Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடிமைத் தழும்பு...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-5)

முதுகுப் பகுதி முழுவதும் காயங்களால் ஏற்பட்ட கொடூரமான தழும்புகளுடன் கருப்பினத்தவரான (ஆப்ரிக்க அமெரிக்கன்) கார்டன் (Gordon) அமர்ந்திருக்கும் இந்தப்படமே கருப்பினத்தவர்களின் மீதான அடக்கு முறையையும், அவர்களின் துயரத்தையும் உலகிற்கு உரக்க சொன்னது. அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டாக பிரியவிருந்த ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாக்க, பிரிவினைவாத தென் மாநிலங்களுக்கு எதிராக ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். அமெரிக்க வெள்ளையர்களின் நிறவெறி கொடுமையின் தீவிரத்தை பார்ப்பவர்களுக்கு பட்டென பார்த்தமாத்திரத்திலேயே உணரச் செய்யும் இந்தப் புகைப்படம், 1863 ஏப்ரல் 2ம் தேதி வில்லியம் டி.மெக் பெர்சன் மற்றும் அவரது இணையரான ஆலிவர் (William D. McPherson, Oliver) என்ற புகைப்படக்காரர்களால் எடுக்கப்பட்டது.

நிற வேற்றுமையின் காரணமாக கருப்பினத்தவர்கள் மீதான அமெரிக்க வெள்ளையர்களின் அடக்குமுறை ஒங்கியிருந்த காலகட்டத்தில், அதனையும், அடிமை முறையையும் கடுமையாக எதிர்த்த ஆபிரகாம் லிங்கன், 1856-ல் புதியதாக உருவாக்கப்பட்ட குடியரசுக் கட்சிக் கட்சியில் சேர்ந்தார். 1858-ல் இலினாய்ஸ் (Illinois) என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய உரையில் ''அடிமைத்தனம் என்பது அடிப்படையில் மட்டுமல்லாமல் தார்மீக மற்றும் சமூக அரசியலிலும் தவறான ஒரு செயல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்காக அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தை உருவாக்குவதோடு ஒட்டு மொத்த அடிமைத்தனத்தையும் அமெரிக்காவில் ஒழிப்போம்’’ என்றார். லிங்கனின் இந்த பேச்சுதான் தென் மாநிலங்களில் கருப்பின மக்களை அடிமைகளை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்த வெள்ளைக்கார முதலாளிகளை கோபமடையச் செய்தது. அதே சமயம் 1860-ல் குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லிங்கன்.

தேர்தலில் லிங்கன் வெற்றி பெற்றுவிட்டால் கருப்பர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நினைத்த 11 தென் மாநிலங்கள், 1861 பிப்ரவரி மாதம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதில் அலபாமா, ஃப்ளோரிடா, ஜார்ஜியா, லூசியானா, மிசிசிப்பி, தெற்கு கரோலினா, டெக்சாஸ் (Alabama, Florida, Georgia, Louisiana, Mississippi, South Carolina and Texas) போன்ற மாநிலங்கள் முதலில் வெளியே வர அர்கன்சாஸ், வட கரோலினா, டென்னசீ, விர்ஜினியா (Arkansas, North Carolina, Tennessee and Virginia) போன்ற மாநிலங்கள் பின்னர் அதனுடன் இணைந்து கன்ஃபடரேட் ஸ்டேட் ஆப் அமெரிக்கா (Confederate State of America ) என்ற புதிய அரசை உருவாக்கின. இதைத்தொடர்ந்து தேர்தலில் லிங்கன் வெற்றி பெற்றவுடனேயே 1861 ஏப்ரல் 12-ம் தேதி தென் மாநிலங்கள் வடக்குப் பகுதியின் மீது போர் தொடுத்ததால், லிங்கனின் யூனியன் படையும் (Union Force), தென் மாநிலங்களின் கன்ஃபடரேட் படையும் (Confederate forces) மோத உள்நாட்டுப் போர் தொடங்கியது.

