Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 6)

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என 27-02-2006-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை அடுத்து, ஒரு புதிய தீர்மானத்தை கேரள அரசு சட்டசபையில் நிறைவேற்றியது.

'2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கேரள நீர்ப்பாசன மற்றும் தண்ணீர் பாதுகாப்பு சட்டம்’ என்ற சட்டத்தின்படி, ‘அணை பாதுகாப்பு அமைப்பு’ ஒன்றை 2006-ல் அமல்படுத்தியது. அதன்படி கேரள மாநில எல்லைக்குட்பட்ட அனைத்து அணைக்கட்டுகளும் கேரளாவின் கண்காணிப்பில் செயல்படும். முல்லை பெரியாறு உள்ளிட்ட சில அணைகள் பலவீனமான அணைகளின் பட்டியலில் இருக்கின்றன.

எந்த அரசாங்கம் மத்தியிலும் மாநிலத்திலும்  ஆட்சிக்கு வந்தாலும், எந்த சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் அணைகளின் நீர்மட்டத்தின் அளவினை உயர்த்துதல், குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள அணை பாதுகாப்பு அமைப்பிற்கு முழுஅதிகாரம் உள்ளது’ என்பதுதான் அதன் தீர்மானத்தின் சாரம்சம்.

இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாததை தொடர்ந்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. ‘  2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதித்து அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்த வேண்டும், ஒரு மாநிலத்தின் உரிமையை பாதிக்கும் விதமாக இன்னொரு மாநிலத்தினர் சட்டம் இயற்றக் கூடாது,  முல்லை பெரியாறு  தேசிய நதி என்பதால் அதற்கு மாநில அரசின் சட்டங்கள் பொருந்தாது’ என வழக்கினை தாக்கல் செய்தது.

அதற்கு கேரள அரசு, ‘முல்லை பெரியாற்றின் குறைந்த நீர்பிடிப்பு பகுதியே தமிழகத்தின் பக்கம் இருக்கிறது. எனவே அதனை தேசிய நதியாக கருத முடியாது. நதி கேரளத்திற்கானது.  இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, போடப்பட்ட Indian Indepentance Act- படி பிரிட்டிஷ்காரர்களுக்கும், இந்திய அரசர்களுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் சுதந்திரம் அடைந்தபோதே முடிந்துபோயின. சில ஒப்பந்தங்கள் அதற்கடுத்த காலத்தில் நின்றுபோயின. முல்லை பெரியாறு அணைக்கு 1300 மீட்டர் அருகில் ஒரு புதிய அணையை கேரள கட்ட தயாராக இருக்கிறது. அதுவரையிலும் தமிழகம், தற்போது பயன்படுத்தும் நீரினை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்’ என பதில் வாதங்களை கொடுத்தது.

‘அரசியல் சட்டதிட்டங்களில் பிரிவுகளின் விளக்கம் அல்லது ஏதாவது ஒரு வழக்கில்  ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு தேவைப்படும்போது, அவற்றை தீர்மானிக்க குறைந்தது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 145 (3) கூறுகிறது.’ அதன்படி  இந்த வழக்கினை விசாரித்து வந்த மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்றம் ஐந்து பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

நீதிபதி டி.கே.ஜெயினை தலைவராக கொண்ட நீதிபதிகள் குழு, அணை குறித்து விசாரணை நடத்த  உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் கேரளாவின் சார்பாக  கே.டி.தாமஸ், தமிழகம் சார்பாக ஏ.ஆர்.லட்சுமணன் ( இருவரும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்) ஆகியோரையும், பொறியாளர்களாக சி.டி.தாட்டே மற்றும் டி.கே.மேத்தா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவினை 2010-ல் நியமித்தது.

1979-ல் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி.தாமஸின் அறிக்கைப்படி அணையில் நடந்த பலப்படுத்தும் பணிகள், அதன் மூலம் அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக தேக்குவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


‘புதிய அணை கட்டுவதாக கேரள அரசு சொல்லும் இடம் ஏற்கனவே பென்னி குக், முல்லை பெரியாறு அணைக்கட்ட தேர்வு செய்த இடம். அணை கட்டப்பட்டால் அது தமிழகத்திற்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பன குறித்தும் ஆலோசித்தனர்.

அந்த நேரத்தில்  முல்லை பெரியாறு அணை தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து 1300 மீட்டர் தள்ளி ஒரு புதிய அணையை எழுப்ப வேண்டும் என அதற்கான மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகளை நடத்தியது கேரளா.

