Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் அணு அரசியல்: மினி தொடர் -பகுதி-6

‘உலக நாடுகளை அச்சுறுத்த, அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனையாளர்கள் கண்டுபிடித்த ஆயுதம்தான் அணு குண்டு என்கிற காகிதப்புலி. இதைப் பார்ப்பதற்கு வேண்டுமானால் மிகவும் கொடூரமாகத் தெரியலாம். ஆனால், அப்படி ஒன்று இல்லவே இல்லை’ - மாசேதுங்க்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகமே மக்கள் தலைகளால் நிரம்பி இருந்தது. எங்கு பார்த்தாலும் அணு உலைக்கு எதிரான மக்கள். இதனால், கூட்டம் நடந்த சிறிய அரங்கமான ‘சாரல் அரங்கம்’ பலத்த பாதுகாப்பில் தத்தளித்தது. முதலில் கூடங்குளம் அணு உலை வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் பேசினார்கள். அவர்கள், ‘அணு உலையால் எந்த தீமையும் ஏற்படாது. அணு உலை வந்தால் மீன்வளம் பாதிக்கப்படாது. விவசாயிகளுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படாது. அந்த பகுதி தொழில் வளர்ச்சி அடையும்’ என சிலாகித்துச் சொன்னார்கள்.

ஆனால், குமுறலில் இருந்த மக்கள் அதனைக் கேட்கத் தயாராக இல்லை. மக்கள் சார்பாக பேசிய பலரும், ‘அணு உலை பாதுகாப்பானது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஏற்கெனவே சுனாமியால் கடலோரப்பகுதியில் பேரழிவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் அத்தகைய பேராபத்து நிகழுமானால் அதனை சமாளிக்க முடியுமா? அணு உலையை கடலோரத்தில் அமைத்து இருப்பது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையா? இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறதே.. இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்படாது என்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?’ என சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

அணு உலை நிர்வாகத்தினரால் பல கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை. அதனால் மக்களை ஆத்திரப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட சிலரை பேச விடாமல் தடுத்தனர். நிலைமைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், ‘மக்களின் கருத்துக்கள் அரசுக்கு தெரியப்படுத்தப்படும்’ என தெரிவித்து விட்டு கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார். இல்லாவிட்டால், அந்த இடத்தில் மோசமான சம்பவங்கள் ஏற்படும் அளவுக்கு மக்களின் கோபம் உஷ்ணத்தை அதிகரித்து இருந்தது.

பாதியிலேயே கூட்டம் முடிவடைந்ததால் மீண்டும் நடக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அணுக் கதிர் வீச்சு குறித்தும், வாழ்வாதார நிலை பற்றியும் மற்றும் தாங்கள் எழுப்பிய வினாக்களுக்கும் அணுசக்தி துறை அதிகாரிகள் விரிவாக பதில் கொடுப்பார்கள். அதற்கான வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என மக்கள் நம்பினார்கள். ஆனால், இந்த கூட்டம் முழுமையாக நடைபெற்றதாக அதிகாரிகள் அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். அதில், மக்களின் கருத்துக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டனவா என்பது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி!

அணு உலை வந்தால் தங்களின் வாழ்க்கையே தொலைந்து போகும் என்பதால் கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் போராடினர். ஆனால், இது அரசியல் கட்சிகளின் பார்வையில் மக்கள் பிரச்னையாக தெரியவில்லை என்பதுதான் சோகம். அவர்களுக்கு இந்த விவகாரம் வாக்கு வங்கியாகவே கண்ணில் பட்டது. அதனால் இந்த வாக்குகளை சிந்தாமல் சேகரிப்பது எப்படி என்பதில் மட்டுமே அரசியல்வாதிகள் கவனம் காட்டினார்கள்.

அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு, தங்களின் ஆதரவை தெரிவிப்பதில் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டின. அணு உலை யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது. யார் ஆட்சியின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது பற்றி தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறி மாறி குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்தன. தாங்கள் மட்டுமே போராடும் மக்களுக்கு உதவப் பிறந்தவர்கள் போல அரசியல் கட்சிகள் காட்டிய ஆர்வத்தை மக்கள் ஏற்கவில்லை.

