Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் அணு அரசியல்: மினி தொடர் -பகுதி-3

"என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எது என்றால், அணு குண்டுகளை தயாரிக்கும் திட்டத்தை வலியுறுத்தி பிரதமர் ரூஸ்வெல்டுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்து போட்டதுதான். ஆனாலும், சிறிது நியாயம் அதில் இருந்தது என்றால், அத்தகைய பேராபத்தை உருவாக்கும் அணு குண்டுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கி விடக்கூடும் என்பதுதான்!" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஒரு பேட்டியில்...

ராஜீவ் மரணத்துக்கு பின்னர் கிடப்பில் போடப்பட்ட கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தத்தை, 1991-ல் மீண்டும் கையில் எடுத்த இந்திய அணுசக்திக் கழகம், அந்த இடத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலை அமைக்க அனுமதி கோரியது. இந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. அணு உலை குறித்த பேச்சு கிளம்பும்போது எல்லாம் மக்கள் எதிர்ப்பை காட்டுவதும், பின்னர் திட்டம் முடங்கும்போது மக்கள் அடங்கிக் கிடப்பதும் வாடிக்கையாக இருந்தது.

இதற்கிடையே, கூடங்குளம் அணு உலை அமையப் பெற்றால் தேரிக்காடு என அழைக்கப்படும் வறட்சியான சுற்றுப்புறப் பகுதிகளில் நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அந்த பகுதியே நகரமாக மாறிவிடும் எனவும் கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. தங்களின் குழந்தைகளுக்கு உயரிய தரம் கொண்ட கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்றும், எங்கு நோக்கினும் வானுயர்ந்த கட்டடங்களும் கடைகளும் அமையும் என அப்பாவி மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.

அணு உலையால் கடல் தொழில் மட்டுமே பாதிக்கும் என்கிற கருத்து பரவியது. இதனால் மீனவ மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்தார்கள். அருகில் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மாற்று சமூகங்களை சேர்ந்தவர்களை மீனவ மக்களிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சி இது என்பதை இரு தரப்பினருமே புரிந்து கொள்ளவில்லை. ஆனாலும், கூடங்குளத்தில் என்ன வகையான அணு உலையை அமைப்பது, எந்த நாட்டின் துணையுடன் செயல்படுத்துவது என்பதை மத்திய அரசு இறுதி செய்யாததால், அணு உலைக்கான திட்டம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்த சூழலில், 1997- ம் ஆண்டு மீண்டும் அணு உலை குறித்த பேச்சு எழுந்தது. அப்போது பிரதமராக இருந்த ஹெ.டி.தேவகவுடாவும், ரஷ்யாவின் போரிஸ் எல்ஸ்டினும் இணைந்து அணு உலை தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில், 1988- ல் ஏற்கெனவே ராஜீவ் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விவரங்களுடன் சேர்த்து, மேலும் சில கருத்துக்களும் சேர்க்கப்பட்டு முழுமை பெறச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தமானது அணு உலை பற்றி மட்டும் அல்லாமல், இந்தியாவுக்கு அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது மற்றும் ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ரஷ்யாவின் தொழிநுட்பத்துடன், 11,400 கோடி ரூபாய் மதிப்பில் இரு அணு உலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்ட தகவல் வெளியானதும், மக்களிடம் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

அணு உலையை குளிர்விக்க, குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க இருப்பதாக அறிந்த குமரி மாவட்ட மக்களும் போராட்டத்தில் குதித்தனர். பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் எடுக்க மாட்டோம் என அதிகாரிகள் அறிவித்தனர். அப்படியானால் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படக் கூடும் என்கிற அச்சம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

சமூக ரீதியாக பிரிந்து கிடந்த மக்களை ஒன்றிணைத்து, போராட்டத்தை வலுப்படுத்தும் பணியில் சமூக ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் வல்லுநர்களும் ஈடுபட்டனர். ஜார்ஜ் கோமஸ், ஒய்.டேவிட், ஸ்டீபன் விக்டோரியா, ஆண்டன் கோமஸ், மைக்கேல்ராஜ் உள்ளிட்ட பலர் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து, "அணு உலை என்பது ஆபத்தானது. கதிர்வீச்சு ஆபத்து கொண்ட அணு உலையில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் நாசகார அணு உலையை மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அவசியம்’’ என பிரசாரம் செய்தனர்.

இது தவிர, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாபதி அடிகள், விவசாய சங்கத் தலைவர் மருங்க்கூர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு இயக்கத் தலைவரான பத்மதாஸ், மீனவர் சங்கத் தலைவர் பீட்டர், முன்னாள் எம்.எல்.ஏவான குமாரதாஸ், சுப.உதயகுமாரன், புஷ்பராயன் என பல்வேறு சமூக ஆர்வலர்களும் சமுதாய மற்றும் அரசியல் கட்சியினரும் மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஏறக்குறைய இந்தப் பகுதியின் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் அணு உலைக்கு எதிரான கருத்துடன் மக்களுக்கு ஆதரவாகவே நின்றனர்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், எதிரிம் புதிருமான அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் அமைப்புகளும் கூட, ‘அணு உலை வேண்டாம்’ என்ற கருத்தையே கொண்டிருந்தனர். மக்கள் நடத்திய போராட்டங்களில் திராவிட கட்சியுடன், இந்து முன்னணியும் பங்கேற்றது. எதிர்ப்பு கிளம்பிய போதிலும், அணு உலையை அமைப்பதற்கான பணிகளை தொடங்க அரசு திட்டமிட்டது. மக்கள் போராட்டம் வலுவடைவதை தடுக்கும் வகையில், இந்த பகுதியின் தொழில்வளம் மேம்படும் என்கிற கருத்தாக்கம் வேகமாக பரப்பப்பட்டது.

இதற்கிடையே, இந்த பகுதியில் அணு உலையை தொடங்க நிலம் கையகப்படுத்தி தருமாறு அரசை வலியுறுத்தியது, இந்திய அணு சக்திக் கழகம். விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு காட்டினர். இதனால் நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சிரமப்பட்டனர். இந்த நிலையில், மக்களின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி நிலத்தை எடுக்க அரசு திட்டமிட்டது.

அதனால், ‘நிலம் கொடுப்பவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயமாக அணு உலையில் வேலை கொடுக்கப்படும்’ என்கிற உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமே என்கிற நப்பாசையில், விவசாயிகள் தங்களின் நிலத்தை கொடுக்க முன்வந்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அடிமாட்டு விலைக்கு அரசு இந்த நிலங்களை எடுத்துக் கொண்டது.

929 ஹெக்டேர் நிலம், அணு உலை அமைய உள்ள இடத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அத்துடன், கூடுதலாக 150 ஹெக்டர் நிலம் குடியிருப்பு பகுதிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 1200 ஹெக்டேர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து இந்திய அணு சக்திக் கழகத்துக்கு கொடுக்கப்பட்டது.

ஆனாலும் மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டே இருந்தனர். 

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

அணு உலைக்கு எதிரான பாடல்கள், வீதி நாடகங்கள் மூலமாக கோவை, சென்னை, புதுவை என பல்வேறு பகுதிகளிலும் அணு உலைக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.

ஆனாலும், எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் அணு சக்தி கழகம் தீவிரம் காட்டியது.- ஆண்டனிராஜ்
படங்கள்:
எல்.ராஜேந்திரன்   

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

Displaying kudankulam_2.jpg

Displaying kudankulam_1.jpg

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close