Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள் - [Vikatan Digital Exclusive]

 

 

ளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம். தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் மீனவ கிரமமான ராமேஸ்வரம் இந்தியாவுக்கு அளித்த வரம் அப்துல் கலாம். உலகமே இந்த மாமேதைக்காக அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. வயது வரம்புகளை தகர்த்து கலாமுக்கு வருந்திய உள்ளங்கள் ஏராளம்.   

 

அப்துல் கலாம் 'நிஜம்' என்றால் அவருடைய நிழலாக பின் தொடர்ந்தவர் ஶ்ரீஜன் பால் சிங். அப்துல் கலாமின் உதவியாளர்.  ஶ்ரீஜன் பால் சிங், கலாமுடன் சேர்ந்து இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அப்துல் கலாமை பற்றி தன் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட போட ஶ்ரீஜன் பால் சிங், "அப்துல் கலாமுக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு வருத்தம் இருந்துவந்தது. அது, தன்னுடைய பெற்றோருக்கு அவர்களது வாழ்நாளில் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் வகையிலான வசதியை செய்து கொடுக்க முடியவில்லை என்பதுதான். இதனை அவர் அவ்வப்போது என்னிடம் மிகுந்த வருத்தமுடன் பகிர்ந்து கொள்வார். அநேகமாக கலாம் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே வருத்தம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


 

 

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்  

 

டாக்டர் அப்துல் கலாம் - இந்தியாவின் விஞ்ஞானி

 

 

முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல  சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.


 

 

(நன்றி; தி இந்து) 

 

* ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை தொடங்கினார்.

* திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார்.  

* சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.

*  பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு  சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார்.  

* பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் (INCOSPAR) ஒரு அங்கமாகவும் அப்துல் கலாம் இருந்தார்.


ஏவுகணை உருவாக்கம்:


 

* 1969-ம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(ISRO) மாற்றப்பட்டார். அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுவதற்கான ஏவுகணை (launcher) (எஸ். எல். வி-III) தயாரிக்கும திட்டத்தின் இயக்குனர் ஆனார்.

* 1980-ல் எஸ். எல். வி-III ஏவுகணை 'ரோஹினி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக  விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் சேர்ந்தது போன்றவை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. எஸ். எல். வி. திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறுவார்.

* கலாம் 1965-ல் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விண்கலத் திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969-ல், அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

* 1963–64 இல், அவர் நாசாவின் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்ஃபீல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான தளம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.

* 1970க்கும் 1990க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி.3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன.

* தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான  பொக்ரான் அணுகுண்டு திட்டத்தைக் காண்பதற்காக முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.

* 1970-ல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை!

 

* 1970களில், வெற்றிகரமாக ஏவப்பட்ட எஸ். எல். வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் (ballistic) தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வேலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும், பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தின் மூலம்  விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஒதுக்கினார்.

* அப்துல் கலாமின் ஏவுகணை உருவாக்கும் திறமையால் 1980களில், அவரை மத்திய அரசு  கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி.எஸ். அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.


தலைமை அறிவியல் ஆலோசகர்:

 

(நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்)


* 1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.

* 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது.

* 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது. 

 

இந்தியாவின் சக்தி - ப்ரமோஸ்

 

ஆயுதங்கள் உருவாக்கத்தில் இந்தியா கொஞ்சம் வீக்தான். சீனாவே பாராட்டினாலும், அர்ஜுன் டேங்க் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட் ப்ராஜெக்ட் மிகவும் தாமதமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், BrahMos பிராஜெக்ட் மட்டும் சூப்பர் சக்ஸஸ். யார் காரணம்? அப்துல் கலாம்.
 

‘ரோஹிணி’ செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, Integrated Guided Missile Development திட்டத்தின் மூலம் ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட BrahMos ப்ராஜெக்ட்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
 

 

ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து BrahMos ஏவுகணையை உருவாக்கலாம்’ என்று அப்துல் கலாம் நினைத்த நொடி, இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையில் முக்கியமான தருணம். ப்ரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் கலாம் வகித்த பங்கைத் தெரிந்துகொள்ள ‘ப்ரமோஸ் ஏவுகணையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஏ. சிவதாணு பிள்ளை எழுதிய ‘The Path Unexplored’ புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியதே அப்துல் கலாம்தான்.  

