Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 3)

ரு சமவெளிப்பகுதியில் பாய்ந்து அப்பகுதியை வளமைப்படுத்தும் ஆற்றின் குறுக்கே அணையை கட்டி, வறட்சியான காலங்களிலும் அப்பகுதியினை செழுமையாக வைத்திருக்கும் வகையில்தான் பொதுவாக ஒரு அணையின் அடிப்படை அறிவியல் இருக்கும். ஆனால், ஒரு சமவெளிப் பகுதியை நோக்கி செல்லும் நீரைத் தடுத்து, அதனை பயன்படுத்தி புதிதாக இன்னொரு சமவெளியை வளமைப்படுத்தும் திட்டமாக ஒரு திட்டம் செயல்படுகிறது என்றால் அது முல்லை பெரியாறு அணைக்கட்டு திட்டமேயாகும்.

அணையை எழுப்ப வேண்டும் என்ற வைராக்கியத்தில் பென்னி குக் அணையையும், ஆர்.லோகன் சுரங்கப்பாதையும் வெட்டத் தொடங்கினர். ஆனால் இயற்கை அவர்களை தடுத்தது. கடல்மட்டத்திலிருந்து 2900 அடி உயரத்தில் அடர்ந்த காட்டுக்குள் பெய்த அடை மழையும், அப்பகுதியில் இருந்த கொசுக்களும், பூச்சிகளும் அணைக்கட்டும் பணியை மிகவும் இம்சித்தது.

அணை எழும்புவதற்குள் மழை அதனை அடித்து சென்றுவிடும். இப்படி பேய் மழை பிடித்தாட்டிய காலத்திலும், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும்போதும் தாம் கட்டிய அணையை காப்பாற்றுவதற்காக கைகளை இணைத்து, மனித சங்கிலியாக வருகின்ற தண்ணீரை எதிர்த்து உறுதியாக நிற்பார்களாம் தொழிலாளர்கள். உடனிருக்கும் மற்றவர்கள் அவசர அவசரமாக மணல்மூட்டைகளை , நின்றிருக்கும் மனித தடுப்பணையை ஒட்டி எழுப்பி நீரின் வேகத்தை குறைத்து நின்றிருப்பவர்களை மீட்பார்கள்.

காட்டாற்று வெள்ளம் வரும்போதெல்லாம் இதே கதைதான். அதன்பின் அதற்கான தீர்வாக, நீர்வரும் பாதைகளின்  வேகத்தையும், திசையையும் மாற்ற இடையிடையே 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை நீர்பிடிப்பு பகுதிக்குள் கட்டியுள்ளனர்.

அணை கட்டுமானப்பணி முடியும் நேரத்தில், நீரின் பாதையினை திசை திருப்பி வெளியேற்ற அணையை ஒட்டி பேபி அணை என்னும் தடுப்பணை கட்டப்பட்டது. இப்போது அணையை ஒட்டி தொடர்ந்து இருக்கிறது.

கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தங்குவதற்கு அணைப்பகுதிலேயே கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. மலையில் நிலவிய கொடூரமான விஷக்கடி, பூச்சிகள், கொசுக்களின் தாக்குதலால் பணியாளர்கள் கட்டுமானப்பணிகளை விட்டுவிட்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறியுள்ளனர். இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆங்கில மருத்துவத்தின் மூலம் பென்னி குக் உதவிய போதும்,”சாமிக்குத்தம், பூசாரியிடம் செல்ல வேண்டும்! ” என்ற மக்கள் பீதியிலேயே இருந்துள்ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த பென்னி குக், அணைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை தீயிட்டு கொளுத்தி, புதிதாக கூடாரங்களை எழுப்பியுள்ளார்.

கட்டுமானப்பணியின்போது பத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்களும், ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர் களும் இறந்துள்ளனர். அவர்கள் சமாதி இன்றும் அணைப்பகுதியில் இருக்கின்றது. அதேபோல் லோகன் தலைமையிலான குகைகள் அமைக்கும் பணியின் போதும், வெடிமருந்துகளால் ஏராளமான தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

இப்படி இம்சித்த இயற்கையால் அணைக்காக ஒதுக்கிய பணம் விரைவாக தீர்ந்தது. இதுபற்றி அரசாங்கத்திடம் முறையிட்டபோது, அரசும் அவர்களுக்கு கூடுதலாக பண உதவி செய்ய முன்வரவில்லை. ஆனாலும் தீவிரமாகிவிட்ட அணை கட்டும் பணி, அரசின் மவுனத்தால் முடங்கிவிடவில்லை. உடனடியாக இங்கிலாந்து சென்றார் பென்னி குக். தன்னுடைய சொத்துக்களையும் தன் மனைவியின் சொத்துக்களையும் விற்று, அதன் மூலம் அணை கட்டும் பணியை தொடர்ந்தார்.

