Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலம் கையகப்படுத்தும் மசோதா: தொடரும் மோடி அரசின் பிடிவாதம்!

ந்தியா முழுக்க உள்ள ஒட்டுமொத்த விவசாய பெருங்குடி மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பாஜக தலைமையிலான மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியே தீருவது என்று உறுதியாக உள்ளது.

காங்கிரஸ் மட்டுமில்லாது பாஜகவின் கூட்டணியில் இருக்கும், இருந்த தோழமைக் கட்சியினரும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று கிடிக்கிப்பிடி அறிக்கை போராட்டம் நடத்தினாலும், மோடியின் மனநிலை மாறுவதாகத் தெரியவில்லை.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரையில் பரபரப்பாக பேசப்பட்ட நில மசோதா, இப்போது மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வரும் 21 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், 15 ஆம் தேதி  நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் அங்கம் வகிக்கும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை கூட்டி இருக்கிறார். ஏற்கெனவே 3 முறை மசோதாவை நிறைவேற்ற முயன்று கடும் எதிர்ப்பால், தான் நினைத்ததை செய்ய முடியாமல் போனாலும், மோடி நம்பிக்கைத் தளராமல் செயல்பட்டுவருவது விவசாயிகள் மத்தியில் அதிர்வலைகளை பரப்பியுள்ளது. 

இந்த முறையும் நாடாளுமன்றத்தில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கச்சை கட்டும் என்ற போதிலும் அதற்கு பாஜகவும் பதிலடி கொடுக்க தயாராகவே இருக்கிறது. இந்நிலையில்   நாளை மறுநாள் (புதன் கிழமை) மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்வர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் பல்வேறு விவகாரங்கள் ஆளும் பாஜகவுக்கு எதிராக எழுப்பப்பட உள்ளன.அவற்றில் முக்கியமாக நிலம் கையகப்படுத்தும் மசோதா இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், தற்போதைய பாஜக கூட்டணி அரசு சில திருத்தங்களைச் செய்து புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்றது. இதற்கு காங்கிரஸ் மட்டுமல்லாது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகள் எதிர்ப்புக் காட்டின.இதனால் இம் மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.    

தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆனால் இந்த மசோதாவில் விவசாயிகளின் நலனுக்கு எதிரான அம்சங்கள் இடம்பெற்று இருப்பதாகவும், எனவே மசோதாவை ஆதரிக்க முடியாது என்றும் இன்றுவரை மக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.

நாடாளுமன்ற மக்களவையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கையே ஓங்கி இருப்பதால் அங்கு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு 3 முறை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்கு மேலும் அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியாது என்பதால் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மசோதாவை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் ஆகாது என்பதால் மோடி பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 15 ஆம் தேதி (புதன்கிழமை) மாநில முதல்வர்கள் அங்கம் வகிக்கும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.

இதற்கிடையே, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தேடப்படும், லண்டனில் வசிக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருப்பதால் அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி வரும் காங்கிரஸ், இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் கிளப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க தீர்மானித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர்கள் நால்வரையும் பதவியில் இருந்து நீக்குவது இல்லை என்பதில் பாரதீய ஜனதாவும், மத்திய அரசும் உறுதியாக உள்ளன. இதனால் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருகிறது.

எனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கேரளா, கர்நாடகம், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய 9 மாநிலங்களின் முதல்வர்கள் 15 ஆம் தேதி பிரதமர் கூட்டியுள்ள ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கக்கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி ஏற்கெனவே கூறி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா  கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்துப் பல்வேறு தரப்பில் இருந்தும் வெவ்வேறு வகையான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இந் நிலையில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஜெயலலிதா தலைமைச் செயலகம்  செல்லவில்லை. 

இன்று(திங்கள் கிழமை) கூட அவரின் தலைமைச் செயலக வருகை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவரின் உடல் நிலை சரியில்லை என்பதே காரணமாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் டெல்லி செல்வது சந்தேகம்தான் என்று  தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டு உள்ளார். அவர் இன்று (திங்கள் கிழமை) இப்தார் விருந்து அளிக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு முலாயம் சிங் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), கனிமொழி (திமுக) , சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்டு), சரத்யாதவ் (ஐக்கிய ஜனதாதளம்), பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் (ராஷ்ட்ரீய ஜனதாதளம்), தேவேகவுடா (மதச் சார்பற்ற ஜனதாதளம்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால், இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என்று லாலு பிரசாத் தெரிவித்து உள்ளார். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியாகவே அவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த முறையும் நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறுமா அல்லது மோடியின் கனவு தகர்க்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...  

- தேவராஜன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