ரீதியில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கையின் ஒரு அம்சமாகவுமே மாநாட்டில் பேசிய அன்புமணி மற்றும் ராமதாஸின் பேச்சுக்கள் அமைந்தது.

ஆனால் அதற்கான பலன் கிடைத்ததா என்பதை வரும் தேர்தல்தான் சொல்லும் என்றாலும், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மேற்கூறிய விளம்பரம் மற்றும் ஊரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை செமையாக கலாய்த்தும், அன்புமணி மற்றும் ராமதாசை கிண்டலடித்தும் மீம்ஸ்களும், நையாண்டிகளும் வரிசை கட்டுகின்றன. இந்த கிண்டல், கேலிகளுக்கு எந்த கட்சிகளும் தப்புவதில்லை என்றாலும், பாமகவை கலாய்ப்பது என்றால் சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் குதூகலம்தான் போல...வந்து கும்முகிறார்கள்.

அதிலும் அந்த அன்புமணியை முதல்வர் வேட்பாளருக்கான ஒரு மாற்று தலைவராக மக்களிடையே முன்னிறுத்த விரும்பும் பாமகவுக்கு, 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி'- என்ற விளம்பரத்தைக் கூட சொந்தமாக சிந்தித்து உருவாக்க தெரியவில்லையே என்றும், அந்த வாசகமும், போஸ்டர் டிசைனும் எங்கிருந்து சுடப்பட்டது என்பதையும் படத்துடன் போட்டு ஃபேஸ்புக்கில் செமையாக வாரி உள்ளார்கள்.

சமூக வலைத்தள கலாய்ப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும். அன்புமணி முதல்வர் ஆவாரா என்பதை 2016 சட்டசபை தேர்தல் முடிவுகள்தான் சொல்லவேண்டும். இருப்பினும் பாமகவுக்கு 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பழைய செல்வாக்கை இழந்ததால் ஏற்பட்ட பதற்றம் ஒருபுறம் இருந்தாலும்,  மகனை முதல்வராக்கி பார்க்க வேண்டும் என்ற ராமதாஸின் ஆசை திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை மட்டும் உறுதியாக அறிவிக்க வைத்துள்ளது. ஆனால் பாமக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே அடுத்த சட்டசபை தேர்தலில் கூட்டணி என்ற ராமதாஸின் அறிவிப்பு, 'காதல் நாடகம் நடத்துகிறார்கள்' என்ற பிரசாரத்தில் பாமகவுடன் கைகோர்த்த சாதி அமைப்புகள் கூட ஜெர்க்காகி பின்வாங்குகின்றன.

கல்வி மற்றும் அரசு பணிகளில் வன்னியருக்கு இட ஒதுக்கீடு பெற்று தருவது, சமுதாய முன்னேற்றம் போன்ற முழக்கங்களுடன்தான் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினார் ராமதாஸ். அதன்பின்னர் அந்த அமைப்பை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார். "நானோ அல்லது எனது குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிடவும் மாட்டோம். தேர்தல் வெற்றியால் கிடைக்கும் பதவியில் அமரவும் மாட்டோம். மீறினால் என்னை வீதியில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள்!" என்ற வாக்குறுதியை அளித்த ராமதாஸ், 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவை களமிறக்கினார். ஆனால் அதன்பின்னர் என்ன நடந்தது என்பதை வடமாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் அறியும்.

1991 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து கிடைத்த வெற்றியின் மூலம், அதிகார பதவி எத்தகைய ஆதாயத்தை பெற்றுத்தரும் என்பதை உணர்ந்துகொண்டார் ராமதாஸ். அதிலும்  தமது கட்சி எம்.பி்.க்களை மத்திய அமைச்சர்களாக்கியதன் மூலம் தமிழக அரசியல் அரங்கில் பாமக  அழுத்தமாக தடம் பதித்தது. அதன்பின்னர்தான் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி பார்க்க ஆசைப்பட்ட ராமதாஸ், 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைந்த மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொடுத்தார்.

இதனிடையே வன்னியர்கள் செல்வாக்கை கருத்தில்கொண்டு, ஒருமுறை புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அன்புமணியை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தியும் பார்த்தார் ராமதாஸ். ஆனால் பாமகவுக்கு கிடைத்த வாக்குகள், ராமதாஸுக்கு அந்த எண்ணத்தையே மனதில் இருந்து அகற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை களம் இறக்கி உள்ளது பாமக.

ஆனால் 2009 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2011 சட்டசபை தேர்தல்களில் பாமகவுக்கு கிடைத்த படுதோல்வியினால் சொந்த சமுதாய மக்களிடமே செல்வாக்கை இழந்துவிட்டோமே என்ற பதற்றத்தினாலும், இன்னமும் ஒரு தோல்வி கண்டால் அரசியல் அரங்கில் பாமகவின் எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தினாலுமே ராமதாசை மீண்டும் சாதி அரசியலை முன்னிலும் வலுவாக கையிலெடுக்க வைத்தது என்றும், இதன் காரணமாகவே தலித்துக்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வெறுப்புணர்வு பேச்சுகளும், இளவரசன்கள் சாவுகளும், தருமபுரி கலவரங்களும் அரங்கேறி, அதனைத் தொடர்ந்து  தலித் அல்லாத பிற ஆதிக்க சாதி அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்க வைத்தது  என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இத்தகைய தலித் விரோத முத்திரையும், ஆதிக்க சாதிகளின் அரவணைப்பு அடையாளமும் அன்புமணியை எப்படி எல்லாருக்கும் பொதுவான முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வைக்கும் என்ற கேள்விதான், 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி'- என்று கோடி கணக்கான ரூபாய் செலவில் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வைக்கவும், ஊர் ஊராக அரசியல் மாநாடு நடத்தவும் வைக்கிறது. 

பாமகவின் அடுத்த அரசியல் மாநாடு வேலூரில். வீடு வீடாக வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார்களாம்.

முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிற அன்புமணிக்கு  'வாக்கு' என்ற வெற்றிலை பாக்கு வைத்து மக்கள் அழைக்க வேண்டுமே...பார்க்கலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close