Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தியதால் மோடி பழிவாங்குகிறாரா? பரபரப்புத் தகவல்கள்!

மூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் மீது சி.பி.ஐ.விசாரணை நடத்தப்பட்டிருப்பதன் பின்னணியில் பிரதமர் மோடியின் கரம் இருப்பதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகளை  பாய்ச்சி வரும் மத்திய அரசு இதுவரை 9000 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

இதுவரையில் இல்லாத அளவிற்கு தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசின் பிடி இறுகியுள்ளது பல்வேறு சிறுபான்மை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் செய்துவரும் சமுதாயப் பணிகள், அவை பெறும் நிதிகள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை மத்திய அரசுக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும்,  தங்களின் உரிமங்களை சரியான ஆவணங்கள் அளித்து புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து உரிமங்களைப் புதுப்பிக்காத தொண்டு நிறுவனங்கள்,முறையான ஆவணங்களை அளிக்காத என்.ஜி.ஓ.க்கள் என 9,000 நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில்,சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் கலவரம் பல நூறு உயிர்களைப் பலிவாங்கிய மோசமான நிகழ்வு. மனித உரிமைக்கு எதிராக நடந்த அந்தக் கொடூரம் இன்றும் மறக்கவியலாத ஒன்றாக இருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின்போது, முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

குறிப்பாக அகமதாபாத் நகரிலுள்ள குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் 68 பேர் கொடூரமாக உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.  அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி அரசின் ஆதரவோடு பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் இந்த வன்முறைகளை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.'

இந்நிலையில் அந்தக் கொடூர நிகழ்வை சர்வதேச சமூகம் முன்பு ஆவணப்படுத்தியவர் டீஸ்டா.  குஜராத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்தில் முன்னிற்பவராக இவர் இருப்பதால், மோடி அரசால் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து, ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், " மும்பையில் உள்ள டீஸ்டா செதல்வாத் அலுவலகம் மற்றும் வீட்டு வளாகங்களில் மத்திய குற்றப்புலானாய்வுக் கழகத்தைச் சேர்ந்தோர் பெருமளவில் நாள்முழுதும் சோதனையில் ஈடுபட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. இது மிகவும் ஆட்சேபணைக்குரியதாகும். 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு எதிராக,  மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுவரும் டீஸ்டாவை பழிவாங்கும் நோக்கத்துடன்தான் மோடி அரசாங்கம் இத்தகையப் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரசியல் செல்வாக்குள்ள கயவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து விடாப்பிடியாக,  அவர் இந்தப் போராட்டத்தை நடத்தி கொண்டு வருகிறார். மேலும், அவருடைய அரசு சாரா நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் தொடர்பாக அவர்தன் முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக உறுதிமொழி அளித்திருக்கக்கூடிய சூழலில்,  சி.பி.ஐ.யினர் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும். 

ஒருசமூக ஆர்வலரின் செயல்பாடுகளை மிரட்டி அடக்கிவைப்பதற்காக சி.பி.ஐ.  மேற்கொண்டுள்ள இத்தகைய துஷ்பிரயோக அடாவடித்தனமான நடவடிக்கைக்கு எதிராக நீதி, நேர்மை மற்றும் மதச்சார்பின்னை ஆகியவற்றை நேசிக்கின்ற அனைத்து சக்திகளும் குரல் எழுப்பவேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட சிபிஐ சோதனையை ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கை இது என்று மேலும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். அரசு எந்திரத்தை தனது சுய லாபத்திற்காக பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது என்று சிவில் சொசைட்டி அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும்,  அவர்களின் கல்வி உள்ளிட்ட உரிமைகளுக்காகவும் போராடி வந்த டீஸ்டாவுக்கு நெருக்கடி கொடுப்பதன்மூலம்,  மத்திய அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கியுள்ளதாகவும் கூறப்படுவதால் இந்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மேலும் இது இடதுசாரிகள் மீதான அரசியல் தாக்குதல் என்று கருதப்படுவதால் மத்திய அரசு மேலும் ஒரு சர்ச்சையில் தானாகவே வலியவந்து சிக்கியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அடங்கியிருந்த குஜராத் கலவர விவகாரத்தை மீண்டும் மோடி அரசு ஊடகங்களில் கருப்பொருளாக மாற்றியிருக்கிறது.

இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்துமோ என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கும் சூழலில், நாட்டின் பொது அமைதி காக்கப்படவேண்டும் என்ற குரலும் வலுவாக எழுந்துவருகிறது.

 

 - தேவராஜன்  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close