Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆபாச படங்களை பார்க்கும் மாணவர்களின் சராசரி வயது 9 - உலுக்கும் ஆய்வு முடிவுகள்!

" பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் கணிப்பொறி முன்போ, செல்போனிலோ  மூழ்கினால் உஷாராக வேண்டும். நன்றாக கவனித்து பார்த்தால் ஒருவேளை அவர்கள் ஆபாச இணைய தளங்களுக்கு அடிமையாகி இருக்கக் கூடும்" என்ற அதிர்ச்சி தகவலை தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது லண்டனைச் சேர்ந்த ரெஸ்க்யூ எனும் அரசு சார்பற்ற நிறுவனம்.

ஆபாச படம், இளம் வயதில் கருக்கலைப்பு, மனித கடத்தல், எய்ட்ஸ், முறையற்ற பாலியல் உறவு, பாலியல் வல்லுறவு  உள்ளிட்டவைகளுக்கு எதிராக கல்லூரிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த அமைப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகி வருகிறார்களா என்பது தொடர்பான ஆய்வையும் நடத்தி வருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி, தென்னிந்தியா முழுவதும் இந்த அமைப்பு தனது ஆய்வை துவங்கியது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மற்றும் மைசூர், பெங்களூரு, ஹூப்ளி, பிடார், கடாக், பெல்ஜியம், கோவா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு 9வதாக கோவையில் தனது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், ஆய்வையும் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள்தான் அதிர்ச்சியளிக்கின்றன. அந்த ஆய்வின் முடிவுகளை அந்த நிறுவன செயல் அலுவலர் அபிஷேக் கிளிபோர்ட் கோவையில் வெளியிட்டார்.

ஆபாச படம் பார்ப்பவர்களின் சராசரி வயது 9.4

கோவையில் 10 கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 71 சதவீத மாணவர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச படங்களை பார்ப்பவர்களின் சராசரி வயது 9.6. இதுவே தென்னிந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆபாச படம் பார்க்கும் மாணவர்களின் சதவீதம் 69ஆக உள்ளதாகவும், ஆபாச படம் பார்ப்பவர்களின் சராசரி வயது 9.4 ஆக இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் சொல்கின்றன.

இதில் கொடூரமான  பாலியல் வல்லுணர்வு காட்சிகளை 31 சதவீத மாணவர்கள் விரும்பி பார்ப்பதாகவும் அந்த ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கோவையில் மட்டும் 6,700 மாணவர்கள் புதியதாக ஆபாச படங்களை பார்க்க துவங்குவதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன.

ஆபாச படம் பார்க்கும் மாணவர்களில் 93 சதவீதம் பேர், போதை பொருள் போன்று ஆபாச படங்கள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். 86 சதவீதம் மாணவர்கள் இவை பாலுணர்வை தூண்டி வருவதாக தெரிவிக்கின்றனர். இதில் 54 சதவீதம் பேர் பாலியல் வல்லுணர்வுக்கு இந்த காட்சிகள் தூண்டுவதாக தெரிவித்துள்ளதுதான் அதிர்ச்சியின் உச்சக்கட்டம். இதில் 10 சதவீத மாணவர்களேனும் அது போன்ற செயலில் இறங்கலாம் எனச்சொல்லும் ஆய்வினை நடத்திய அமைப்பினர், கோவையில் மட்டும் கணக்கெடுத்தால் ஆண்டுக்கு 49 ஆயிரம் பாலியல் வல்லுணர்வு சம்பவங்களுக்கு இந்த ஆபாச படங்கள் காரணமாக இருக்கக் கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

ஆபாச படங்களை பார்ப்பதில் செல்போனுக்கு முதலிடம்

குழந்தைகள் பாலியல் உறவு காட்சிகளை 45 சதவீத மாணவர்கள் விரும்பி பார்க்கின்றனர். இதுதான் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுணர்வு அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் ஆய்வு முடிவுகள் சொல்கிறது. மாணவ, மாணவிகள் ஆபாச படங்களை பார்ப்பது மிகப்பெரும்பாலும் செல்போன்களில்  என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல். கோவையில் 84 சதவீதம் மாணவர்கள் செல்போன்களில் ஆபாச படங்களை விரும்பி பார்க்கின்றனர். இது தென்னிந்திய அளவில் 50 சதவீதமாக இருக்கிறது.

ஆபாச படங்களை பார்க்கும் மாணவர்களில் 18 சதவீதம் பேர் விலைமாதர்களிடம் செல்வதாகவும், ஆபாச படங்களை பார்க்கும் பெரும்பாலான மாணவர்கள், பெண்களை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கிறது. மாணவிகளும் கணிசமான அளவில் ஆபாச படங்களை பார்ப்பதாக சொல்லும் இந்த ஆய்வு, பள்ளியில் வெறும் 10 சதவீதமாக உள்ள ஆபாச படங்களை பார்க்கும் மாணவிகளின் எண்ணிக்கை, கல்லூரியில் 50 சதவீதத்துக்கு  அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மாதத்துக்கு 11 ஆயிரம் மாணவிகள் கருக்கலைப்பு?