இந்த சூழலில்தான் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் கார்டன் (எ) சாட்டையடி பீட்டர் (Gordon, or Whipped Peter), மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் ஜான் மற்றும் ப்ரிட்ஜெட் லயான்ஸ் (John and Bridget Lyons) என்ற வெள்ளைக்கார முதலாளிகளுக்கு சொந்தமான பருத்தித் தோட்டத்தில் இருந்து தப்பித்துவிடுகிறார். சுமார் 3000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தோட்டத்தில், 1860-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 64 அடிமைகள் வேலை செய்து வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கார்டன் தப்பித்ததை தெரிந்து கொண்ட முதலாளிகள் மான் வேட்டைக்குப் பயன்படுத்தும் ப்ளட் ஹௌண்ட்ஸ் (bloodhounds) வகை மோப்ப நாய்களைக் கொண்டு தேட ஆரம்பிக்கிறார்கள். வெங்காயத்தை உடலில் தேய்த்துக் கொண்டால் வேட்டை நாயால் கண்டுபிடிக்க முடியாது என்பதை அறிந்து இந்த தேடுதல் உத்தியை முன்னரே ஊகித்த கார்டன் தப்பிக்கும் முன்பே வெங்காயத்தை எடுத்து வைத்துக் கொண்டார். ஒவ்வொரு முறை தண்ணீரில் விழுந்து எழுந்து ஓடும்போதும் தனது உடலில் வெங்காயத்தைத் தேய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். சுமார் நாற்பது மைல் தூரத்திற்கு தொடர்ந்து நடந்தே சென்றவர், பத்து நாட்களுக்குப் பிறகு உடைகள் கிழிந்து, சேறும் சகதியுமாக  உடல் முழுவதும் காயங்களுடன் லிங்கனின் யூனியன் படை சிப்பாய்கள் தங்கியிருந்த முகாமில் சென்று தஞ்சமைடைந்தார். அதே காலகட்டத்தில்தான் ''ஆப்ரிக்காவில் இருந்து வந்து அமெரிக்க முதலாளிகளின் தோட்டத்தில் வேலை பார்க்கும் கருப்பினத்தவர்கள் யூனியன் படையில் சேரலாம்’’ என்று லிங்கன் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து கார்டன் அந்தப் படையில் சேர முடிவெடுத்தார்.

யூனியன் படை வீரர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் உள் வளாகத்தில் ஒரு காலை நேரம். படையில் புதியதாக சேர வந்திருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் மருத்துவப் பரிசோதனைகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர் மருத்துவர்கள். அந்த அறையின் உள்ளே தயங்கியபடியே சென்ற கார்டன் மருத்துவர்கள் கட்டளையின்படி சட்டையை கழட்டிவிட்டு நிற்கிறார். அப்போது அவரின் முதுகுப் பகுதி முழுவதும் கொடூரமாக இருந்த தழும்புகளைப் பார்த்து  அதிர்ந்து போனார்கள் மருத்துவர்கள். பின்னர் அவரிடம் அதைப்பற்றி கேட்க, அமெரிக்க முதலாளிகளிடம் தான் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர்கள் சாட்டையாலும், இடுப்பில் அணியும் பெல்ட்டினாலும் அடித்ததால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள்தான் என்று கார்டன் சொல்ல, மீண்டும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர் மருத்துவர்கள். அடுத்த சில விநாடிகளில் யூனியன் படைப் பிரிவு முழுவதுக்கும் பரபரப்புச் செய்தியானார் கார்டன்.

அப்போது அந்த முகாமில் அமைந்திருந்த பகுதியில்தான் புகைப்படக்காரர்கள் வில்லியம் டி.பெர்சன், ஆலிவர் ஆகியோர் ஒரு கேலரியைத் திறந்திருந்தார்கள் என்பதால் அங்கே நடந்த உள்நாட்டுக் கலவரத்தை அதிகளவில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். காட்டுத் தீயாகப் பரவிய கார்டன் பற்றிய தகவல் அந்த முகாமில் இருந்த டி.பெர்சன், ஆலிவர் காதுகளுக்கும் சென்றது. உடனே இவர்கள் இருவரும் கார்டனை சந்தித்து அவரை புகைப்படம் எடுக்கக் கேட்டுக் கொண்டனர். அதற்கு கார்டனும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டதால் அவரின் முதுகு தெரியுமாறு அமர வைத்து புகைப்படம் எடுத்து முடித்தார்கள். பின்னர் 'கார்ட் டி விஸ்தா' (carte-de-visite) என்ற முறையில் சுமார் ஒரு லட்சம் காப்பி வரை அதனை பிரிண்ட் செய்து அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட, பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்த இந்த விவகாரம் லிங்கனின் நிலைப்பாட்டுக்கு மேலும் கூடுதல் வலுவை சேர்த்தது.

