Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முதல்ல சர்ச்சை இடிச்சாங்க... இப்போ ஸ்கூலை மூடுறாங்க...!' - சர்ச்சையில் கொடநாடு எஸ்டேட்!

டந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுமதியின்றி கட்டடம் கட்டியதாக எழுந்த புகார், பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையை அடைத்ததாக எழுந்த புகார் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய கொடநாடு எஸ்டேட், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ. துவக்கப் பள்ளியை திட்டமிட்டு எஸ்டேட் நிர்வாகம் மூடி, அங்கு படித்து வந்த மாணவர்களை அலைகழிப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விசாரிக்க கொடநாடு எஸ்டேட் பகுதிக்கு சென்றோம். ராணுவ பாதுகாப்புக்கு நிகராக பல அடுக்கு பாதுகாப்புடன் இருந்தது எஸ்டேட். பல அடுக்கு சோதனையை கடந்துதான் பள்ளி உள்ள இடத்துக்கே செல்ல முடிந்தது. செய்தியாளர்கள் என்றால் நிச்சயம் அனுமதி மறுக்கப்படும் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை காண செல்வதுபோல உள்ளே சென்றோம். மிகப்பிரம்மாண்டமான அந்த கொடநாடு எஸ்டேட்டின் ஒரு பகுதியில் இருந்தது அந்த பள்ளி கட்டடம். ஆனால், பள்ளி இருந்ததற்கான அடையாளங்கள் இல்லாத அளவுக்கு அறிவிப்பு பலகை உள்ளிட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. கட்டடத்தை அருகில் சென்று பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ நிச்சயம் அனுமதி இல்லை. எஸ்டேட் வழியாக அண்ணா நகரை அடைந்தோம்.

இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்த பள்ளியில் படிக்கிறார்கள். வெறும் 1 கி.மீ. தூரத்தில் இருந்த பள்ளி, இப்போது 6 கி.மீ. கடந்து வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த அலைக்கழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பள்ளியைப் பற்றி கேட்டால், பலர் பதில் ஏதும் பேசாமல் ஒதுங்கி கொண்டனர். சிலர்,  "பெரிய இடத்து விவகாரம்... நாங்க என்ன செய்ய முடியும்?" என்றனர். நீண்ட முயற்சிக்கு பின்னர் தம்பு என்பவர் மட்டும் நம்மிடம் பேசினார்.

அப்போது, "என் பையன் இங்கதான் 5 ஆம் வகுப்பு படிக்கறான். எங்க வீட்டுல இருந்து 1 கி.மீ தூரத்துல ஸ்கூலுக்கு போயிடலாம். ஆனா திடீர்னு, "இந்த ஸ்கூலை வேற இடத்துக்கு மாத்தறோம். இங்கே காட்டு எருமை தொந்தரவு இருக்கு. அதனால 'டிசி' கேட்டு வாங்கிக்கோ'னு சொன்னாங்க. நான் மறுத்தேன்.

ஆனா எல்லோரும் 'டிசி' வாங்கிட்டாங்க. ஸ்கூலையும் மூட எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டாங்க. அதனால, நானும் என் பையனோட 'டிசி'யை வாங்கி வேற ஸ்கூலுக்கு அனுப்பி வைச்சிட்டேன். இப்போ தினமும் என் பையன் ஸ்கூலுக்கு 6 கி.மீ தூரம் போக வேண்டியது இருக்கு.

இப்போதைக்கு எஸ்டேட் நிர்வாகம், லாரி வைச்சு பசங்களை அழைச்சுட்டு போறாங்க. ஆனா, இதை எவ்வளவு நாளுக்கு பண்ணுவாங்கன்னு தெரியல. அப்புறம் பசங்க எப்படி ஸ்கூலுக்கு போவாங்கனு தெரியலை" என்றார் தம்பு.

இது தொடர்பாக கொடநாடு ஊராட்சியின் முன்னாள் தலைவர் பொன்.தோஸிடம் பேசியபோது, ''இந்த ஸ்கூல் ரெக்கார்டு படி 60 வருஷத்துக்கு மேல இயங்கிட்டு வருது. எப்படியும் 1950களிலேயே இந்த பள்ளி செயல்பட துவங்கியிருக்கணும். கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பழமையானது இந்த ஸ்கூல்.

இங்கே இருக்குற 70 வயசுக்கு மேலானவங்க எல்லாம் இந்த ஸ்கூல்ல படிச்சவங்கதான். இப்போ இந்த ஸ்கூல்ல 35 பேர் படிக்குறாங்க. ஸ்கூல்ல இருந்து 1 கி.மீ தூரத்துலதான் இவங்க வீடு. இப்போ திடீர்னு காட்டு விலங்கு பிரச்னை இருக்குனு பெற்றோரை மிரட்டி எழுதி வாங்கிட்டு பசங்கள வேற ஸ்கூலுக்கு மாத்துறாங்க. இந்த ஸ்கூல் இருக்குற இடம் கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும். ஆனா, புது ஸ்கூல் அமைஞ்சிருக்குற இடம் ரொம்ப மோசமானது. அங்கேயும் காட்டு விலங்குகள் வரத்தான் செய்யும்.

