Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாட்டாளிகளின் தோழன் ஜீவா!

சுதந்திர போராட்ட வீரராக, பொதுவுடமை போராளியாக, மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கிய தோழர் ஜீவாவின் பிறந்த நாள் இன்று.

தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய  தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது  வாழ்வில்  நாற்பது  வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய  ஆயுள் காலத்தில் பத்து  வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை  இயக்க பற்றாளராக, பொதுவுடமை  இயக்க தலைவராக செயலாற்றியவர்.

ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம்,
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்--உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து.

சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜீவா, ஒன்பதாம் வகுப்பு  படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும்
எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம்  மீது தனி ஆர்வம்  கொண்டிருந்தார். பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்கு புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர்.

பொதுவுடமை  மேடைகளில் முதல் முறையாக  தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா  தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல.

இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கு கிடைக்காத பேறு.

இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  மகளாகிய கண்ணம்மாவை திருமணம்  செய்து கொண்டார். இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

பெரியாரோடு இணைந்து  வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம்  ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு  அளிக்கப்பட்ட தூக்கு  தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால்  அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார். சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார். பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு,  திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

1930 களில் தன்னை  சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பொதுவுடமை தோழர்களுடன் சிறை சென்றார். வெளிவரும்போது தீவிர பொதுவுடமையாளனாக வெளிவந்தார்

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஜீவா,  சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார். சீனா, இந்தியாவில்  ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் முக்கிய பங்கு ஜீவாவினுடையது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939--1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்கு சென்று செயலாற்றினார்.

1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களை கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். எதிராளியையும்  பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்திய உரை "சட்டப்பேரவையில் ஜீவா" என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.

எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது.

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி'  நாளிதழையும் தொடங்கினார்.

தன் இறுதிக்காலம் வரை மக்களிடையே வாழ்ந்த ஜீவா, வறுமையிலேயே கழித்தார். ஜீவாவின் இறுதிக்காலம் வறுமையிலேயே கழிந்தது. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா  வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காமராஜரின் உதவியாளர்,  திறப்பு விழா நடக்கும் இடத்தின் அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிற போக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். காரணம் அது ஒரு குடிசைப்பகுதி.

நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர்,  அவரது எளிமையான வீட்டை கண்டு இன்னும் அதிர்ந்துபோனார். அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. அலுவலகம் திரும்பிய காமராஜர் உடனடியாக ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார்.

"என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதிக்காலமும் அத்தகைய மனநிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக்காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை" என மறுத்தார் நேர்மையாளர் ஜீவா.

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா.

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு  அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது.

மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள்.

இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.
 

- எழிலரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close