Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேது சமுத்திர திட்டம்: நேற்று இன்று நாளை....( மினி தொடர்- 2)

நீண்ட காலத்திற்குப் பிறகு 1983-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நியமித்த லெட்சுமி நாராயணன் குழு, 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை தயாரிக்கிறது. அதிலிருந்த நிபுணர் குழு வேறு ஒரு ஆராய்ச்சியை செய்தது.

கடலுக்குள் மணலை தோண்டி ஆழப்படுத்துவது சிரமம். வேலை முடிய நீண்ட நாட்களாகும். அதனால், மண்டபம்- வேதாளை ஊர்களுக்கு நடுவே நிலப்பரப்பை வாய்க்கால் போல் தோண்டி, வடகடலையும் தென்கடலையும் இணைத்து விடலாம். அப்படி வேலை செய்தால் சீக்கிரம் திட்டம் நிறைவேறும் பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போல் கப்பல்களை நிறுத்தி கடத்தி விடலாம் என்ற ஒரு திட்டத்தை தயாரித்தார்கள். ஆனால் இந்த புதிய வழித்தடம் அந்தப்பகுதி மக்களை அச்சம் கொள்ள வைத்தது.

இது நிறைவேற்றப்பட்டால் பாம்பன்போல், மண்டபம் பகுதி இன்னொரு தீவாகிவிடும். அது இப்பகுதி மக்களுக்கு பெரிய கஷ்டத்தை தரும் என்று  எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இத்திட்டத்தை மத்திய அரசும் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பின் இத்திட்டம் பற்றி யாரும் மூச்சே விடவில்லை. சேதுகால்வாய் திட்டம் பரணில் போடப்பட்டது.

ஆனால், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மட்டும் அவ்வப்போது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள்...  நிறைவேற்றுங்கள் என்று அவ்வப்போது அறிக்கை,  ஆர்பாட்டம் என்று நடத்தி கொண்டிருந்தார்கள். தமிழக மக்களின் கனவு திட்டம் கடைசிவரை கனவாகவே போய்விடுமோ என்ற நிலைக்கு மக்கள் வந்தார்கள்.

இப்படியே காலம் போய்க்கொண்டிருந்தது. இருபது வருடங்கள் கடந்துவிட்டது.

2௦௦4 ல் மத்தியில், திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் திமுகவின் கைதான் ஓங்கியிருந்தது. அதனால், தன் கட்சியின் முக்கிய கொள்கையான சேதுகால்வாய் திட்டத்தை எப்படியும் ஆரம்பித்துவிட வேண்டுமென்று காங்கிரஸ் தலைமையை நெருக்கி ஒப்புக்கொள்ள வைத்தார்கள். அதற்கு சோனியா சம்மதித்தார்.

உடனே புதிய ஆய்வுக்குழு போடப்பட்டது. பாக் நீரிணையையும், மணற்திட்டையும் ஆழப்படுத்தி மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் ஒரு கால்வாய் மூலம் இணைக்கும் திட்டத்தையும், அதற்கான எஸ்டிமேட்டையும் தயாரித்தார்கள். அப்போது அதற்கு அவர்கள் கேட்ட தொகை 2427 கோடி.

இத்திட்டம் வந்தால் கடல் பகுதியில் எப்போதும் கண்காணிப்பு இருக்கும். பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும், எனப் பயந்த சில கடத்தல்காரர்களுக்கும், எல்லை கடந்து மீன் பிடிக்க செல்வதையே வேலையாக வைத்திருக்கும் மீனவர்கள் அல்லாத நபர்களுக்கும் இது  அச்சத்தை உருவாக்கியது. அதனால், சேது கால்வாய் திட்டத்துக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொரு கருத்துக்கேட்பு கூட்டத்திலும் சுற்றுச்சூழல் கெடும், மீன்வளம் அழியுமென்றும் மீனவர்கள் அச்சம் தெரிவித்தார்கள். ஆனால், அரசு தரப்போ, கடலை ஆழப்படுத்தும்போது மீன்வளம் அழியாது இன்னும் அதிகமாகும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்க ஆழப்படுத்திய பின்புதான் அங்கு மீன்வளம் பெருகியது என்றும், கடலில் எப்போதும் பாதுகாப்பு இருப்பது உங்களுக்கு நன்மை செய்யத்தான். இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் இருக்காது, இது மட்டுமில்லை, ராமேஸ்வரத்தில்  நுறு கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மீன்பிடித்துறைமுகம் அமைத்து தரப்படும் என்றும், சேது கால்வாய் திட்டம் முழுமையடையும்போது மீனவர்களின் பிள்ளைகள் படிக்க பள்ளிகள், கல்லூரிகள், பலவேறு உப தொழில்கள் பெருகுமென்றும் சொல்லப்பட்டது.

அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் மீனவர்கள் இல்லை. இதில் ஒரு முக்கிய விஷயம், அதுவரை ராமர்பால சர்ச்சையை யாரும் எழுப்பவில்லை. இத்திட்டத்திற்கு ஆரம்பத்தில் மீனவர்களின் எதிர்ப்பு இருந்தாலும், இன்னொரு பக்கமுள்ள மீனவர்கள் இத்திட்டத்தை வரவேற்றார்கள்.

இப்படியே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று போய்க்கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழக மக்களும் இத்திட்டம் நிறைவேற வேண்டுமென்றே ஆசைப்பட்டார்கள்.

எல்லாவித எதிர்ப்பையும் கடந்து,  2004 டிசம்பர் 6 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரகுபதியை தலைவராக கொண்டு,  சேது சமுத்திரகால்வாய்த் திட்ட நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் துவக்கவிழா 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. ஒரு பண்டிகைபோல கொண்டாடப்பட்ட இந்த விழாவில்,  காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். ‘’சமுத்திரத்தாயின் சரித்திரக் குழந்தை’’ என்று இத்திட்டம் போற்றப்பட்டது.

துவக்கவிழாவில் அப்போதைய மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குத்துவிளக்கு ஏற்றினார். திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார். விழா மலரை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.

பிரதமர் தொடங்கி வைத்ததுமே, கடலில் சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணியும் உடனடியாக தொடங்கியது. இதை விழாப்பந்தலில் கூடியிருந்தவர்கள் லைவாக டிவியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியை பார்த்ததும் மேடையில் இருந்த தலைவர்களும், விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விழாவில் சோனியாகாந்தி பேசும்போது, ‘’இன்று ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகால கனவு நிறைவேற்றப் பட்டுள்ளது.. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தொழில்நுட்பம் மிகுந்த சவாலான, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை நனவாக்க உறுதியுடன் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இம்மாபெரும் திட்டத்தால் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு தொடர்ச்சியான கடல்வழிப் பாதை அமைப்பதால் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு, குறிப்பாக தென் மாவட்டங்கள் இத்திட்டத்தால் பெரும் பயன் அடையும். தமிழகத்தின் கடலோர பகுதியின் பொருளாதாரமும், கடல் வணிகமும் பெரும் வளர்ச்சி பெறும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டம் குறித்து சில வினாக்களை எழுப்பியுள்ளது நான் அறிந்ததுதான். பவளப்பாறைகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து அச்சம் எழுப்பப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துபவர்கள் இந்த கவலைகளை நன்கு அறிந்திருக்கின்றார்கள். திட்டப்பகுதியின் சுற்றுச்சூழல் காத்து இத்திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

குறிப்பாக, மீனவ சமுதாயத்தின் மீது தனிக்கவனம் செலுத்துவோம். உண்மையிலேயே  இந்த நாள் இந்திய திருநாட்டிற்கும் தமிழகத்திற்கும்  ஒரு மனநிறைவு அளிக்கும் நாள். ஒரு வரலாறு படைக்கும் நாள்...’’ என்றார்.

விழாவில் கருணாநிதி, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், டாக்டர் அன்பு மணிராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம்.மாநில செயலாளர் என்.வரதராஜன், சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியன், முஸ்லிம்லீக் மாநில தலைவர் கே.எம். காதர்மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இப்படி கோலாகலமாக துவக்கப்பட்ட திட்டத்திற்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இப்பகுதி மீனவர்களுக்கு சில நலத்திட்டங்களையும் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். மீனவர்களின் போராட்டத்தை அடக்கி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தபோதுதான்,....

‘’சேது சமுத்திரத்திட்டத்தால் நாம் வணங்கும் ராமபிரான் கட்டி இப்போதும் கடலுக்கடியில் இருக்கும் ராமர்பாலம்(ராமசேது)உடையும் ஆபத்து, இது இந்துக்களின் நம்பிக்கையை மத்திய காங்கிரஸ் அரசும், திமுகவும் திட்டமிட்டு அழிக்க பார்க்கிறது’’ என்ற குரல் எழும்ப ஆரம்பித்தது.

பா.ஜ.க.வின் உப அமைப்புகள் கையில் எடுத்த இந்த அஸ்திரம் விஸ்வருபமெடுத்து சேதுகால்வாய் திட்டத்துக்கே ஆப்பு வைக்கும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியில் இடம்பெற்ற திமுகவும்  சிறிதும் நினைக்கவில்லை...
 

தொடர்ந்து நீந்துவோம்...

- செ.சல்மான்
 
முந்தைய தொடரை படிக்க....இங்கே க்ளிக் செய்யவும்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close