Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் அணு அரசியல்: மினி தொடர் -பகுதி-4

                                                                                                     

‘அணு குண்டால் கூட அழித்து ஒழிக்க முடியாத ஒன்று உண்டு என்றால் அது அகிம்சை மட்டுமே’ - மகாத்மா காந்தி

கூடங்குளம் அணு உலைக்காக விவசாயிகளின் நிலங்கள் அரசாங்கத்தால் சொற்ப விலைக்கு கையகப்படுத்தப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 2000 ரூபாய் வீதம் நில உடமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. முந்திரி செடிகள் ஒவ்வொன்றுக்கும் நூறு ரூபாய் கொடுக்கப்பட்டது.

புளிய மரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. பணத்துக்காக இல்லாத போதிலும் தங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும் என்கிற ஆர்வத்தில் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து நிலத்தை வழங்கினார்கள்.பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனாலும், சுற்றுப்புற மக்களின் எதிர்ப்பு நீருபூத்த நெருப்பாகவே நீடித்தது.

அதனால் உள்ளூர்களில் செல்வாக்கு உள்ளவர்களை சமாளிக்கும் விதத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை வாரி வழங்கப்பட்டது. இதனால், ‘அணு உலையால் ஆபத்து’ என்று கூப்பாடு போட்ட சிலர், தங்களுக்கு காண்டிராக்ட் வேலை கிடைக்கிறது என்றதும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்கள். அத்துடன், அணு உலை நிர்வாகத்தினரும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்துப் பேசினார்கள். அங்குள்ள பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கினார்கள். குடிநீர் தொட்டிகள் இல்லாத பள்ளிகளுக்க்கு அதனை அமைத்து கொடுத்தார்கள்.

பள்ளிகளில் நடக்கும் விழாக்கள், கிராம நிகழ்ச்சிகளில் தாங்களாகவே முன்வந்து கலந்து கொண்டு மக்களுடன் இணக்கமான சூழலை வளர்க்கும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரமான குடிநீர் வசதி, போஒக்குவரத்து வசதி என மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்கிற மாயையில் மக்கள் மயங்கியதால் எதிர்ப்பு உணர்வு சற்று மங்கியது. அதனை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தினர். ஒரு பக்கம் அணு உலை எழும்பிய வேகத்தில் அதில் பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பு அமைக்கும் வேலையும் வேகம் பிடித்தது.

அணு உலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக அணு விஜய் நகரியம் என்கிற இடம் உருவாக்கப்பட்டதும் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஏற்கெனவே சுற்றுப்புற மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அணு உலை நிர்வாகம் நடந்து கொள்ளவில்லை. வேலைக்கான பணியாளர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டனர். அரசியல் செல்வாக்கு உள்ள ஓரிரு தமிழர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் மக்களிடம் கோபம் அதிகரித்தது. தங்களுக்கு இருந்த ஒரே சொத்தான விவசாய நிலங்களை பிடுங்கிக் கொண்டு தங்களை நிராதரவாக அணு உலை நிர்வாகம் கை விட்டதை எண்ணி வருந்தினர். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதனால் கடுப்படைந்த மக்கள், ‘எங்கள் நிலத்தைக்  கையகப்படுத்தும் போது, வேலை கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்தீர்களே?’ என கேட்டார்கள். அவர்களைச்  சந்திப்பதையே தவிர்த்த அதிகாரிகள்,, ‘இங்கு படிப்புக்கு தகுந்தாற்போல மட்டுமே வேலை கொடுக்கப்படும். உள்ளூர்க்காரர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக திறமை இல்லாதவர்களை வேலைக்கு சேர்க்க முடியுமா?’ என திருப்பிக் கேட்டு அனுப்பி வைத்தனர்.
இரவுக் காவலாளி வேலை கூட உள்ளூர்வாசிகளுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், தங்களை ஏமாற்றிய அணு உலை நிர்வாகத்துக்கு எதிராகத் திரண்டனர். அப்போது அணு உலை வளாகத்தில் சப்- காண்டிராக்ட் எடுத்து அதன் மூலமாகப்  பலன் அனுபவித்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் இந்த எதிர்ப்பை முறியடிக்க முயற்சித்தனர். ஆனாலும் 2001-ல் ‘‘கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு’ அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது அணு உலையில் தீமைகளை மக்களுக்கு விளக்கி கூறியது. மக்களின் குமுறல் போராட்டமாக வடிவெடுத்தது. ஆங்காங்கே அணு உலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடந்தது.

