Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 2)

ஜான் பென்னிகுக்... ஒவ்வொரு தமிழனும் மனதிலும் பதிக்க வேண்டிய முக்கிய பெயர்களில் முதன்மையானது. இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் நாட்டவரான இவர்தான், முல்லை பெரியாறு அணைக்கு முழுவடிவம் கொடுத்த ராணுவப் பொறியாளர். பிரிட்டிஷ் ராணுவப் பள்ளியில் படித்து, ராணுவத்தில் லெப்டினென்ட், பொதுப்பணித் துறையில் பொறியாளர், படைத்தளபதி என்ற பொறுப்புமிக்க பதவிகளை தன் வசமாக்கி வந்தவர் பென்னிகுக்.
 
ஆங்கில அரசில் எந்தவொரு திட்டமும் ஒரே ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி மட்டும் நடந்துவிடாது. முன்னரே சொன்னபடி பெரியாறு அணை திட்டத்துக்கு ரைவ்ஸ் கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டு அதில் இருந்து செலவுகளைக் குறைப்பது, கட்டுமானத்தைப் பலப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகளில் இறங்கி, ரைவ்ஸ் திட்டத்தைவிட சிறப்பான புதிய திட்டத்தைக் கொண்டுவந்தார் பென்னிகுக். 1880-களின் தொடக்கத்திலேயே, பெரியாறு அணை குறித்த பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

1886-87 ஆண்டுகளில் பெரியாறு அணை திட்டத்துக்கு முழு பொறுப்பாளராகவும் ஆனார். இன்றுபோல திமுக கொண்டுவந்ததை அதிமுக புறக்கணிப்பதும், காங்கிரஸ் கொண்டுவந்ததை வேறொரு பெயரில் பாலீஸ் போடும் பாஜகவின் வேலையையும் செய்யாதவர். ஆதலால் ரைவ்ஸ் ஆரம்பித்த திட்டம் நின்றுபோகாமல், பென்னிகுக்கால் சாத்தியமானது.

''தென்மேற்கில் உருவாகி மேற்கில் பாய்ந்து, மேற்கிலேயே கடலில் கலக்கும் நதிகளை திருப்பி, கிழக்கு பக்கமுள்ள ஊர்களை செழிக்கச் செய்ய வேண்டும். அதுவும் இதுவரை மனிதப் பாதங்களே படாத பகுதிகளில் செய்ய வேண்டும்” - இப்படி சாதாரணமாகச் சாத்தியப்படாத வேலையில் தன்னை ஒப்படைத்துக்கொண்டார் பென்னிகுக்.

அங்கு இன்னொரு புதிய சிக்கல் ஆரம்பமானது. அணைகட்டப்பட வேண்டிய பகுதி, அணையில் நீர் நிரம்பியிருக்கும் பகுதிகள் பெரும்பாலானவை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உரியவை. எனவே திட்டத்தைத் தொடங்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அனுமதி தேவை. இப்பகுதிகளில் உருவாகும் நதிகளினால் வாணிபம் செய்துவந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், இந்தக் கட்டுமானத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு மதராஸைத் தலைமையாகக் கொண்ட பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியான ஜான் சைல்டு கேன்னிங்டன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானான வெங்கம் ராமய்யர் ஆகியோர் 29.10.1886-ல் ஒரு புகழ்மிக்க உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

அதன்படி, ''அணை கட்டுமானம் அமைந்துள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. அணை கட்டுமானத்துக்காக அப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள் போன்றவற்றை வெட்டிக்கொள்ளலாம். அதோடு அப்பகுதியில் உள்ள மீன் பிடிக்கும் உரிமை, கல்குவாரிகள், போக்குவரத்து போன்ற அனைத்து உரிமைகளும் பிரிட்டிஷ் மாகாணத்துக்கும் சொந்தம். அணைக்கான கட்டுமானச் செலவை பிரிட்டிஷ் அரசுதான் ஏற்க வேண்டும்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், 'இந்த ஒப்பந்தம் இன்றிலிருந்து (29.10.1886-ல் இருந்து) 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்' என்பதுதான்.  அணை கட்டுமானம் நடைபெறக்கூடிய பகுதியான 8000 ஆயிரம் ஏக்கருக்கான பணமாக ஏக்கருக்கு ஐந்து ரூபாய் என வைத்து, வருட குத்தகையாக 40 ஆயிரம் ரூபாயை பிரிட்டிஷ் அரசு, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குச் செலுத்தும்.

