Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 3)

2007-ல் ‘குரங்கு’ குமார் கொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக 2012 ஜனவரி 7- ம் தேதி ரவிப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டான். சில தினங்களில் ‘பட்டரைவாக்கம்’ சிவா உள்ளிட்ட 12 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்தது காவல்துறை. இனிதான் ஆரம்பம் என்றது அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைகள். 2012ம் வருடம் முழுக்கவே நடந்த தொடர்கொலைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு கருப்பு ஆண்டாகவே அமைந்துவிட்டது. 2012ல் அதிர்வலையை ஏற்படுத்திய கொலைகள் இவை…

கொலையில் முடிந்த கூடா நட்பு!

ரவிப்பிரகாஷின் நண்பன் சுரேஷ். செங்கல்பட்டு தேமுதிக நகர செயலாளர், 1வது வார்டு கவுன்சிலர். ரவிப்பிரகாஷ் கொலைக்குப்பிறகு தனக்கும் ஆபத்து என்று உணர்ந்தான் சுரேஷ். ரவிப்பிரகாஷ் கொலைக்கு பின்பு தனியாக எங்கும் செல்ல வேண்டாம். 'கட்சி அலுவலகத்தில் முடிந்தவரை தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும்' என நட்பு வட்டாரங்கள் சுரேஷை எச்சரித்தன. ரவிப்பிரகாஷ் இறந்த சோகத்தை மறக்க, வெளியூரில் சிலநாள் பொழுதை கழிக்க திட்டமிட்டான் ரவிப்பிரகாஷ்.

பொங்கல் முடிந்த கையோடு ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கல் அன்று இரவு, ஊட்டிக்கு செல்வதற்காக நண்பர்களுடன் தனது அலுவலகத்தில் காத்திருந்தான். எதிர்பாராதவிதமாக தேமுதிக பிரமுகர் ஒருவர் இறந்ததால் டூர் கேன்சல் ஆனது. தன்னுடன் இருந்த நண்பர்களை அனுப்பிவிட்டு தனது அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தான் சுரேஷ். திடீரென சுரேஷ் அலுவலகம் உள்ளே நுழைந்தது ஒரு கும்பல். அந்த கும்பல் வெளியேறியதும் தலை சிதைந்த நிலையில் கிடந்தான் சுரேஷ்.

தகவல் அறிந்து ஓடிவந்தார் செங்கல்பட்டு தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசன். தொடர் கொலைகளால் இரவு முழுக்கவே செங்கல்பட்டில் பதட்டம் தொற்றிக் கொண்டது. கொலை செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை சுரேஷின் உடலை வாங்க மாட்டோம் என செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தார் அனகை முருகேசன். பின்பு வழக்கம் போல சிலமணிநேரம் கடையடைப்பு, சிலநாள் பரபரப்பு என முடிந்தது.

படிக்கும் போதிலிருந்தே சுரேஷும் ரவிப்பிரகாஷும் நெருங்கிய நண்பர்கள். வீட்டின் அருகே தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தை நடத்திக் கொண்டிருந்தான் சுரேஷ். கட்டுமான பொருட்களான மணல், மண் உள்ளிட்டவற்றை டீலிங் செய்து கம்பெனிகளுக்கு சப்ளை செய்துவந்தான்.  அன்டர்கிரௌண்ட் டீலிங் என்பதால் நண்பன் ரவிப்பிரகாஷ் துணை தேவைப்பட்டது.

குரங்கு குமாரை கொலைசெய்தபின் செங்கல்பட்டில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தபோது, சுரேஷ் மூலமாக வேரூன்றிக் கொண்டான் ரவிப்பிரகாஷ். ரவிப்பிரகாஷ் வளர்ச்சிக்கு சுரேஷ்தான் முக்கிய காரணம் என்பதால், குமார் ஆதரவாளர்கள் சுரேஷ் மீது குறிவைக்க காரணமாகிவிட்டது.