இதனிடையே, அணு உலைகள் அமைக்கும் போது சர்வதேச விதிமுறைகளைப்  பின்பற்ற வேண்டும். அதன்படி, அணு உலை அமையும் இடத்திற்கு அருகில் 10,000 பேருக்கு மேல் வசிக்கக் கூடாது. ஆனால், கூடங்குளத்தை சுற்றிலும் நெருக்கமாக 18 கிராமங்கள் இருக்கின்றன. அங்கு லட்சக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். மக்கள் வசிக்கும் இடத்தில் அணு உலையை அமைக்கக்  கூடாது. அதனால், மக்களை அப்புறப்படுத்த வேண்டும். அல்லது அணு உலை அமைக்க முடியாது என்கிற நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.

இதனை சமாளிக்கும் வகையில் அணு உலை நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில், கூடங்குளத்தைச்  சுற்றிலும் இருந்த பல கிராமங்களின் படங்கள் மறைக்கப்பட்டன. சுற்றிலும் மக்களே வசிக்காமல் பத்தாயிரம் பேருக்கும் குறைவாகவே மக்கள் வசிப்பதாகக்  குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரத்தை அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் ஆதாரத்துடன் மக்களுக்கு தெரியப்படுத்தினர். வெப்சைட்டில் குறிப்பிடப்பட்ட விவரங்களை பிரிண்ட் எடுத்து மக்களுக்கு காட்டியதால் மக்கள் கோபம் அடைந்தனர்.

தங்களின் விளை நிலங்களைப்  பிடுங்கிக் கொண்டு வாழ்வாதாரத்தைச் சீரழித்த அணு உலை நிர்வாகம் சீக்கிரத்தில் அரசின் துணையுடன் தங்களை ஊரைவிட்டு விரட்டிவிடும் என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை அணு உலை நிர்வாகத்துக்கு ஏற்படுத்தியது. இதனால் அந்த தகவல்களை வெப்சைட்டில் இருந்து அகற்றிய அணு உலை நிர்வாகம், தவறுதலாக அப்படி நடந்துவிட்டதாகச்  சொல்லி சமாளித்தது. ஆனாலும் அவர்களை மக்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை.

அணு உலை நிர்வாகத்துக்கு அடுத்த அடியாக அமைந்தது, கருத்துக் கேட்புக் கூட்டம். இரு அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கிய போதிலும் அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினால் மக்களின் எதிர்ப்பு வெளியில் தெரிந்துவிடும் என்பதால் எந்த கூட்டமும் நடத்தாமல் பணிகள் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. அணு உலைக்கான பாகங்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. தூத்துக்குடி துறைமுகம் வந்த அந்த பாகங்கள் சாலைகள் மூலமாக கூடங்குளத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.

அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் போராட்டங்களை தீவிரப்படுத்தி வந்தனர். அத்துடன், மக்களை சந்தித்த அவர்கள், ‘அரசு சார்பாக எந்த பெரிய திட்டம் அமைக்கப்பட்டாலும் அது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூஉட்டம் நடத்த வேண்டும். ஆனல், இங்கே அப்படி ஜனநாயக ரீதியில் மக்களின் கருத்தை அறிவதற்கு கூட அணு உலை நிர்வாகமும் அரசாங்கமும் முயற்சிக்கவில்லை’ என்கிற கருத்து மக்களிடம் முழுமையாக சென்றடைந்தது. அதனால் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே, கூடங்குளம் அணு உலை அமைக்கப்படும் இடத்தில் கூடுதலாக நான்கு அணு உலைகளை அமைப்பது பற்றி பரிசீலிப்பதாக மும்பையில் உள்ள அணு சக்திக் கழகத்தின் அதிகாரிகள் அங்கிருந்தபடியே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இங்குள்ள மக்களின் மனநிலையை தெரியாமல் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பேசும் அதிகாரிகள், ‘கூடங்குளம் அணு உலைக்கு மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. அங்கு மேலும் சில அணு உலைகளை அமைக்கவும் பரிசீலித்து வருகிறோம். விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்குவோம்’ என்று சூழ்நிலை தெரியாமல் பேசி வந்தார்கள். இந்தச்  செய்தியை படிக்கும் கூடங்குளம் சுற்றுப்புற மக்கள் கொதித்து எழுவதும், அவர்களை சமாளிக்கும் வகையில் உள்ளூர் அதிகாரிகள், ‘அப்படி எதுவும் இல்லை. இங்க்கு வேறு அணு உலைகளை அமைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை’ என சமாளிப்பதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கூடங்குளம் அணு உலை அமைக்கும் பணி பாதிக்கட்டத்தை தாண்டிய பிறகு மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதனால் நான்கு முறை தேதி குறிப்பிடப்பட்டு கூட்டம் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாகக்  கருத்துக் கேட்பு நடந்தது. மக்களின் கோபம் அதில் கொப்பளித்தது.

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

 

Displaying kudankulam_2.jpg

Displaying kudankulam_1.jpg

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close