Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 4)

முல்லை பெரியாற்றினை, 'அணை'  என்பதனை விட 'ஏரி' என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.  777 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேங்கும் நீரை தடுத்து தேக்கிவைக்க, மிகப்பெரிய தடுப்பாக 'அணை', அதிகப்படியாக இருக்கும்  நீரை வெளியேற்ற 'ஷட்டர்கள்', தமிழகத்திற்காக தண்ணீரை கொண்டுவர தனியாக ஒரு 'குகை கால்வாய்' என முழுக்க முழுக்க வித்தியாசமான கட்டுமானம் முல்லை பெரியாறு ஏரி. இதன் நீர்ப்பங்கீடு அதனை விட சுவாரஸ்யமானது. 155 அடி உயரத்தில் தேங்கும் நீரினையும் (10.574 டி.எம்.சி) முழுமையாக பயன்படுத்த முடியாது.

104 அடிவரை அணையில் நீர்மட்டம் இருக்கும் வரை, அந்த நீரை தமிழகம் பகுதி பயன்படுத்த முடியாது. அந்த நீரானது அணைப்பகுதியில் மீன்களை  வளர்ப்பதற்கும், படகு போக்குவரத்திற்கும் பயன்படக்கூடிய நீர். 104 அடிக்கும் மேலே அணையின் நீர்மட்டம்  உயர்ந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீரை கொண்டுவர முடியும்.  அணையிலிருந்து நீர் திறக்கப்பட்ட பின் தமிழகத்தில் தரிசாக இருந்த நிலங்கள் புஞ்சைகளாகின. புஞ்சைகள் நஞ்சைகளாகின.

அனைத்து நாகரிகங்களும்  நதிக்கரையிலே உருவாகும்!


முல்லை பெரியாறு நீர் தமிழகத்தில் தவழ, தமிழக  நாகரிகங்கள் விரிவடைய ஆரம்பித்தன. இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பகுதிகளில், தேயிலை தோட்டத்தொழிலுக்காக ஏராளமான மக்கள் தமிழகத்தின் பகுதிகளிலிருந்து கேரளாவிற்கு இடம்பெயர்ந்தனர். இந்த காலத்தில்தான் அங்கிருந்த பெரும்பான்மையான காடுகள் அழிக்கப்பட்டு, அவை எஸ்டேட்டுகளாகின. இந்த மக்கள்தான் இன்றைய இடுக்கி , மூணாறு பகுதிகள் உருவாக காரணமாக இருந்தவர்கள்.  

இனி பென்னி குக் கதைக்கு வருவோம். அணை கட்டுமானத்திற்கு பிறகு, சிறிதுகாலம் பொறியாளராக பணியாற்றியவரை அணையின் கட்டுமானம் குறித்து புத்தகம் எழுத மறுத்தார். அவருடன் பணியாற்றிய ஏ.டி.மெக்கன்சி,  'History Of Periyar River Project ' என்ற நூலில் அணையின் கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருட்கள், அவற்றின்  அளவு,  திட்டவரைவு குறித்த தகவல்களை விரிவாக  எழுதினார். இன்றும் மதுரை பொதுப்பணித்துறை பொறியாளர் அலுவலகத்தில் ஆவணமாக அந்த புத்தகம்  உள்ளது.

இயற்கையை பாதிக்காத வகையில் வாழப்பழகிய மனிதன், முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டத்தை கொண்டுவர  முயன்றான். ஆனால் மின்சாரம் தயாரித்தல் என வரும்போது, வருடம் முழுக்க (விவசாயத்திற்கு தேவைப்படாத நேரங்களிலும்) தண்ணீரை கொண்டுசெல்ல வேண்டும். அதோடு அணையின் நீரினை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். பிற காரியங்களுக்கு பயன்படுத்தகூடாது என 1886-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில், சில நிபந்தனைகள் மூலம்  திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

1886 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி,  இரு மாநிலங்களுக்கு இடையில் நீர் பங்கீடு தொடர்பான ஏதேனும் பிரச்னைகள் இருந்தால்,  இரு மாகாணங்களின் சார்பில் அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு ( Periyar Orbitary Tribunal) அமைத்து தீர்வு காண வேண்டும். 1935- களில் அமைக்கப்பட்ட இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, இரு மாகாணங்களுக்கும் சாதகமாகவே தீர்ப்பினை வழங்கியது.

அதாவது அணையின் நீரினை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம் என ஒரு நீதிபதியும் , பயன்படுத்தக் கூடாது என இன்னொரு நீதிபதியும்  தெரிவித்தனர். (முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக தொடரலாமா? வேண்டாமா ?  என அமைக்கப்பட்ட விசாரணையில்  சி.ஆர். பானுமதி மற்றும்  மதன்.பி.லோகூர் இரு வேறுபட்ட கருத்துக்களை   சொன்னதுபோல மேற்கண்ட தீர்ப்பும் வழங்கப்பட்டது).