கட்டப்பஞ்சாயத்தில் கிடைத்த வருமானத்தில் சிங்கப்பூர், மலேசியா என நண்பன் ரவிப்பிரகாஷுடன் சுற்ற ஆரம்பித்தான் சுரேஷ். 'ரவிப்பிரகாஷுடன் பழக வேண்டாம். இந்த நட்பு விபரீதமாக முடிந்துவிடும். கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடும்' என்று எச்சரித்துக் கொண்டே இருந்தார் எம்எல்ஏ. அனகை முருகேசன். எம்எல்ஏ எச்சரித்தது போலவே, ஒரு நாள் நடந்தே முடிந்தது.

பிறந்த நாளே இறந்த நாள்!

‘சிங்கபெருமாள் கோவில் திமுக பிரமுகர் முனிராசு என்பவரை போட்டுத்தள்ளிய இரண்டெழுத்து தாதா,  முனிராசுவின் வாரிசையும் கணக்கு தீர்க்க தயாராகி வருகிறாராம். பதிலுக்கு வாரிசும் அரிவாளைத் தூக்க, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என பதறிக்கிடக்கின்றது செங்கல்பட்டு’ என 08.12.2010 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் பெட்டி செய்தியாக வெளியிட்டிருந்தோம். நாம் சொன்னது போலவே 2012 நவம்பர் 4ம் தேதி அந்த கொலை நடந்தேவிட்டது. அந்த இரண்டெழுத்து தாதா, அதிமுகவின் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வேலு.

சின்ன வயசில் ஒரு ஸ்வீட் கடையில் ஆரம்பித்தது குமரவேலு என்கிற வேலுவின் வாழ்க்கை. காட்டாங் கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்த முனிராசு என்பவரின் தம்பி ராமு உடன் வேலுவிற்கு  நட்பு ஏற்பட்டது. இதனால் ராமுவின் சாராயக் கடையில் வேலைக்கு சேர்ந்தான் வேலு.  வேலுவின் நண்பரை ராமுவின் ஆட்கள் கொலை செய்ததால் நட்பில் விரிசல் ஏற்பட்டது.
 

இதனால் தன்னை வளர்த்து விட்ட ராமுவையே 2006ல் தீர்த்துக் கட்டினான் வேலு. ராமுவின் அண்ணன் முனிராசு தன்னை பழிதீர்க்கக் கூடும் என்பதால், 2007ல் முனிராசுவையும் வெட்டிச்சாய்த்தான் வேலு. அதைத் தொடர்ந்து 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக ஆனான்.

ரவுடி வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டான். முனிராசுவின் மகன் கதிரவன், தந்தையை கொன்ற வேலுவின் கதையை முடிக்க காத்திருந்தான். 2012 செப்டம்பர் 4ம் தேதி தனது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாட 50 கிலோ கேக் ஆர்டர் செய்திருந்தான் வேலு. காலையில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றவனை, கொன்றது கூலிப்படை. வழக்கமான அதே தலைச்சிதைவு. காலையில் நடந்த சம்பவத்திற்கு மதியமே தனது கூட்டாளிகளுடன் கடலூரில் ஆஜராகிவிட்டான் கதிரவன்.

கொலை செய்யப்பட்ட வேலுவின் மீது 3 கொலை வழக்கு, 10 கொலை முயற்சி வழக்கு, 7 அடிதடி வழக்கு என மொத்தம் 22 வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கின்றது.

மண்ணுக்குள் தள்ளிய மண் ஆசை!

செப்டம்பர் 4ம் தேதி நடைபெற்ற வேலுவின் கொலை பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே, அதேமாதம் 25 ஆம் தேதி தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் புருஷோத்தமன் கொலை செய்யப்பட்டது உள்ளாட்சி பிரமுகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து உள்ளாட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது காவல்துறை.