ஏற்கனவே மக்கள் பயன்படுத்துற பொது பாதையை 'கேட்' போட்டு மூடி மக்களுக்கு தொந்தரவு கொடுத்தாங்க. போராடிதான் மக்கள் அந்த பக்கம் போயிட்டு வர அனுமதி வாங்கினோம். இப்போ, ஸ்கூலை மூடி குழந்தைகளையும் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இந்த எஸ்டேட்டை 90கள்லதான் இவங்க வாங்குனாங்க.

அதுக்கு முன்னாடி இங்கே ஒரு சர்ச், இந்த ஸ்கூல்னு மக்கள் பயன்படுத்துற நிறைய இடம் இருந்துச்சு. முதல்ல சர்ச்சை இடிச்சாங்க. இப்போ ஸ்கூலையும் மூடிட்டாங்க. எஸ்டேட்டுக்குள்ள யாரும் வரக்கூடாதுன்னு நினைக்குறாங்க. அதான் பல வருஷமா மக்கள் பயன்படுந்திகிட்டு இருந்த சர்ச், ஸ்கூலை எல்லாம் இல்லாம பண்றாங்க. இன்னும் இருக்குறது, எஸ்டேட்டை தாண்டி இருக்கிற அந்த அண்ணா நகர் பகுதி மட்டும் தான். விட்டா இவங்க அதையும் காலி செஞ்சிடுவாங்க. இதை சும்மா விடப்போறதில்லை. பெரிய அளவுல போராட்டம் நடத்தப்போறோம்" என்றார் ஆவேசமாக.

பள்ளியை நடத்தி வந்த சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினரிடம் பேசியபோது, ''நாங்க என்ன சார் செய்ய முடியும்?. அரசு அதிகாரிகளே வாயை மூடிட்டு இருக்கும்போது நாங்க என்ன செய்ய முடியும்?. இந்த ஸ்கூலுக்கு ரொம்ப நல்ல பேர் உள்ளது. எங்கிருந்தோ வந்த நிர்பந்தத்துல ஸ்கூலை மூடிட்டாங்க. இதுல நாங்க சொல்ல எதுவுமில்லை" என்றனர்.

திடீரென பள்ளியை மூட என்ன காரணம் என்று அந்த பகுதிவாசிகள் சிலரிடம் விசாரித்தபோது, ''எஸ்டேட் உள்ளே எஸ்டேட்டை சாராத யாரும் வரக்கூடாதுன்னு நிர்வாகம் நினைக்குது. அதுதான் கொஞ்ச வருஷம் முன்னாடி, நீண்டகாலமாக பொதுப்பாதையா இருந்ததை கூட அடைச்சாங்க. இப்போ வரைக்கும் நீங்க உள்ளே போகணும்னா எங்கே? ஏன்? எதுக்கு?னு ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க. புது ஆள் ஒருத்தர் கூட உள்ளே வர முடியாது.

யாரும் வரவே கூடாதுங்கறதுதான் அவங்க எண்ணம். இப்பவும் அதே காரணத்துக்காகதான் ஸ்கூலை மூடி இருக்காங்க. ஸ்கூல் இருக்குறதால கல்வித்துறை அதிகாரிகள், சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் அடிக்கடி எஸ்டேட் உள்ளே வர வேண்டி இருக்கு. இந்த ஸ்கூலுக்கு பக்கத்துலதான் சின்ன பங்களா இருக்கு. சில சமயம் அம்மா (முதல்வர் ஜெயலலிதா) வந்தா இங்க தங்குவாங்க. அதனால, அவங்க தனிமை பாதிக்குதுனு நினைச்சிருக்கலாம். அதுக்காக பசங்களை அலைக்கழிக்கறது என்பது கொடுமை" என்றனர்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''இப்போ ஸ்கூல் இருக்குற இடத்துல காட்டு விலங்குகள் நடமாட்டம் இருக்கு. எங்களுக்கு 'டிசி' கொடுங்கனு பெற்றோர் கேட்டதாலதான் ஸ்கூல் நிர்வாகம் 'டிசி' கொடுத்திருக்கு. எல்லோரும் 'டிசி' வாங்கிட்டதால அந்த பள்ளி மூடப்பட்டிருக்கு. மத்தபடி ஒண்ணுமில்லை" என்று மட்டும் சொன்னார்கள்.

தூரத்தை காட்டி மாணவர்கள் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு கி.மீ.க்கு ஒரு துவக்கப்பள்ளி என்ற திட்டத்தை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், அதே அதிகாரிகளின் கண் முன்னால், அதுவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என சொல்லப்படும் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள துவக்கப்பள்ளி மாற்றப்படுவதுதான் வேதனை!

ச.ஜெ.ரவி

படங்கள்:
தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