இந்த முறை மிகுந்த முன்யோசனையுடன் களம் இறங்கியது பென்னி குக் குழு. இரண்டு பருவ மழைக்கும் இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு விரைவாக அணையை எழுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக எழுப்ப வேண்டும் என்ற உறுதியோடு அணையை எழுப்ப ஆரம்பித்தனர். சுண்ணாம்பு, கடுக்காய், கரும்புச்சாறு போன்ற பொருட்களான சுருக்கியால் கட்டப்பட்ட இந்த அணையின் சிறப்பு என்னவென்றால் தண்ணீர் படப்பட இதன் வலிமை இன்னும் அதிகமாகும் என்பதுதான். (சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதும் இதே சுருக்கியால்தான்). கட்டுமானம் நடைபெறும்போதும், இரவு நேரங்களிலும் அணைக்கு அருகிலுள்ள  தன்னுடைய வீட்டிலிருந்து அணை கட்டுமானப்பணிகளை கவனித்துக்கொண்டே இருப்பாராம்  பென்னி குக். அவரின் ஆசைப்படியே அணை எழுந்தது.

இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். கட்டுமானப்பகுதிகளில் கடுமையாக உழைக்கும் பொருட்டு, இரவு நேரங்களில் சாராயம் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி சாராயம் வழங்கப்பட்ட தொகையை கட்டுமானப் பணிக்கான கணக்குகளில் சேர்க்க முடியாது என்பதால் இதர செலவுகள் என்ற பெயரில் (others) குறிப்பிட்டுள்ளார்.

பூமிக்கு மேல் 155 அடி உயரத்தில்,  1241 அடி நீளத்தில் கம்பீரமாக எழுந்தது அணை. அதேவேளையில் அணைப்பகுதியிலிருக்கும் நீரினை 6100 அடி நீளமுள்ள கால்வாய் மூலம் தேக்கடிக்கு கொண்டு வரும் பணியும், அங்கிருந்து 5704 அடி நீளமுள்ள  குழாய்கள் மூலமாக தமிழகத்தின் பகுதிக்கு கொண்டு வரும் பணியும் முடிந்து அணை தயாரானது.

அக்டோபர் 10, 1895 அன்று தேக்கடி பகுதிகளில் இருக்கும் குழாய்கள் மூலம் முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் திறக்கப்படவிருந்த நேரத்தில், பென்னி குக் அழுதாராம். இவ்வளவு பெரிய பொருள், மனித செலவில் உருவாகியிருக்கும் திட்டத்திலிருந்து போகும் நீர்  சரியான இலக்கை அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுதிருக்கிறார். வெளியேறிய நீரை கூடலூர் வைரவன் ஆற்றுப்பகுதியிலுள்ள மக்கள் பொங்கல் வைத்து வரவேற்றனர். பென்னிகுக்கின் அழுகை சற்று நேரத்தில் ஆனந்தமானது.

பிரிடிஷ்காரரான பென்னி குக், ஆரம்பத்தில் மீசையில்லாமல்தான் இருந்திருக்கிறார். அணை கட்டுமான வேலையில் தன்னுடன்  பணிபுரிந்த மக்களுடன் வேறுபட்டு தெரியக்கூடாது என்பதற்காகவே தானும் மீசை வளர்த்தாராம்.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை கட்டிய பென்னிகுக், முல்லை பெரியாறு அணையை கட்டியதோடு , கொடைக்கானலிலுள்ள லேக்கிற்கான வடிவத்தையும் கொடுத்தவர். வறுமையை மட்டுமே சொத்தாக வைத்திருந்த மக்களின் இல்லங்களை அடித்துச்சென்றது பென்னி குக் திறந்துவிட்ட நீர்!

வரலாறு தொடரும்...


- உ.சிவராமன்
படங்கள் :
வீ.சக்தி அருணகிரி

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close