இந்த நேரத்தில் முல்லை பெரியாறு அணை உடைந்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதீத கற்பனைகளுடன் கிராபிக்ஸ் முறையில் ‘டேம் 999’ என்ற பெயரில்  திரைப்படம் தயாரித்து, அதன்மூலம் முல்லை பெரியாறு குறித்த பயத்தை கேரள மக்களுக்கு திட்டமிட்டு சிலர் ஏற்படுத்தினர்.
 
முல்லை பெரியாறில் அதிக நீரினை தேக்குவதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் உண்டாகும் ஆபத்து, அணையில் கசியும் நீரின் அளவு, அணையின் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் பணிகளின்போது பயன்படுத்திய பொருட்களின் தன்மை,  மிகக்குறைந்த ரிக்டர் அளவுகோலில் பதிவாக பூகம்பங்களால் இப்பகுதிகளில் ஏற்பட்ட தாக்கம் என்பன குறித்து ஆய்வு செய்தது ஆனந்த தலைமையிலான குழு.

அதுவரைக்கும் பூகம்பத்தால் அணைக்கு மிகப்பெரிய அளவில் ஆபத்து இருக்கிறது என கேரள அரசு தெரிவித்த குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கும் வகையில், நிலநடுக்கம் குறித்த ஆய்வுகள் செய்யும்  இந்தியாவின் தலைசிறந்த மூன்று நிறுவனங்கள் மூலம் சோதனை நடத்தி, ‘ மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் வருவதற்கு  இப்பகுதியில் வாய்ப்பில்லை எனவும், ஒரு வேளை நிலநடுக்கம் வந்தாலும் அதனை தாங்கக்கூடிய அளவில் அணை பலமாக உள்ளது’ எனவும் அறிக்கை வெளியிட்டனர்.

மேலும், ‘எந்த அணைக்கட்டிற்கும் இந்த அளவிற்கு விரிவாகவும், தெளிவாகவும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தப்படவில்லை’ என ஆய்வின் முடிவில் சொன்னார் உயர்மட்ட குழுவின் தலைவர் ஏ.எஸ்.ஆனந்த்.

1979 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்போது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸிடம் இந்தியாவின் முக்கிய அணைக்கட்டுகளான பக்ரா நங்கல் மற்றும் ஒரிசா மாநிலம் ஹூராகுட் ஆகிய அணை பிரச்னைகளின் போது ஆலோசனை கேட்கப்பட்டது. அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கே.சி.தாமஸ், ‘எனக்கு மட்டும் தற்போது ஐம்பது வயதாகியிருந்தால், முல்லை பெரியாறு அணைக்கு கீழே ஐம்பது சென்ட் இடம் வாங்கி, அங்கேயே என்னுடைய வாழ்க்கை முழுவதும் கழித்திருப்பேன்’ என்றார். அப்படியாவது அணை பலமாகத்தான் உள்ளது என கேரள மக்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினார்.

இப்படி தங்களுடைய ஆய்வுகளின் முடிவுகளை உச்சநீதிமன்ற நீதிபதியிடம் 2012-ல் சமர்பித்தது ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு. அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி கேரள அரசினை தலையில் ஓங்கி குட்டிய உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக தேக்கிக்கொள்ளலாம், பேபி அணையையும் பலப்படுத்தி நீர்மட்டத்தினை  152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றது.

நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்துவதற்காக ஷட்டரை இறக்கியது கேரளா. தலை நிமிர்ந்தது தமிழகம்.  அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை கண்காணித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க எல்.ஏ.வி. நாதன்  தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது.

இதுவரை 136 அடியை மட்டும் எண்ணிக்கொண்டே இருந்த தமிழன்,  அணையின் நீர்மட்டம் 142 அடியை முத்தமிட்டதையும் பார்த்தான். தொங்கும் தோரணங்கள், படரும் பந்தல்கள், காது கிழியும் ஒலிப்பெருக்கிகள் என திட்டமிட்ட திருவிழாவுக்கான அத்தியாயங்கள் இல்லாமல், திருவிழாவுக்கு  பெயர்போன தென் மாவட்டங்கள் நவம்பர் மாதத்தில் ஒரு நாளை சிறப்பித்தனர்.

மே மாதத்தில் வந்த தீர்ப்பிற்கு நவம்பர் மாதம்  ஏன் கொண்டாட வேண்டும்? காரணம் இருக்கிறது.

- உ.சிவராமன்
படங்கள் : வீ.சக்தி அருணகிரி 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