Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 5)

1976-ல் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையான இடுக்கி அணையை ‘ஆசையை மட்டும் அளவாக வைத்து’ கட்டியது கேரள அரசு. முல்லை பெரியாற்றின் உபரிநீர் வழிந்தோடும் தடத்தில் 555 அடி உயரத்தில் (முல்லை பெரியாறு அணையைவிட ஐந்து மடங்கு அதிக உயரம்)  அணையை எழுப்பியது கேரளா.

அணையின் நீரினை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. குறைந்த மழைப் பொழிவுள்ள இடத்தினை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட அணைக்கு தண்ணீர்தான் வந்தபாடில்லை. எனவே “முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அணை உடைந்தால், அணைக்கு கீழுள்ள பகுதிகள் அழிந்துவிடும். எனவே அணையின் நீர்மட்டத்தினை 136 அடியாக குறைக்க வேண்டும்” என்ற புதிய குற்றச்சாட்டை முன்வைத்தது கேரளா.

இதன்மூலம் 136 அடிக்கு மேலே தேங்கும் நீரானது திறக்கப்பட்டு,  இடுக்கி அணையில் சேகரமாகும். அதன்மூலம் மின்சாரம் தொடர்ந்து தயாரிக்க முடியும் என நினைத்தது கேரளா. 

அப்போது மத்திய நீர்வள கமிஷன் தலைவரான கே.சி.தாமஸ் தலைமையில் அணையை ஆய்வு செய்த ஆய்வுக் குழு, ‘அணை பலமாக உள்ளது. அணையின் பாதுகாப்பு நடவடிக்கையாக அணையை மேலும் புதுப்பிக்கிறோம்’ என்றது. 25.11.1979 அன்று அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் , கேரள முதல்வர் அச்சுதமேனனுடன் இணைந்து போட்ட ஒப்பந்தத்தின்படி, அணையை பலப்படுத்தும் பொருட்டு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

அதேவேளையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்ற நேரத்தில், அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜாமுகமது,  ‘இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு’ என இந்த ஒப்பந்ததில் கையெழுத்து போடாமல் வந்துவிட்டார் என்ற வரலாறும் உண்டு. அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து, நீர்பிடிப்பு பகுதிகளில் ரிசார்ட்டுகள், வீடுகள் பெருகலாயின. 1981-ல் பலப்படுத்தும் பணிகள் தொடங்கியது.  அவை வருமாறு...

1. அணையின் மொத்த நீளத்திற்கும், 21 அடி அகலத்திற்கும், மூன்று அடி கனத்தில் சிமெண்ட் கலவை யிலான கான்கீரிட் அணையின் மீது கட்டப்பட்டது. இது ஆர்.சி.சி. கேப்பிங் எனப்படும். இதனால் அணையின் எடை அதிகமாகும்.

2. அணையின் மேற்புறத்திலிருந்து துளையிட்டு, அதனுள் கட்டாக கம்பிகளை செங்குத்தாக நுழைத்து அவை அஸ்திவாரத்திலுள்ள பாறையின் மீது நிலைநிறுத்தப்பட்டன. கம்பிகளுக்கிடையில்  சிமெண்ட் கலவை செலுத்தப்பட்டது. சிமெண்ட் கலவையும், கம்பியும் இறுகி உறுதியானவுடன், கம்பியை அதிக விசையுடன் இழுத்து வலுவானதாக உள்ளதா?  எனவும் கணக்கிடப்பட்டது.

இது மாதிரி அணையின் மொத்த நீளத்திற்கு 96 கேபிள் துளைகள் போடப்பட்டன. இது கேபிள் ஆங்கரிங் எனப்படும்.