999 வருடங்களுக்குப் பிறகு என்னவாகும் என்ற கேள்வி எழலாம். மறுபடியும் இரண்டு மாநிலங்களும் சேர்ந்து மறுபடியும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

''999 ஆண்டு ஒப்பந்தம் என்பது ஏதோ அறியாமையில் போடப்பட்ட ஒப்பந்தம் என்று பலரும்  எண்ணக் கூடும். ஆனால் விஷயம் அதுவல்ல. இவ்வளவு பெரிய பொருட்செலவில், மனித உழைப்பில் உருவாகும் கட்டுமானம் நிரந்தரமான பலனை அளிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தின் பிரதிபலன்தான் இந்த ஒப்பந்தம்'' என்கிறார் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கிக்கொள்ளலாம் என்ற தீர்ப்பை வழங்கிய ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவில், கேரள அரசின் சார்பில் இருந்தவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான கே.டி.தாமஸ்.

அனுமதி ரெடி, திட்டங்கள் ரெடி. அடுத்தது என்ன? கட்டுமானப் பணிகள்தான். மேற்கே போகும் தண்ணீரைத் திருப்ப அணை பயன்படும். ஆனால், தண்ணீரைத் தமிழகத்துக்குக் கொண்டுவர என்ன செய்வது?  அணையில் இருந்து நீரை 14 கி.மீட்டர் தூரமுள்ள தேக்கடி பகுதிக்கு கால்வாய்கள் மூலம் கொண்டுவந்து, அங்கிருந்து, மலைகளைக் குடைந்து குழாய்கள் மூலம் தமிழகப் பகுதியான கூடலூரில் சேர்ப்பது என நீண்ட நெடிய திட்டம்.

இங்கே இன்னொரு பொறியாளரையும் சொல்லியாக வேண்டும். அவர் இ.ஆர்.லோகன். அணை கட்டுமானத்தில் பென்னிகுக் ஈடுபட, அணைப்பகுதியில் இருந்து தண்ணீரை தேக்கடிக்கு கொண்டுவருதல், அங்கிருந்து தமிழக பகுதிகளுக்கு திருப்புதல் போன்ற பணிகளை மேற்கொண்டார் லோகன். இன்றும் தேனியில் இருக்கும் மக்கள் தங்களுடைய  வாரிசுகளுக்கு லோகன், பென்னிகுக் பெயர்களையே வைத்திருக்கிறார்கள்.

கட்டுமானத்துக்குத் தேவையான அரவை இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள் என அனைத்தும் இப்பகுதிகளில் உள்ள ஊர்களில் இருந்தும், சில நேரங்களில் வெளிநாடுகளில் இருந்தும்கூட கொண்டுவரப்பட்டன.

''தென்னை வளர்த்தவன் தின்னுட்டு சாவான். பனை வளர்த்தவன் பாத்துட்டு சாவான்'' என்பது கிராமத்துப் பழமொழி. அணைகட்ட பென்னிகுக் அழைப்பு விடுத்தபோது, இதனால் என்ன பயன் என்றே அறியாத மக்கள், தங்கள் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்தார்கள். அணையைக் கட்டி எழுப்ப மக்கள் தயாராகத்தான் இருந்தனர். ஆனால் இயற்கைதான் தயாராக இல்லை. விளைவு?

- வரலாறு தொடரும்...


- உ.சிவராமன்

படங்கள்:
வீ.சக்தி அருணகிரி

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