Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை....( மினி தொடர்- 3 )

ராமர் பாலத்தை காக்கவும், சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கவும் இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்தது வி.ஹெச்.பி. இதில் தலைவராக டாக்டர் கல்யாணராமன் என்பவரையும் பொதுச்செயலாளராக வேதாந்தத்தையும், தேசிய செயலாளராக ராமநாதபுரம் வக்கீல் குப்புரமுவையும் (இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்) நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் டெல்லியிலிருந்து ராமேஸ்வரம் வரைக்கும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த, செயல்திட்டம் வகுத்தார்கள். இவர்களுக்கு ஆதரவு தருவதற்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டார்கள்.

இந்த நிலையில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய, ஓர் ஆலோசனைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக அறிவித்தது. 

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் நம்பகத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற வெளிப்படைத் தன்மை ஆகியவை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், இவர்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர்கள் என்றும், இந்த குழு அமைப்பது குறித்து ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்புக் குழுவைக் கலந்தாலோசிக்கவில்லை என்றும், இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்த போதிலும் அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் ராம சேது பாதுகாப்பு குழு பிரச்னையை  கிளப்பியது.

அது மட்டுமில்லாமல் 2007 ஆம் ஆண்டு, ராமேஸ்வரத்தில் அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியாவை அழைத்து  மிகப்பெரிய ராம சேது பாதுகாப்பு மாநாட்டை நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட வடநாட்டு சாமியார்களெல்லாம் திமுக தலைவர் கருணாநிதியை காய்ச்சி எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஜுலை 27 ல்  மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் தலைமையில் மக்கள் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல இந்து அமைப்புகள் பங்கேற்றன.

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் நடந்த இந்த மாநாட்டில் பேசிய தொகாடியா, ‘’புராதன சின்னங் கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ராமேஸ்வரத்தை புனிதத் தீவாக பிரகடனம் செய்ய வேண்டும். ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது ஒருநாளும் நடக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்று ஆவேசமாக கூறியது அங்கு வந்தவர்களை உசுப்பேத்தும் விதமாக இருந்தது.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, முரசொலியில் சேது சமுத்திர திட்டத்தின் நன்மைகளை விளக்கி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து `சேது' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதற்கு போட்டியாக  ராமசேது பாதுகாப்பு இயக்கம், `ராமசேது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளிட்டது.

வி.ஹெச்.பி.யின் செயல் தலைவராக இருந்த வேதாந்தம், ராமேஸ்வரத்திலயே தங்கியிருந்து போராட்ட வேலைகளை கவனித்து வந்தார். அவர்,  ‘’ராமர் பாலம் இந்து மக்களின் நம்பிக்கையின் சின்னம். இந்தியாவின் பராம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது. சேது கால்வாய் திட்டத்துக்காக 6 வழிகள் கூறப்பட்டுள்ளன. ராமர் பாலத்தை இடிக்காமல் எளிய வழிகள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்ததாது ஏன்?

சென்னை ஐகோர்ட்டு இந்த திட்டம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மீறி,  20 சதவீதம் அகழ்வு பணி நடந்துள்ளது. 20 சதவீத பாலத்தை உடைத்துள்ளதாக  தெரிவித்துள்ளனர். இது சட்டத்தை மீறும் செயல். ராமர்பாலம் இருக்கும் பகுதியில் தோரியம், டைட்டானியம்  போன்ற தாதுக்கள் பெருமளவில் கிடக்கிறன. இந்த கனிம பொருட்களை கடத்துவதற்கும், அழிப்பதற்கும் திட்டமிட்டு அமெரிக்கா செய்து வரும் நிர்ப்பந்தம் காரணமாகவே ராமர் பாலத்தை உடைக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு மத்திய காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் திமுக அரசும் துணை போகிறது. எங்கள் எதிர்ப்பையும் மீறி ராமர் பாலத்தை உடைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்’’ என்று தொடர்ந்து பேசி வந்தார்.

இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தன் பங்குக்கு, ‘’ சேது சமுத்திர திட்டம் தேவையில்லாதது என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். தற்போது அரசு தரப்பில் அமைக்கப்பட்ட குழுவும் இதைத்தான் கூறியுள்ளது. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக எம்.பி. ஒருவர் பலகோடி சம்பாதித்து தன் மனைவி, மகன் பெயரில் பல கம்பெனிகள் நடத்தி வருகிறார். மத்திய அரசு இதேபோல மற்ற மதத்தவரின் அடையாளங்களை அழிக்க அரசு முன் வருமா’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே கலைஞர் இந்த விவகாரத்தை சுமுகமாக டீல் செய்யாமல், இந்து அமைப்புகளை கிண்டல் செய்யும் தொனியில் ‘’ராமன் என்ன எஞ்சினியரா, அவர் எந்த கல்லூரியில் படித்தார் ?’’ என்று கேட்டு வைக்க, இதையும் இந்து மத அமைப்புகள் கெட்டியாக பிடித்துக்கொண்டன.

