Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரி செலுத்தாமல் டிமிக்கி... தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மணி கட்டுவது யார்?

மிழகத்தில் 552 தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள், 282 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள், 3408 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ, கல்வியில் கல்லூரிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடையாது என்று கடந்த 2011ல் உத்தரவிட்டது. அதில் சொத்துவரியை 2008ஆம் ஆண்டு முதல் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

ஆனாலும் நீதிமன்ற உத்தரவை பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மதிக்கவில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் வரி வசூலிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. பூனைக்கு யார் மணி கட்டுவார் என்பதை போல தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்து வரியை வசூலிப்பதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம் புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வை.தங்கவேலு, ஒரு தனியார் கல்வி நிறுவனத்திடமிருந்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். 4 மாதங்களாக போராடிவரும் அவரால் ஒரு பைசா கூட சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க முடியவில்லை.

இது குறித்து வை.தங்கவேலு கூறுகையில், "கடந்த 6.4.2015ல் புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு நடத்தினார். அப்போது வரி மற்றும் நிலுவை வரி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் ஊராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் கல்லூரி வரி செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரியிடமிருந்து வரியை வசூலிக்கும்படி எனக்கு உத்தரவிட்டார். அதன்படி நானும் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு வரி செலுத்துமாறு 10.4.15ல் கடிதம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் 20.4.2015ல் கடிதம் அனுப்பினேன்.

இதற்கிடையில் 18.4.2015ல் கல்லூரி தரப்பில் எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் கட்டடங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் நீதிமன்ற உத்தரவில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தேன். ஆனால் அங்கிருந்து அந்தக் கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. வரி வசூலிப்பதில் எந்த அதிகாரிகளும் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. உள்ளாட்சித்துறைகளுக்கு கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கையில் பஞ்சாயத்து தலைவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்து வரியை வசூலித்துக் கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களின் பின்னணியில் அரசியல் பலம் இருப்பதால் வரியை வசூலிக்க முடியவில்லை. இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்து இருக்கிறேன். தனியார் கல்வி நிறுவனங்கள் வரி பாக்கியை செலுத்தினால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இதன்மூலம் அரசுக்கு நிதிச்சுமை குறைய வாய்ப்புள்ளது" என்றார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாழையூர் குணா கூறுகையில், "பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் அரசியல் பின்புலத்தில் செயல்படுகின்றன. இதனாலேயே நீதிமன்றம் உத்தரவிட்டும் வரியை செலுத்தாமல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரைப் போல ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், தங்கள் எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்து வரியை வசூலித்தால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும். இதன்மூலம் மக்களுக்கு பல அடிப்படை வசதிகளை செய்ய முடியும். ஆனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரி வசூலிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். வரி வசூலிப்பதில் எல்லாருக்கும் ஒரே நிலை பின்பற்றப்பட வேண்டும். ஏழை, எளிய மக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த வரியை வசூலிப்பதை போல தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்தும் வரியை வசூலிக்க அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்" என்றார்.

இதுகுறித்து உள்ளாட்சித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, "பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் சொத்து வரியை செலுத்தாமல் இருக்கின்றன. அதை வசூலிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் இருக்கின்றன. அவர்கள்தான் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் வரியை வசூலிக்க வேண்டும். இதுதொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு விட்டன. இதன்பிறகு ஒரு சில கல்வி நிறுவனங்கள் வரியை செலுத்தி இருக்கின்றன. வரி பாக்கி வைத்துள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் வரியை செலுத்தினால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். வரி செலுத்தாமல் இருப்பதை போல சில தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டடத்துக்கு அனுமதியை பெறாமலும் இருக்கின்றன" என்றனர்.

-எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close