இது தமிழகத்தில் மட்டும் நடக்கும் விசயமல்ல. ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதே அரசியல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக, எல்லா மாநிலத்திலும் மின் உற்பத்தி மையங்கள் இருக்கின்றன. மின் உற்பத்தியில், அந்தந்த மாநில அரசுகளும் பங்கேற்று மின்சக்திகளை உற்பத்தி செய்து தங்களது தேவையை நிறைவேற்றுவதோடு, சில மாநில அரசுகள் விற்பனை செய்து வருவாயையும் ஈட்டுகின்றன.

ஆனாலும், அணு மின்சக்தி திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசு தன் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அணு சக்தி திட்டத்தை ஏதாவது மாநிலத்தில் நிறைவேற்றினால், அதற்கு அந்தந்த மாநில அரசுகள் ஆர்வம் காட்டவே செய்கின்றன். காரணம், மத்திய அரசின் நிதித் தொகுப்பில் இருந்து கணிசமான பணம் மாநில அரசுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்த முதலீடு காரணமாக தங்களுக்கும் வருவாய் இருக்கும் என நம்புகின்றன.

ஆனாலும் அரசியல் விவகாரங்களுக்காக, சில கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகி போகிறது. உதாரணமாக, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹரிப்பூர் நகரில் அணு உலை அமைக்க முடிவு செய்யப்பட்டபோது, அந்தப் பகுதி மக்கள் அதனை கடுமையாக எதிர்த்தார்கள். அந்த போராட்டம் உச்சத்தில் இருப்பதை புரிந்து கொண்ட மம்தா பானர்ஜி, போராடும் மக்களுக்கு ஆதரவு கொடுத்தார்.

பின்னர், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின்னரும் அந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். அங்கே அணு உலை இதுவரை அமைக்கப்படவில்லை. இதே போலவே, ஜெய்தாப்பூரில் கூடுதல் அணு உலைகளை அமைக்க மார்க்சிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களுடன் அவர்கள் இணைந்து தொடர்ந்து போராடுவதால், இப்போது வரையிலும் அங்கு கூடுதல் அணு உலை அமைக்கும் திட்டம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜெய்தாப்பூரில் அணு உலையை எதிர்க்கும் மார்க்சிஸ்டுகள், தமிழகத்தில் ஆதரவுக் குரல் கொடுக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? இந்தியா-ரஷ்யா ஒப்பந்தத்துடன் கூடியதாக கூடங்குளம் அணு உலை அமைந்து இருப்பதுவும் காரணமாக இருக்குமோ?

கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் வாக்குகளை அறுவடை செய்வதில் மட்டுமே அரசியல்வாதிகள் குறியாக இருந்த போதிலும், மக்களின் போராட்டக் குணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் 1986 ஏப்ரல் 26-ல் நிகழ்ந்த விபத்து, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மட்டும் அல்லாமல், அதன் பாதிப்பால் எதிர்கால சந்ததிக்கு ஏற்பட்ட சோகங்கள் என அனைத்தையும் போராடும் மக்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அத்துடன், 2011 மார்ச் 11-ல் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி, ஜப்பானின் ஃபுகுஷிமா நகரில் இருந்த அணு உலையையும் விட்டு வைக்கவில்லை. பனை உயரத்துக்கு 13 மீட்டர் உயத்துக்கு மேல் வந்த அலைகள் அணு உலையை துவம்சம் செய்தன. இதனால் அந்தப் பகுதியில் கதிர்வீச்சு அபாயம் உருவானது. 2000-க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

30,000 பேருக்கும் அதிகமானோர் அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்தப் பணி நடக்கும்போதே பலர் உயிரிழந்தனர். சுனாமி நிகழ்த்திய கோரத் தாண்டவத்தை நேரில் கண்டதால் ஏற்பட்ட அச்சத்தில் இருந்து இப்போது வரையிலும் மீளாத கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு, கூடங்குளத்தில் கடலுக்கு வெகு அருகில் அமைந்து இருக்கும் அணு உலையானது எமனாகவே தென்பட்டது.

இதனிடையே, அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து தப்புவது  குறித்த பயிற்சி அளிக்க அணு உலை நிர்வாகம் முடிவு செய்தது. இந்த முடிவே ‘‘இடிந்தகரை போராட்டம்’ உருவெடுக்க காரணமாக அமைந்தது. அது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்..

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன் 

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Displaying kudankulam_4.jpg

Displaying kudankulam_1.jpg

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close