Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேது சமுத்திர திட்டம்: நேற்று இன்று நாளை....(தொடர்- 5)

சேது சமுத்திரத் திட்டத்தில் திமுக பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளதால், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் இத்திட்டமே தமிழகத்துக்கு வேண்டாம் என்ற கொள்கையில் உள்ளது. மாற்றுப்பாதையில் கூட வேண்டாமென்று ஒரே முடிவில் உள்ளது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியின் கொள்கையாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒரேடியாக  வெறுத்து ஒதுக்குவது ஏன் என்று அக்கட்சி தலைமையிடம் யாராலும் கேட்க முடியவில்லை.

அதனால்தான், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில், ‘’ராமர் பாலத்தை, புராதன சின்னமாக அறிவிக்கலாம்; மத்திய அரசு இத்திட்டத்தை அமல்படுத்த கூடாது. சேது சமுத்திர திட்டத்தை, நிறைவேற்றுவது உகந்ததல்ல என்ற பச்சோரி குழுவின் அறிக்கையை ஏற்கிறோம் ’’ என்று, வேண்டாம் என்பதற்கான அனைத்து காரணங்களும்  கூறப்பட்டு இருந்தது.

மதிமுகவின் கனவு திட்டம் என்று முழங்கி வந்த வைகோவும், பழ.நெடுமாறனும் இவ்விஷயத்தில் வாயே திறப்பதில்லை. பல கட்சிகள் சேது சமுத்திர திட்டம் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.

இந்த நிலையில்தான் கடந்தாண்டு பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றது. ஆரம்பத்தில் முழு மூச்சாக  இத்திட்டத்தை எதிர்த்து வந்தவர்கள், திடீரென்று,  'இது வாஜ்பாய் கொண்டு வந்த திட்டம். எந்த பிரச்சனையும் வராமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தனர்.

இதில் உள் அரசியலும் உள்ளது. இந்து மக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தை பாதிக்காமல், நான்காவது பாதை வழியாக இத்திட்டத்தை நிறைவேற்றலாம், அதன் மூலம் தமிழகத்துக்கு நன்மை தரும் இத்திட்டத்தை கொண்டு வந்தது தாங்கள்தான் என்று பெருமையடித்துக் கொள்ளலாம். அது வருகின்ற காலங்களில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கணக்கு போட்டனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம்  தேதி,  மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. பா.ஜ.கவினால் முழுமையாக கைவிடப்பட்ட திட்டம் என்று நினைத்திருந்த வேளையில் ‘சேது சமுத்திர திட்டம் ராமர் சேது பாலத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மாற்று வழியில் நிறைவேற்றப்படும்’ என பாராளுமன்றத்தில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்தார். எப்படியோ திட்டம் வந்தால் தேவலாம் என்று சேது சமுத்திர திட்ட ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்,  சேதுசமுத்திர திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்துவது குறித்து நேரில் ஆராய நிதின் கட்கரியை தமிழகம் அனுப்பி வைத்தனர். இதற்காக  அவர் தனி விமானத்தில் மதுரை வந்தார். அவருடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கடலோர காவல்படை கமாண்டர்கள், சேது சமுத்திர திட்ட அலுவலர்கள் வந்தனர்.

மதுரையிலிருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானம் மூலம் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து, அதில் இருந்தபடியே இந்திய-இலங்கை கடல் எல்லை, தனுஷ்கோடி பகுதி, ராமர் பாலம், சேது சமுத்திர திட்ட வழித்தடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். அங்கு நிருபர்களிடம் பேசிய நிதின்கட்கரி, ‘’முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட இந்த திட்டத்தை, இன்றைய மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்போடு மக்களின் சமய உணர்வுகளை புண்படுத்தாத வகையில் செயல்படுத்த முன்வந்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றும்போது, ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் செலவு உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சில யோசனைகள் பரிசீலனையில் உள்ளன.

