Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எங்களுக்கு இரு நிறங்கள் இருப்பது சந்தோஷமே!'

'நீங்க கறுப்பா இருப்பீங்க, இல்ல வெள்ளையா இருப்பீங்க. ஆனால் நாங்க மட்டும் ரெண்டு நிறத்துல இருப்போம். நிறத்தை மட்டும் வைத்து மனிதனை மதிப்பிடக் கூடாது. ப்ளாக் அண்ட் ஒயிட்டுனுதா என்ன ஸ்கூல்ல கூப்பிடுவாங்க, நான் அப்பவே பேமஸ் தெரியுமா....?'- வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோர் சிரித்துக் கொண்டே தங்களைப் பற்றி சொன்ன கருத்துகள்தான் இவை.
 

'விட்டிலைகோ' எனும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோர் நண்பர்களாக இணைந்து தங்களது புகைப்படங்களையும், பாதிக்கப்பட்ட மற்றவர்களின் புகைப்படங்களையும் சேகரித்து, வெண்புள்ளி பாதிப்பால் ஏற்பட்ட தங்களது கருத்துகளையும் வெளிப்படையாக எழுதி, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில், ஒரு வாரத்திற்கு பொது மக்களின் பார்வைக்கு புகைப்பட கண்காட்சியாக வைத்திருந்தனர்.

'லூக்கிடெர்மா' எனப்படும் வெண்புள்ளிகள் உடலெங்கும் பரவி இருப்பதாகும். ஆனால் 'விட்டிலைகோ' எனப்படும் வெண்புள்ளி பாதிப்பு உடலில் உதடுகள், விரல்கள் என்று ஆங்காங்கே பரவக்கூடியதாகும். மரபுவழிகளில், மன அழுத்தங்களில், ஊட்டச்சத்து குறைபாடுகளில் இந்த 'விட்டிலைகோ' உண்டாகிறது.

மற்ற நோய்களுக்கு மருத்துவத்துறையும், நாமும் கொடுக்கக்கூடிய நிவாரண சிகிச்சை முக்கியத்துவத்தை இந்த வெண்புள்ளிகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால், இந்த வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோர் என்னதான் பணம் படைத்தோர், படித்தோர் என்று பல அந்தஸ்துகளுடன் இருந்தாலும், அவர்கள் பொதுஇடங்களுக்கு செல்லும் போதும், தங்களது உடை, சிகை அலங்காரம் என்று ஒவ்வொன்றிலும் ஒருவித தாழ்வு மனப்பான்மை அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் உள்ளூர ஊறிக்கிடக்கிறது. இவ்வளவேன், ஒரு புகைப்படத்திற்கு புன்னகைக்கும் சிரிப்பு கூட செயற்கையாகத்தான் இருக்கின்றது. திருமண காலகட்டங்கள் வரும் போது அந்த ஆணும், பெண்ணும் சங்கட சூழலைத்தான் அனுபவிக்கின்றனர்.
 

இவற்றையெல்லாம் உடைத்தெறியும் விதமாக, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர், முகப்புத்தகத்தின் மூலம் நண்பர்களாக கிடைத்த ஸ்ரீவட்சன், ஆனந்த்ராஜ், பரத், ஷ்மித்தா, சுகன்யா, பிரவீன், செந்தில்நாதன் ஆகியோரை இணைத்து, தங்களையே புகைப்படங்கள் எடுத்தும், முகப்புத்தகத்தின் மூலம் பெங்களூரு, சூரத் என்று வெளி மாநிலங்களிலும் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் சேகரித்தும் 'விட்டிலைகோ அழகுதான்' என்ற இந்த புகைப்பட கண்காட்சியை நடத்தி உள்ளனர்.