பின் 1941ல் அமைக்கப்பட்ட ஒருவரை நீதிபதியாக (சர் நளின் ரஞ்சன் சட்டர்ஜி) கொண்ட  விசாரணை அமைப்பிற்கு மாற்றப்பட்டது. அதில், முல்லை பெரியாறு நீரினை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தக்கூடாது என திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இருந்தாலும் இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வராமலேயே, சில காலம் தள்ளிப்போனது.

காமராஜர் காலத்தில்...

இந்தியா சுதந்திரம் அடைந்து, தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது மின்சாரம் தயாரிப்பதற்காக அணையின்  நீரினை பயன்படுத்தும் திட்டம் வெற்றிபெற்றது. கடந்த அத்தியாயத்தில் சொன்னபடி, தேக்கடியிலிருந்து தமிழகப்பகுதிக்கு வரும் 6100 அடி  குழாய்  தண்ணீரை , முன் தடுப்பு அணைக்கு திருப்பி  (forebay dam ) அங்கிருந்து  நான்கு குழாய்கள் மூலம், கூடலூர் அருகிலுள்ள லோயர்கேம்ப் பகுதிக்கு கொண்டுவந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, பின் ஆற்றில் கலக்கப்பட்டது. முன் தடுப்பு அணையில்  அதிகப்படியாக நீர் இருக்கும்போது, இரைச்சல் பாலம் வழியாக  வெளியேறுகிறது.

இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தில், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசாவில் 13 சதவிகிதம் வீதமே தமிழகம், கேரளாவிற்கு தருகிறது என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான கே.டி. தாமஸ். 1954 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 1959 லேயே வெற்றி பெற்று லோயர் கேம்ப் பகுதியில் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அதற்கடுத்த வருடங்களிலேயே வைகை  அணை கட்டப்பட்டு, பெரியாற்றின் நீரை வைகை அணை பயன்படுத்தியது.

பெரியாறு - வைகை,  பரம்பிகுளம் - ஆழியாறு, நொய்யாறு- இடிந்தகரை  என தமிழகத்திற்கு சிறப்பான நீர் திட்டங்கள் அடுத்தடுத்து கொண்டுவரப்பட்டது காமராஜர் முதல்வராக இருந்த  காலகட்டத்தில்தான்.

மேற்கண்ட திருத்தங்களின்  விளைவாக, 1886 -ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 1970-ல் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி அதுவரை மீன் பிடி உரிமை, அணைப்பகுதியில் பூங்கா அமைக்கும் உரிமை போன்ற உரிமைகள் கேரளாவிற்கு வழங்கப்பட்டு, மின்சாரம் தயாரிப்பதற்கான (காமராஜர் காலத்தில் நடைபெற்ற  ஒப்பந்தம்) ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு மட்டும்  கையெழுத்தானது. இதன்படி கடந்த 2000 ஆண்டிலேயே காலாவதியான  மின்சாரம் தயாரிப்பதற்கான  ஒப்பந்தம், இன்றுவரை புதுப்பிக்கப்படாமலேயே இருக்கிறது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு

தமிழகத்திற்கு அதிர்ச்சியளித்த இன்னொரு சம்பவம், 1956 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதுதான். மொழிவாரி மாநிலங்களை பிரிக்க நேரு அமைத்த மொழிவாரி சீரமைப்பு கமிஷனில் தலைவராக நீதிபதி பாசல் அலி மற்றும் வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கர், அரசியல் பிரதிநிதியாக ஹெச்.என்.குன்சுரு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. ஒரு இடத்தின் மக்கள் தொகை , நிர்வாக வசதி, புவியியல் தொடர்புகள், வரலாற்று மதிப்பு ஆகியவற்றின் மூலம்  அந்த பகுதி எந்த மாநிலத்திற்கு உரியதோ அவை பிரிக்கப்பட்டன.

முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்,  மக்கள் தொகை எண்ணிக்கையில் பெருவாரியாக தமிழர்களை கொண்டிருந்தாலும், வரலாற்று ரீதியாக திருவிதாங்கூர் சமஸ்தானத் திற்கு உட்பட்டவை.  அங்கிருந்த மக்கள் கூலி வேலைக்காக கேரளாவுக்கு வந்த வந்தேறிகள் என்று கூறி, அப்பகுதிகள் கேரளத்துடன் இணைந்தன. அந்த நேரத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நொய்யாறு, கேரளா பீர்மேடு, தேவிகுளம் போன்ற நீராதாரத்திற்கு மையமான பகுதிகளை தமிழகம் இழந்தது.

இவற்றையெல்லாம்விட மிகப்பெரிய பிரச்னை, 1970 களில் கேரளாவில் கட்டப்பட்ட இடுக்கி அணை மூலம் எழுந்தது. கடந்த ஒரு தலைமுறை போராட்டத்தின் மூலக்காரணமாக அமைந்ததும் அந்த திட்டம்தான். அது...?

- உ.சிவராமன்

படங்கள் :
வீ.சக்தி அருணகிரி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