 

 

அதில், சிவதாணு பிள்ளை, அப்துல் கலாம் 1995-ல் தன்னிடம்  க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்துக்கான  இந்தியா - ரஷ்யா கூட்டுமுயற்சிக்கு தலைமை செயல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார் என்று எழுதியிருக்கிறார். ப்ரமோஸ் உருவாக்கத்தில் பிள்ளை என்ன திட்டத்தைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வாராம் கலாம். அதேபோல், கலாம் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக எந்தக் கோப்புகளை அனுப்பினாலும், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கையெழுத்திட்டு திருப்பி அனுப்புவாராம்.

இன்று, ப்ரமோஸ் ஏவுகணைதான் உலகிலேயே மிகவேகமான க்ரூஸ் ஏவுகணை. ஏன், உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியாதான். ப்ரமோஸ் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.

 

ப்ரமோஸ் சீறிப்பாய்வதைப் பார்ப்பதற்கே கெத்தாக இருக்கும்

 

   

 

 

கலாமின் கனவு இந்தியா 2020!
 
 

 

'எப்போது பார்த்தாலும் வீண் கனவு கண்டு கொண்டே இருக்காதே! எல்லாம் பகல் கனவு தான்!' இப்படி தான் 'கனவு' என்ற வார்த்தை நம் மனதில் இந்த மனிதர் பேசுவதற்கு முன் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். இன்று இந்தியா 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் அனைவரது பேச்சிலும் 'அப்துல் கலாம் கனவு கண்டது போல் இந்தியா 2020க்குள் வல்லரசாகும்' என்றுதான் மேற்கோள் காணப்படும்.

 

இந்தியாவிற்காக அவர் கண்ட நம்மை காண சொன்ன கனவு மிகப்பெரியது, மிகச்சிறந்தது. ஒருவேளை அவர் இந்திய குடியரசு தலைவர் ஆகாமல் போயிருந்தால் இதே விஷயத்தை ஏதோ ஒரு கல்லூரியின் விழாவில் மாணவர்களிடையே புகுத்தி நமக்குள் இந்தியாவின் வல்லரசு கனவுக்கான விதையை விதைத்திருப்பார்.

 


 

அவர் கண்ட கனவில் முதலாவது, இந்தியாவில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் அளவுகளான ஜிடிபி மூலம் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 1996களில் மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் 15வது இடத்தில் இருந்தது. அதனை 2020ல் 4வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. 

 

தொடர்ந்து உள்ளூர் சந்தைகளை ஊக்குவிப்பது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழிநுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவர் கண்ட முதன்மையான கனவு. மேலைநாடுகளில் இருந்த CAD மற்றும் CAM போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லூரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.

 

 

இந்தியாவை உணவு பற்றாக்குறை இல்லாத நாடாகவும், விவசாய வளமிக்க நாடாகவும் மாற்ற வேண்டும், இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்த நிலையை மாற்ற உணவுக்கான வழிவகைகளை செய்து விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
 

உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்று அவர் குடியரசு தலைவராக இருந்தபோது இந்தியா 2020 புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது வந்துள்ள திட்டத்தை பல வருடங்களுக்கு முன் கணித்திருக்கிறார் என்றால் அவர் மாமனிதர் தானே!

 

இந்தியாவில் சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதை கூறி இருந்தார். அதன்படி தான் அன்றைய பிஜேபி அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும் என்றார். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.

 

 

ஒரு சினிமா நடிகரின் பேச்சையும், ஒரு கிரிக்கெட் வீரர் சொல்லும் குளிர்பானத்தை குடித்துக்கொண்டும் இருந்த இளைய சமுதாயம் 83 வயது இளைஞர் சொன்னால் இந்தியாவை உயர்த்த எண்ண வேண்டுமானாலும் செய்வோம் என மாறியது. இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்களது சக்தியை சிறப்பாக செயல்படுத்தினால் இந்தியா உலகின் அழிக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் அச்சமில்லை என்றார்.


அவரது 'கனவு இந்தியா' இன்னும் உருவாகவில்லை. ஆனால் அவர் சொன்ன பாதையில் உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை. இங்கு ஊரைச் சுற்றும் இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகை சுற்றும் செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணைச் சுற்றுவார்கள். இந்தியா 2020-ம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட 'கனவு இந்தியா'வாக உருவாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் செயலில், கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை பார்ப்பது மட்டுமே இந்தியாவின் தற்போதைய இலக்கு. 

 

 

கனவு காணுங்கள்! அப்துல் கலாம் மறையவில்லை! இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் உள்ளவரை கலாமை அழிக்க முடியாது!
 

 

- டிஜிட்டல் ஃபர்ஸ்ட் டீம், விகடன்

 

(நன்றி: ClaysonsSkitlibrary)

 

'Funny guy! Are you doing well? ' - அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்! -> படிக்க க்ளிக் http://www.vikatan.com/news/article.php?aid=50168

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close