"முதலில் வெண்புள்ளிகள் என்பது நோயல்ல. தொட்டு பேசினால் பரவக்கூடியதும் அல்ல. ஆனால், ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்துதான் அவரை மதிக்கின்ற நிலை உள்ளது. எனது குடும்ப உறவினர் ஒருவருக்கு இருந்த வெண்புள்ளி, எனக்கு பதினோரு வயதிலேயே வந்துவிட்டது. ஆயுர்வேதம், சித்தா, ஆங்கில மருத்துவம் என்று வெளிநாடுகளுக்கு சென்றும் கூட சிகிச்சை பலனளிக்கவில்லை. நம் நாட்டிலும் இதற்கு தீர்வு காணும் மருந்துகள் இன்று வரை கிடைத்தபாடில்லை. கல்லூரி படிப்பு வரை மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் பொது இடங்களுக்கு செல்லாமல், வீட்டில் கூட யாரோடும் பேசாமல்தான் இருந்தேன். காலப்போக்கில் பல விஷயங்கள், புரிதல்கள் தெரியத் தெரிய என்னை நானே மாற்றிக்கொள்ள முயன்றேன். முதலில் பல மருந்துகளை சாப்பிடுவதை நிறுத்தினேன். பின்பு முகப்புத்தகத்தில் விட்டிலைகோவால் பாதிக்கப்பட்டோர் பலர் நண்பர்களாக இணைந்தோம்.
 

சிகிச்சை முறைகள் பற்றியும், யார் யாருக்கு குணமடைவதைப்போல் உள்ளது என்பது பற்றியும்தான் பேசிக்கொண்டு இருந்தோம். மூன்று மாதத்துக்கு முன்புதான் நம்மைப் பற்றியே ஒரு குறும்படம் எடுத்து திரையிட்டால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. அதை அனைவரிடமும் தெரிவித்தேன். ஆனால் பலர் அதை ஏற்கவில்லை. பிறகு புகைப்படக் கண்காட்சியை வைக்கலாம் என்று சொன்ன பிறகும் பலர் தயக்கத்துடன் மறுத்தனர். ஆனால், ஒரு சிலர் முன்வந்து தைரியமாக இதை சாத்தியாமக்கி உள்ளனர்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என்று பலரிடமும் இதைப் பற்றி தெரிவிக்கையில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களது முகத்தை வெளியில் காட்டவே தயக்கம் அடைந்து, வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். ஆனால் சூரத்தில் இருந்து ஒரு தம்பதியினர் மட்டும் புகைப்படங்களை கொடுத்தனர். வெண்புள்ளிகள் பற்றி பல விழிப்புணர்வு நடந்தாலும், தங்களது முகங்களை யாரும் வெளிக்காட்டுவதில்லை. உடல் ரீதியாக நாங்கள் உறுதியாக இருந்தாலும், சமூகம் எங்களை அரவணைத்தாலும்  இந்த வெண்புள்ளிகள் எங்களுக்கு தெரியாமலேயே எங்களுக்குள் ஒருவித தாழ்வுமனப்பான்மையை தருகிறது.

இந்த நிலையை மாற்றத்தான் எங்களை நாங்களே படம் பிடித்து பொது இடங்களில் வைக்கின்றோம். புகைப்படங்களில் வெளிப்பட்ட எங்களின் ஒவ்வொரு சிரிப்பும், எங்களின் அடிமனதில் இருந்து வந்தவைகள். அவைகள் எங்களை மேலும் அழகாக்கிறது. புகைப்படக்கலை, தகவல் தொழிநுட்ப துறை என்று பல துறைகளில் பணிபுரிந்து வரும் நாங்கள், இதன் மூலம் மொழி, பாலினம் கடந்து இன்னும் பலர் நண்பர்களாக இணைந்து, வெளியில் வந்து இன்னும் பல துறைகளில் சாதிக்க வழி கிடைக்கின்றது.

ஒவ்வொரு புகைப்படங்களை எடுக்கும் பொழுதும்  நாங்கள் மேலும் மேலும் அழகாகிறோம். மொத்தத்தில் 'விட்டிலைகோ' எங்களுக்கு அழகுதான்" என்று தன்னம்பிக்கை சிரிப்புடன் பேசினர் பாஸ்கரும்,  அவரது நண்பர்களும்!

-கு.முத்துராஜா

படங்கள்: அருண் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close