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள், குழந்தைகள் ஆபாச படக்காட்சிகளை விரும்பி பார்க்க கூடும் என்றும், இதில் 4 லட்சம் மாணவர்கள் தகாத உறவில் ஈடுபடுகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.  எப்படியும் 1011 மாணவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மாதமும் 11 ஆயிரம் மாணவிகள் கருக்கலைப்பு செய்கிறார்கள் என இந்த ஆய்வின் ஒவ்வொரு முடிவுகள் அதிர்ச்சி ரகம் தான்.

உலகம் முழுக்க போர்னோகிராபி படங்களை அதிகமாக ஆண்கள்தான் பார்க்கின்றனர். ஆபாச படங்களை 80 சதவீத ஆண்கள் பார்க்கின்றனர். ஆனால், பெண்கள் 50 சதவீதத்துக்கும் குறைவு. இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆபாச இணையத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதில் பெண்கள் மிகக் குறைவு. மூன்றில் ஒரு பெண் ஆபாச இணைய தளத்தை பயன்படுத்தினால் அது ஆச்சரியம்.

முதலில் இன்டர்நெட் சென்டர்களில் மட்டுமே இருந்த இணைய தள வசதி, வீட்டுக்கு வந்து இப்போது நம் கையில் உள்ள செல்போனுக்கே வந்து விட்டது. இதனால்தான் சின்னக் குழந்தைகள் கூட இப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. போர்னோகிராபி படங்களைப் பார்க்கத் தொடங்கும் சராசரி வயது 9.4 என குறைந்தது இப்படித்தான்.

வருவாய் கொழிக்கும் போர்னோகிராபி இணைய தளங்கள்

இணையம் மூலம் காசு அதிகம் சம்பாதிப்பவர்கள் யார் என தெரியுமா? சந்தேகமே வேண்டாம். போர்னோகிராபி இணையத்தளங்கள்தான் அவை. இணையத்தில் எத்தனையோ வகையிலான பயனுள்ள இணையத்தளங்கள் உள்ள போதும்,  அவற்றை முறையாக கட்டணம் கொடுத்து உபயோகிக்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை. ஆனால், போர்னோகிராபி வெப்சைட்களுக்கு அடிமையாகியவர்களால் லாபத்தில் கொழிக்கிறது இந்த இணைய தளங்கள்.

மிக முக்கிய இணைய தளங்களான மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களை விட உலகில் போர்னோகிராபி வலைத்தளங்கள் சம்பாதிக்கும் வருவாய் என்பது மிக அதிகம். போர்னோகிராபி ஒரு தொழில் முறை துறையாக இதுதான் காரணம். பெருகியிருக்கும் தகவல்தொழில் நுட்ப வசதிகள், பாலியல் பழக்கவழக்கங்களில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அது நேர்மறையாய் இல்லாமல் எதிர்மறையாய் இருப்பதுதான் பரிதாபம்.

ஆபாச இணைய தளங்களுக்கு தேவை தடை

உலகில் எத்தனை ஆபாச இணைய தள பக்கங்கள் இருக்கிறது என தெரியுமா? கிட்டத்தட்ட 2 கோடி இணைய தள பக்கங்கள் ஆபாச படங்களையும், கருத்துகளையும் உள்ளடக்கியதாக சொல்கின்றன புள்ளிவிவரங்கள். ஆபாச இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்தாலும், அது நடைமுறை சாத்தியமில்லை. எனவே, ஆபாச இணைய தள பக்கங்களை தடை செய்யும் மென்பொருட்களை தங்கள் இணைய தளங்களிலும், செயலிகளை (அப்ளிகேஷன்) செல்போன்களிலும் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்வது நல்லது. அதுதான் ஆபாச இணைய தளங்களை உங்கள் குழந்தைகள் பார்ப்பதை தடுக்கும்.

தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் கணிப்பொறி முன்போ, செல்போனிலோ இணைய தளத்தில் மூழ்கினால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் செல்போனில் வாட்ஸ் அப் மற்றும் வீடியோக்களை கண்காணியுங்கள். முகநூல் கணக்கை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆபாச படங்கள் எந்த வழியிலும் வரலாம். மாணவர்கள் வழிதவறி இண்டர்நெட் எனும் மாய வலையில் சிக்கிக்கொள்வதை தடுப்பதில் பெற்றோர்களின் கண்காணிப்பும் முக்கிய பங்கு.

உலகத்தில் எந்த நாட்டு அரசும் இணையத்தை தடை செய்யமுடியாது. செக்ஸ் தொடர்பான போதுமான கல்வியையும் வழங்குவதன் மூலமே இதன் தீயவிளைவுகளை மாணவர்களே புரிந்துகொண்டு தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த முடியும்.

-ச.ஜெ.ரவி


படம்: தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