''வெள்ளைக்கார முதலாளிகளிடம் வேலை பார்த்த கருப்பின மக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அவர்களை நிர்வாணப்படுத்தி தோலால் அடித்து தண்டிக்கும் முறைதான் அதிகம். மேலும், அவர்கள் முதுகில் ரம்பத்தால் குத்தி, அதில் காயமடைந்து சீழ் பிடித்து வீங்கியவுடன் அதனை அதே ரம்பத்தால் அறுப்பார்கள். அதன்பிறகு அனைத்து அடிமைகளுக்கும் தெரிவது போல நிற்க வைத்து அவரை சுற்றி சோளத்தைப் போட்டு எரிய விடுவார்கள். அதன்பின் எரிந்து முடிந்த அதே மக்கா சோளத்தாலேயே காயம் பட்ட இடத்தை மட்டுமல்லாமல், மொத்த உடலிலும் காயமாகும் வரை அடிப்பார்கள். தப்பித்து ஓட முயற்சி செய்து பிடிபடுபவர்களுக்கு கொடுக்கும் தண்டனை இதைவிடக் கொடுமையானது.

ஒரு ஆள் உட்காரும் அளவிற்கு குழி வெட்டி அதில் தப்பி ஓடியவரை நிர்வாணமாக உட்கார வைத்து, அவரின் மேல் பச்சை விறகுக் குச்சிகளை வைத்து எரிய வைத்து விடுவார்கள். ஒருவேளை அதிலிருந்து மீண்டு வந்தாலும் அவர்களால் நடக்கவே முடியாது. அதையும் தாண்டி அவர்கள் உயிர் பிழைத்தால், மீண்டும் தப்பி ஓட முயற்சி செய்யாமல் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். என்னையும் இப்படி அடித்ததில் இரண்டு மாதங்கள் படுத்த படுக்கையாகவே கிடந்தேன். அதிலிருந்து மீண்டு மறுபடியும் வேலை செய்யும்போதுதான் என் முதலாளி அடிக்க ஆரம்பித்தார் அதனால்தான் அங்கிருந்து தப்பித்தேன்’’ என கார்டன் பதிவு செய்திருப்பதை வரலாற்று பதிவாளர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.

1863-ல் ஹார்பர்ஸ் வீக்லி (Harper's weekly) என்ற பத்திரிகை இந்தப் புகைப்படத்துடன் கார்டன் தப்பித்த விவரங்களைக் கொண்ட கட்டுரையின் மூலம் மனித குலத்தின் தழும்பாய் போன அடிமைத்தனத்தினது ஆறாத ரண வலியை 'வழக்கமான நீக்ரோ' (A Typical Negro) என தலைப்பிட்டு அழுத்தமாக உலகத்திற்கு கொண்டு சேர்த்தது. மேலும், இப்புகைப்படக் கட்டுரையும், யூனியன் படை வீரராக பேட்டன் ரோக்கில் சிறப்பாக பணியாற்றிய கார்டனும், சுமார் இரண்டு லட்சம் ஆப்ரிக்க கருப்பின மக்கள் அந்தப் படையில் சேரக் காரணங்களாக அமைந்தது என்கிறது வரலாற்றுப் பதிவுகள்.

கணிசமான கருப்பின வீரர்களைக் கொண்ட யூனியன் படை பங்கேற்ற உள்நாட்டுப் போர், சுமார் எட்டரை லட்சம் பேர் பலியான பின்னர் 1865 மே 9-ல் முடிவுக்கு வந்ததையடுத்து, காட்சிப்படுத்தப்பட்ட அந்த முதுகுத் தழும்புகள் வெள்ளையர்களின் நிறவெறிக்கு எதிரான புரட்சியாக வெடித்து கருப்பின அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளியாகவும் மாறியது.

-ஜெ.முருகன்

முந்தைய தொடர்களைப் படிக்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close