இந்தியா 3 ஆயிரத்து 554 கடல் மைல் தூரத்துக்கு கடற்கரையை கொண்டு பல்வேறு நாடுகளோடு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இந்திய கடல்வாணிபம் கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையேயும் நெடுங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் கிழக்கு, மேற்கு கரைகளை இணைத்து கப்பல் போக்குவரத்து பாதை அமையப்படாத நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு கரையோரங்களில் இருந்தும், மேற்கத்திய நாடுகளில் இருந்தும் கிழக்கு கரையோர துறைமுகங்களுக்கு வரவேண்டிய கப்பல்கள், இலங்கையை சுற்றி நீண்ட பாதையை கடக்க வேண்டியுள்ளது.

கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையேயான கடல்வழி பாதையை குறைக்கும் நோக்கத்தோடும், இந்த பாதை இந்திய கடல் எல்லைக்கு உட்பட்டதாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடும் கடந்த காலங்களில் ஏராளமான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சுதந்திர காலத்துக்கு முன்னரே 1860-ல் தொடங்கி 1922-ம் ஆண்டு வரையில் சுமார் 9 திட்டங்கள் உருவாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் ராமேசுவரம் தீவை ஒட்டி மன்னார் வளைகுடாவையும், பாக்.ஜலசந்தியையும் இணைக்கும் வகையில் கடல் வழியில் கப்பல் போக்குவரத்துக்கு உகந்ததாக ஒரு வாய்க்கால் அமைப்பது என்பதுதான்.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், இந்திய கடற்கரை முழுவதும் இந்திய எல்லைக்கு உட்பட்டு கப்பல் போக்குவரத்து பாதை அமையும். முக்கியமாக கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையே விரைவான கடல்வழி போக்குவரத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். மேலும் விரைவான மற்றும் கூடுதலான கப்பல் போக்குவரத்தின் மூலம் அபரிமிதமான கடல்சார் வணிகம் வளர்ச்சியடையும்.

தொடக்கத்தில் தற்போது இருக்கும் ரெயில் பாதையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி பாம்பன் வழியையும் முறைப்படுத்தி 30,000 டன் எடையை சுமந்து செல்லும் கப்பல்களுக்கு வழி அமைக்கப்படும். காலப்போக்கில் இதே பாதையில் பெரிய கப்பல்களும் செல்லும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடம், சுமார் 3,000 கப்பல்கள், ஏராளமான சிறிய கப்பல்கள், ராணுவ கப்பல்கள் மற்றும் கப்பல் இழுவைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு உதவிடும்.

இந்த திட்டம் நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார மேம்பாட்டுக்கு உதவக்கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான பாம்பன் பாலம் வழியில் அமைக்கக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை இந்த அரசு முனைந்து செயல்படுத்தும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழகத்தின் தென்மாவட்டங்களும், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டமும் பெருமளவில் பொருளாதார நன்மைகளை அடைவதோடு ஏராளமான வேலை வாய்ப்பையும் பெறும்’’ என்றார்.

‘’எந்த வழியிலாவது சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் சரி’’ என்று,பா.ஜ.க.வின் இந்த முயற்ச்சியை கலைஞர் மனம் திறந்து பாராட்டினார்.

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இலங்கையிலுள்ள சில துறைமுகங்களை சீனா, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டுமென்றால் இந்திய பெருங்கடலில் இந்திய கப்பல் படையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதற்கு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால்தான் நம் நாட்டு எல்லைக்குள், நம் போர் கப்பல்கள் சுலபலாமக் சென்று வர முடியும். இல்லையென்றால் இலங்கையை சுற்றி வரும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை யோசித்துதான் மத்திய அரசு, இத்திட்டத்தின் மேல் ஆர்வம் கொண்டுள்ளது என்கிறார்கள்.

இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திர திட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதை முடிவுக்கு கொண்டு வரும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது. அதற்கு தமிழக அரசும், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழங்குவார்களா?

அப்படி ஒரு ஒத்துழைப்பு மாநில அரசிடமிருந்து கிடைத்து, சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் என்னவெல்லாம் நடக்கும்....தொடர்ந்து நீந்துவோம்...

- செ.சல்மான்


 இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close