Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்

இரண்டு தலைமுறையை இசையில் தாலாட்டி மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்...

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத் தட்ட 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!

நடிக்கவும் ஆர்வம். 'கண்ணகி' படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, 'காதல் மன்னன்', 'காதலா... காதலா' உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார்எம்.எஸ்.வி.இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி, கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!

மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!

குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரி தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!

இஷ்ட தெய்வம் முருகன். எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் 'முருகா முருகா'தான்!மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அது, தமிழ் சினிமாவின் பொற்காலம்!

சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக,உச்சஸ் தாயியில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. 'பாசமலர்' படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!

எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப் பட்டது வரலாறு. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!

மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர் களுக்கு காபி, டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவையோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!

இளையராஜாவோடு சேர்ந்து, 'மெல்லத் திறந்தது கதவு', 'செந்தமிழ்ப் பாட்டு', 'செந்தமிழ் செல்வன்' என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!

'புதிய பறவை' படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு 'எங்கே நிம்மதி' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். 'பாகப் பிரிவினை' படத்தில் 'தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!

தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது மனைவியைத் தன் தாய்போல் கருதி, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!

1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு!

தமிழ்த் தாய் வாழ்த்தான 'நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் 'பட்டத்து ராணி' பாடலும், பெர்சியன் இசையை 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது'விலும், ஜப்பான் இசையைப் 'பன்சாயி, காதல் பறவை'களிலும், லத்தீன் இசையை 'யார் அந்த நிலவிலும்', ரஷ்ய இசையைக் 'கண் போன போக்கிலே கால் போகலாமா'விலும், மெக்சிகன் இசையை 'முத்தமிடும் நேரமெப்போ' பாடலிலும் கொண்டுவந்தார்!

'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'முத்தான முத்தல் லவோ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!

இந்தியாவில் முதன்முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.விதான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!

பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாத மாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப் பட்டுப் பாடி இருக்கிறார்கள்!

வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக்கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!'அத்தான்... என்னத்தான்...' பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்புகிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்' என்று ஒருமுறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம்!

- ஆனந்த விகடன் இதழிலிருந்து....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close