Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் அணு அரசியல்: மினி தொடர் -பகுதி-5

‘‘ஜப்பான் தோல்வியின் எல்லைக்கு வந்து விட்டதால் அவர்களாகவே சரண் அடைய முன்வந்து இருந்த சமயத்தில், அந்த நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது தேவையில்லாமல் அணு குண்டுகளை போட்டது கேவலமான செயல்’’

- டேவிட் ட்வைட் எய்சென்ஹோவர்
( நேட்டோ கூட்டுப் படைகளின் தலைமை கமாண்டர்)

கூடங்குளத்தின் முதல் இரண்டு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு,  உதிரிப் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வந்த போதிலும், அணு உலை அமையும் இடம் பூகம்பம் ஏற்படும் ஆபத்து வாய்ந்ததா, கடலோரத்தில் உலைகள் அமைந்து இருப்பதால் சுனாமி வந்தால் பாதுகாப்பானதுதானா, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட வில்லை.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், மக்களிடம் இந்த விவரங்களை கொண்டு சென்றனர். மக்களும் இந்த நியாயமான கோரிக்கையின் உண்மையை உணரத் தொடங்கியதால் மக்கள் இயக்கத்தினரின் கருத்துக்களை கவனிக்கத் தொடங்கினார்கள். அதனால், கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2006 அக்டோபர் 6-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த கூட்டத்தை நடத்துவதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

காரணம், இந்த கூட்டத்தை நடத்துவதாக இருந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூட்டம் நடப்பது பற்றி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு முறைப்படி தகவல் எதுவும் தெரிவிக்கவே இல்லை. உள்ளூர் நாளிதழ்கள் எதிலும் கூட்டம் நடப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அதனால் இந்த கூட்டத்தை நடத்துவதற்கு உள்ளூர் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் கிடைத்ததால் கூட்டம் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இது நெல்லை மாவட்டம் மட்டுமே சார்ந்த பிரச்னை கிடையாது. தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அணு உலையால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மூன்று மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை தனித்தனியே நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முன்வைத்தது.

தனித்தனியே ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் சிக்கல் வலுக்கும் என்பதை அரசு நிர்வாகம் புரிந்து வைத்து இருந்தது. இந்த சர்ச்சைகளை சமாளிக்கும் வகையில், கூடங்குளத்திலேயே கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்குள்ள மண்டபம் ஒன்றில் 2007, ஜனவரி 31-ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது.

பின்னர், அங்கு நடத்தாமல் கூடங்குளம் அணு உலை நகரியத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற் கான அறிவிப்பில், அணு உலைக்கு அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்து வது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது சுற்றுப்ப்புற கிராமங்களில் அடர்த்தியாக வசிக்கும் அப்பாவி மக்களை கொந்தளிக்கச் செய்தது. தங்க ளில் விவசாய நிலங்களை அரசு எடுத்துக் கொண்டு நிராயுதபாணியாக கைவிட்ட வடு மறைவதற்கு முன்பாக, வீட்டையும் பிடுங்கிக் கொண்டு தொலைதூரத்திற்கு தங்களை விரட்ட நினைப்பதை உணரத் தொடங்கினர். இந்த ஆத்திரம் காரணமாக அப்பாவி மக்கள் அனைவருமே போராட்ட களத்துக்கு திரண்டு வந்தனர்.

கடலையும், தங்களின் வாழ்விடத்தையும் கடவுளுக்கு நிகராக மதிக்கும் மீனவ மக்களும் அரசின் அறிவிப் பால் அதிர்ச்சி அடைந்தனர். மீனவ கிராமத்தில் இருந்து தங்களை பிரித்துச் சென்றால், தங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும், மாற்றுத் தொழில் எதுவும் தெரியாது என்பதனையும் மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் உணர்ந்து இருந்ததால் அவர்களும் உக்கிரமான போராட்டத்துக்கு தயாரானார்கள்.

இப்படி அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் தினத்துக்கு முன்பாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மக்களிடம் காணப்பட்ட இந்த கோபமும், கொந்தளிப்பும் அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. மக்களின் போராட்டத்தை சமாளிக்க அணு உலை நிர்வாகம் சார்பில், நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

மக்களின் போராட்டம் வெளியிடங்களுக்கு பரவிடாமல் தடுக்கும் வகையில், போராட்டச் செய்திகள் வெளியாகாமல் பார்க்கும் முயற்சியிலும் அணு உலை நிர்வாகம் இறங்க வேண்டியிருந்தது.

மக்களின் இந்த தொடர் போராட்ட சூழலில், கூட்டம் நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதால் இரண்டாவது முறையாகவும் கூட்டம் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் மார்ச் 31-ம் தேதி கூட்டத்தை நடத்த மூன்றாவது முறையாக முடிவு செய்யப்பட்டது.

மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்து உள்ளூர் செய்தித்தாள் களிலும் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், மக்கள் இந்த கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். அணு உலைக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்ய பெண்கள், இளைஞர்கள், அறிவியல் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் காத்திருந்த சூழலில், அணு உலையில் சப்-காண்டிராக்ட் எடுத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் அணு உலைக்கு ஆதரவாக குரல் எழுப்ப முடிவு செய்திருந்தனர்.

அந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வெளிவந்தது. இந்த தீர்ப்பால் சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்படும் என அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க கருதியது. அதனால் அந்த தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டது. தி.மு.க சார்பில் முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்ட தேதி மார்ச், 31. அந்த நாளிலேயே கருத்துக் கேட்புக்கான அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இந்த இக்கட்டான சூழலில், கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைப்பதை தவிர மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வேறு வழியில்லாததால் மூன்றாவது முறையாகவும் தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர், ஜூன் 2 ஆம் தேதி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் இந்த கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கருத்துக்களை பதிவு செய்வதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 7000 பேர் திரண்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

ஆனால், கூட்டம் நடந்த அரங்கத்தில் நூறு பேர் மட்டுமே அமர முடியும். பாதுகாப்புக்காக 1200 போலீஸார் குவிக்கப்பட்டனர். கலவரம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்காக அதிரடிப்படையினர், கலவரத்தின் போது பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனம் என அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மாவட்ட ஆட்சியராக இருந்த பிரகாஷ் மற்றும் அணு உலை நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் என பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய முன்வந்திருந்தனர்.

திட்டமிட்டபடி, கூட்டம் தொடங்கியது.. ஆனாலும் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? அவை முறைப்படி பதிவு செய்யப்பட்டதா..?

                                                                                                                                                                     - ஆண்டனிராஜ்
                                                                                                                                              படங்கள்: எல்.ராஜேந்திரன்     
 

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Displaying kudankulam_4.jpg

Displaying kudankulam_1.jpg

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close