“இலங்கை யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் ராமன் தான் கட்டிய பாலத்தை அவனே இடித்து விட்டான்’’ என்று ராமேஸ்வரத்தில் பிரபல புரோகிதரான பண்டாஜி ஒருவர், ராமாயண புத்தகங்களை ஆதாரமாக வைத்து கூற, அவரை காங்கிரசின் கைக்கூலி என்று திட்டியது இந்து இயக்கங்கள்,

இதற்கிடையே சேது கால்வாய் திட்டம் ஏன் வேண்டுமென்று திமுக ஊரெங்கும் பொதுக்கூட்டம் போட்டது. ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தமிழகம் முழுக்க சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இன்னொரு பக்கம் இத்திட்டம் மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டமென்று மீனவர் அமைப்புகளும் சில தொண்டு நிறுவனங்களும், தங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தன.

இந்த  நிலையில் அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராட்சத மண் அள்ளும் இயந்திரத்தின் முகப்பு பகுதி கடலுக்குள் முறிந்து விழுந்தது. அதை தேடி எடுப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. சேது சமுத்திர திட்ட கழகம் சில நாட்கள் அகழ்வுப்பணிகளை நிறுத்தி வைத்தது. 'இது கடவுள் ராமருடைய சக்தியினால் ஏற்பட்டது, இனியாவது வேலை செய்வதை நிறுத்துங்கள்’ என்று பல்வேறு இந்து மத அமைப்புகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தன.

சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  வழக்கு பிரச்னையை வேறு திசைக்கு இழுத்து சென்றது. இந்து தனிநபர் சட்டவாரியம் சார்பில் இந்த வழக்கு போடப்பட்டது. அதில், "சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் பழமை வாய்ந்த ராமர் பாலம் சேதமடையும், அழிந்து விடும். நாசா நிறுவனத்தின் கார்பன் டேட்டிங் முறைப்படி ராமர் பாலம் 17 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்பட்டுள்ளது. எனவே ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டது.

இந்து அமைப்புகளின் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என்று  இப்பிரச்னை ஒருபக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருந்தாலும், இந்த போராட்டங்களின் பின்னணியில் இலங்கையின் பங்களிப்பு இருக்கிறது என்று தமிழகத்தில் சிலர் கூற ஆரம்பித்தார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் நியாயமானதாக இருந்தது. ‘’ஆரம்பம் காலம் தொட்டே சேது கால்வாய் திட்ட்டத்தை  இலங்கை அரசு எதிர்க்கிறது" என்பதுதான் அது. 

அதற்கு காரணம், அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும், கொழும்பு துறைமுகம் பாதிக்கப்படும் என்ற பயம். அவர்கள் நாட்டை தொட்டுத்தான் உலக கப்பல்கள் இந்தியாவுக்கு வருகிறது. அது மட்டுமில்லை, இந்தியாவின் கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் கப்பல்களும் இலங்கையை சுற்றித்தான் செல்கிறது.

இதனால் அதிகமான வருவாய் இலங்கை துறைமுகங்களுக்கு கிடைக்கிறது.  எனவே இத்திட்டம் வரமால் இருக்க, அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்கிறது. வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல, ஆழமான கால்வாய் அமையப் போவது வடக்கு இலங்கைக்கு அருகே.  அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி. அவர்கள் ஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும்.

மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால்வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களை கரைக்கே கொண்டு வந்து விடுவார்கள் என்று இலங்கை அரசு தங்களுடைய பொருளாதார, அரசியல் காரணங்களை மையமாக வைத்து இந்தியாவில் சேது கால்வாய் திட்ட எதிர்ப்புக்கு பின்னணியில் இருப்பதாக அப்போது சொல்லப்பட்டது. (சேது கால்வாய் திட்டம் மட்டும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்றப்பட்டிருந்தால் இலங்கை போரில் புலிகள் தோல்வி அடைந்திருக்க மாட்டார்கள் என்று இப்போது சொல்வோரும் உண்டு).

இப்படி ஆதரவும் எதிர்ப்பும் என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், சுப்ரமணியசாமி இந்த பிரச்னையில் தடாலடியாக குதித்தார்.

                                                                                                                                                                                         தொடரும்...

                                                                                                                                                                                -செ.சல்மான்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close