வழக்கம் போல ஓட்டேரி காவல்நிலையம் அருகில் உள்ள டீக்கடைக்கு  சென்ற புருஷோத்தமனை திட்டமிட்டு, வட்டம் போட்டது  கூலிப்படை. கதறிக் கோண்டே காவல்நிலையம் நோக்கி ஓடியவரை கைமா செய்து கலைந்தது அந்த கும்பல். தகவலை கேட்டு எஸ்.பி. மனோகரன் ஓடிவர, ‘கூலிப்படைகள் மீது போலீசார் கரிசனம் காட்டுகின்றார்கள்!’ என கொந்தளித்த ஏரியாவாசிகள்,  எஸ்.பியை வளைத்து நின்றார்கள். அவர்களுடன் மல்லுக்கட்டிய பிறகுதான் பிரேதத்தை ஏரியாவில் இருந்து எடுக்க வேண்டியதாயிற்று.

மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன், ஆரம்பத்தில் அம்பேத்கர் இயக்கங்களில் இருந்து பின்பு அதிமுகவில் சேர்ந்தவர். 2007- லிருந்து பல கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து வந்தார். 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவரானார். இதனால் திமுக பிரமுகர் போகி கிருஷ்ணன் என்பவருக்கும் இவருக்கும் இருந்த முன்விரோதம், முட்டிக்கொண்டது. இந்த முன்விரோதம்தான் கொலையில் முடிந்தது.

கொலை நடந்த அன்றே போகி கிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். “கொலை செய்யப்பட்ட புருஷோத்தமன் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது. போகி கிருஷ்ணன் மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 11 வழக்குகள் உள்ளன. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறுதான் கொலைக்கு காரணம்” என்றார் காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரன்.

ஒரு உயிருக்கு மூன்று கொலை!

கொலைவெறி அடங்காத பழிக்குப்பழி கொலைக்கு அடையாளம், செங்கல்பட்டு அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரின் கொலை.
நண்பர்களுடன் செங்கல்பட்டு வந்திருந்தார் பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார். மாலை ஆறுமணிக்கு நகரின் மையப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நண்பர்களுடன் இருந்தவர், பக்கத்தில் உள்ள ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றார். பணத்தை எடுத்து வெளியே வந்தவரை கூறு போட்டுவிட்டு கிளம்பியது கூலிப்படை.

இந்த சம்பவம் சுமார் 30 நொடிகளிலேயே முடிந்துவிட்டது. பாமகவை சேர்ந்த திருக்கச்சூர் ஆறுமுகம், திமுகவை சேர்ந்த த.மோ. அன்பரசன் ஆகியோர் விஜயகுமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்கள்.

அதுவரை நடந்த எல்லா கொலைகளுக்கும்,  சம்பவ தினமே ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் எதிர்தரப்பில் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இதில் குற்றவாளிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது காவல்துறை.

2009ல் பாமக தரப்பில் பி.வி. களத்தூர் ஊராட்சி மன்ற தலைவரானான் விஜயகுமார். பாமகவில் இருந்து திமுகவிற்கு தாவிய விஜயகுமார், 2011ல் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவரானான். அரசியல் தரப்பில் வெளிப்படையான எதிரிகளும் விஜயகுமாருக்கு இல்லை.

இதனால்தான் கெலையாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.  ஒருவழியாக சிலமாதங்கள் கழித்து அதே பகுதியை சேர்ந்த  எம்ஜிஆர் மன்ற செயலாளர் குப்பன் தரப்பினர்தான் கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனால் 2013-ல் மறைமலைநகரில் குப்பன், விஜயகுமார் தரப்பினரால் கொலை செய்யப்பட்டார்.

அதிமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளரான குப்பனின் மகன் நித்யானந்தமும் 2014-ல்  அமைந்தகரையில் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விஜயகுமாரின் கொலைவழக்கில் முதல் குற்றவாளியான துரைதாஸ் என்பவனும் 2014-ல் கொலை செய்யப்பட்டான்.

ஒரு கொலைக்கு பழி தீர்ப்பதற்காக மூன்று கொலைகள் அரங்கேறியும் கொலை வெறியை தீர்த்துக் கொள்ள முடியாத பூமியாக இருக்கின்றது பொன்விளைந்த களத்தூர். வீச்சரிவாள்களுடன் வெடிகுண்டுகள் கைகோர்த்தன.

அறுவா சீவும்…

- பா.ஜெயவேல்

 

இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close