Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒடுக்கப்பட்டோரின் எழுத்துரிமையை பறிக்கிறதா தமிழக அரசு?

'வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது?' மற்றும் 'மதுரைவீரன் உண்மை வரலாறு' என்ற இரண்டு நூல்களைத் தடைசெய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறது தமிழக அரசு.

ஏற்கெனவே எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நூல் குறித்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. அதன் தொடர்ச்சியாக பெருமாள் முருகன்,  "எழுத்தாளர் பெருமாள் முருகனாகிய நான் இறந்துவிட்டேன்..இனி பெ. முருகன் மட்டும் உயிரோடு" என்று வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். 

தற்போது  தமிழக அரசு, 'வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது?'  மற்றும் 'மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற நூல்களைத் தடை செய்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 2 நூல்களுமே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகி, தலா 2 ஆயிரம் பிரதிகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அறிவுசார்ந்த வகையில் மேலெழுந்து வருவதை அரசு விரும்பவில்லை என்றும்,  இதில் திமுக அரசு,  அதிமுக அரசு என்ற பாகுபாடெல்லாம் இல்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளியில் கொண்டுவர முயற்சிக்கும் தங்களுக்கு,  கடும் நெருக்கடியையும் மிரட்டல்களையுமே ஆளும் தரப்பும் காவல்துறையும் கொடுக்கின்றன என்று கொந்தளிக்கிறார்கள் எழுத்தாளர்கள்.

இந்தத் தடை பற்றி 'வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது ?' நூலின் ஆசிரியர் செந்தில் மள்ளரிடம் கேட்டபோது,

" தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்திலிருந்து பிரித்து எம்.பி.சி. பிரிவில் சேர்க்கக் கோரி கடந்த 20 ஆண்டுகளாகப்  போராடி வருகிறோம். ஏனெனில் எஸ்.சி.பட்டியலில் எங்களைத் திட்டமிட்டே முன்னர் இணைத்துள்ளனர். அதனால் மிகுந்த பாதிப்பை இந்த சமுதாயத்தினர் அடைந்துவிட்டோம். இதிலிருந்து மீண்டுவர, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு 'வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது?' என்ற நூலை எழுதியிருக்கிறேன். மேலும் 'சமூக உரிமை மீட்பு மாநாடு' என்ற தலைப்பில் சாத்தூரில் மாநாடு  நடத்த இருக்கிறோம். இந்த மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கியிருக்கிறோம்.

இந்த நிலையில் நூலுக்கும் தடை விதித்து இருப்பது கருத்து உரிமை இல்லை என்பதையே காட்டுகிறது. தொடர்ந்து எங்களின் உரிமைகள் அதிமுக, திமுக அரசுகளால் பறிக்கப்படுகின்றன. அண்மையில் மதுரையில், பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடந்த மாநாட்டில், பட்டியல் சாதியில்  வகைப்படுத்தப்பட்டிருக்கும் எங்களை, தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணையில் அறிவிக்க வேண்டும் என்ற பிரகடனத்தில் அமித்ஷா கையெழுத்திட்டார். இது பற்றி பிரதமரிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறினார். இதுதான் எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது " என்று தெரிவித்தார்.

மேலும் அவர்," நாளை (சனிக்கிழமை) நடக்கவுள்ள சமூக மீட்பு மாநாட்டில் கள்ளர், மீனவர், முத்தரையர் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கிறார்கள். எங்களுக்கு ஆதரவு பெருகிவருவதை தமிழக அரசு விரும்பவில்லை அதனாலேயே தடை செய்துள்ளது" என்றும் கூறினார் ஆதங்கத்தோடு.

அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இன்னொரு நூலான 'மதுரை வீரன் உண்மை வரலாறு' ஆசிரியர் குழந்தை ராயப்பன் நம்மிடம் பேசுகையில்,

" சிறிய எழுத்தாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மறைக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லக் கூடாதா? வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நாங்கள் என்ன தீவிரவாதிகளா?

'மதுரைவீரன்' என்பவர் வெறும் குலதெய்வம் மட்டுமில்லை. அவர் ஒரு போராட்டக் குணம் நிரம்பியவர். திருமலை நாயக்கர் காலத்தில் தனது வீரத்தால் கள்ளர்களை அடக்கியவர், வென்றவர். திருமலை நாயக்கரே 'மதுரை வீரன்' என்று பட்டம் அளித்தார். மதுரை வீரனால் மட்டுமே திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த திருட்டுக்களை கட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது. அவர் அருந்ததியர் குலத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரின் வீரம் மறைக்கப்பட்டிருந்தது.

அதனை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆதாரங்களைத் திரட்டி இந்த நூலை எழுதினேன். இது கடந்த 2013 ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. 2000 பிரதிகள் விற்பனை ஆகிவிட்டன.

இப்போது ஏன் தடை செய்கிறார்கள்? எங்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டே இதுபோன்ற தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த 2000 பிரதிகளையும் படித்த வாசகர்கள் எதாவது பிரச்னையில் ஈடுபட்டார்களா? "  என்றார் ஆற்றாமையோடு.

என்று தீரும் அரசு மற்றும் அதிகாரங்களில் இருப்பவர்களின் சர்வாதிகாரப்பசி?


- தேவராஜன்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