3. அணையின் அடிப்பகுதியிலிருந்து மொத்த உயரத்திற்கும், 56 அடி அகலத்திலிருந்து 37 அடி அகலம் வரை ( கீழிலிருந்து மேல் நோக்கி), ஒரு சப்போர்ட் அணை கட்டப்பட்டது. வெளித்தோற்றத்திலிருந்து பார்க்கும் போது, இவை ஒரே அணையாக தெரியும். இந்த கட்டுமானத்திற்கிடையே 10 மற்றும் 45 அடி உயரத்தில் கேலரிகள் அமைக்கப்பட்டு,  அணையின் உட்புறத்தில் ஏற்படும் கசிவுகள் கணக்கிடப்பட்டன. இதற்கு ஆர்.சி.சி பேக்கிங் (அல்லது துணை அணை அமைத்தல்)  என்று பெயர்.

4. அணையில் நீர்மட்டம் அதிகமாக இருக்கும்போது அதனை வெளியேற்ற பென்னிகுக்கால் அமைக்கப்பட் டிருந்த 10 ஷட்டர்களோடு, கூடுதலாக மூன்று ஷட்டர்கள் அமைக்கப்பட்டன.

இந்த பலப்படுத்தும் பணி நடைபெற்ற காலங்களில் கட்டட வேலைகளுக்காக செல்லும் வாகனங்களை மறித்தல், வனச்சரணாலய பகுதி எனக்கூறி பணியாட்களின் மீது வழக்கு தொடுத்தல் போன்ற இடையூறு களை கொடுத்தது கேரளா. அவற்றையெல்லாம் கடந்து 1994 ஆம் ஆண்டு,  18 கோடி செலவில் பலப் படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டன.

இதுவரையிலான பணிகள் அனைத்தும் மெயின் அணையை பலப்படுத்த நடந்தவை மட்டும்தான். பேபி அணையை பலப்படுத்த வேண்டுமல்லவா?

(முந்தைய பாகங்களில் சொன்னதுபோல, முல்லை பெரியாறு அணை கட்டுமானத்தில் இருந்தபோது அதிகப்படியான நீரினால் பாதிக்கப்படாமல் இருக்க, தண்ணீரை திசை திருப்பும் வேலையை செய்த அணை, பின்பு மெயின் அணையோடு இணைக்கப்பட்டது)

பேபி அணையை இடித்தால் அணையின் நீர்மட்டத்தை 110 அடிவரைக்கு மட்டுமே தேக்கி வைக்கமுடியும் என நினைத்த கேரள அரசு, முழு எதிர்ப்பை தெரிவித்தது.  இன்றுவரை பேபி அணை பலப்படுத்தும் பணிகள் நடத்தப்படவே இல்லை.

முல்லை பெரியாறு நீரை 152 அடிவரை தேக்கினால், தேக்கடி பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் என கேரள  அரசு, உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைந்ததால் ஏற்பட்ட விவசாய நீர் இழப்புகள் குறித்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 139 பிரிவு ஏ –ன் படி, மாநில அரசின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன’.  இன்றைய பா.ஜ.க மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமியும் வழக்கு விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று ஒரு வழக்கு தொடுத்தார்.

அணையை பலப்படுத்திய பின் இரு மாநில முதல்வர்களை அழைத்து, அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்துவதில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமனதாக தீர்வு காணப்படவில்லை என்பதால், மத்திய நீர்வள ஆணையத்தின் அணைக்கட்டு நிபுணரான டி.கே.மித்தல் தலைமையில்  ஒரு குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.

‘பேபி அணையை பலப்படுத்த மண் மற்றும் மூலப்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி தேவை. அதே வேளையில்,  அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்வதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. பேபி அணையை பலப்படுத்திய பின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்தலாம்' என்று சொன்னது.

பேபி அணையின் மண் பரிசோதனைகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து, அணையின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  அதன்பின்பு அமைக்கப்பட்ட ஒய்.கே.சபர்வால், சி.கே. தாக்கூர், பி.கே.பாலசுப்ரமணி யன் தலைமையிலான குழு, 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது.

இத்தகைய புகழ்மிக்க தீர்ப்பு வந்த பிறகும் 2014 வரை  தாமதம் ஏற்பட்டது எதனால் ?

                                                                                                                                                                           -உ.சிவராமன்
                                                                                                                                            படங்கள் :
வீ.சக்தி அருணகிரி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