Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலையில் பாய்ந்த குண்டு! (நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள் - தொடர் 1)

‘‘அப்போது எனக்கு 22 வயது. எனக்கு விவரம் தெரிய தொடங்கியதில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பும் மீனவர்கள் ‘இன்னைக்கு இலங்கை கடற்படை வந்துச்சு. எங்கள அடிச்சாங்க, எங்க வலைகளை அறுத்து விட்டுட்டு நாங்க பிடிச்சு வச்சிருந்த மீன்களை அள்ளிட்டு போய்ட்டாங்க. இன்னைக்கு எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துனாங்க’ன்னு சொல்றத கேட்டிருக்கேன். அன்னைக்குதான் நான் அந்த வேதனையை அனுபவிச்சேன்.  2006-ம் ஆண்டு அக்டோபர் மாசம் 26  ஆம் தேதி நான், எங்க அண்ணன், அப்பா மூணு பேரும் மீன்பிடிக்கிறதுக்கான டோக்கன் வாங்கிட்டு எங்க விசைப்படகில் மீன்பிடிக்க போனோம்.

அன்னைக்கு மதியம் 3 மணியப் போல மல்லிப்பட்டிணம் பகுதியில், நம்ம நாட்டு கடல் எல்லைக்குள்ள மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம். என்னோட அண்ணன் படகை ஓட்டினார். நான் படகின் தென் பகுதியில் நின்னுக்கிட்டு இருந்தேன். அப்போ கடலில் ஒரு மாற்றம் தெரிஞ்சது. அது இலங்கை கடற்படையினர் வருவதற்கான அறிகுறி என்பதை அறிந்து கொண்ட எங்க அண்ணன்,  படகை கரையை நோக்கி திருப்பினான்.

அந்த நேரத்தில எங்களை நோக்கி இலங்கை கடற்படையினரின் கப்பல் வேகமாக வந்துச்சு. எந்த எச்சரிக்கையும் கொடுக்காமலே, சுமார் 100 அடி தூரத்தில இருந்து அவங்க எங்கள நோக்கி துப்பாக்கியால சுட்டாங்க. முதல் குண்டு என்னோட வலது நெற்றியில பாய்ந்தது. அந்த குண்டின் சிதறல்கள் என்னோட தலையின் வலது பக்கம், பின்புற தலையின் இடது பக்கம், மூக்கு, முதுகு பகுதி, வலது தோள்பட்டை, வலது காலின் தொடை என பல இடங்களில் பாய்ந்தது. எனது பற்களும் உடைந்து சிதறின.

கண் இமைக்கும் நேரத்தில் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அவர்கள், உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் சென்றபின், அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்களின் உதவியுடன், மாலை 7 மணிக்கு கரைக்கு திரும்பினோம்.

மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில முதலுதவி சிகிச்சைக க்கு பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தாங்க. பின்னர் தனியார் மருத்துவமனையில் எனது உடலில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டு சிதறல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள்.

தலையில் பாய்ந்த குண்டு மூளைப்பகுதியில் உள்ளது. அதனை எடுத்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் இப்போதும் துப்பாக்கி குண்டுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை விட வதை பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி குண்டுகளின் தாக்கத்தால் எனக்கு காது சரிவர கேட்காது. இடது கை, கால் செயல்படவில்லை.

மூக்கு பகுதி பாதிக்கப்பட்டதால் வாயால்தான் சுவாசிக்கும் நிலை. கை, கால் இயங்காத நிலையில் அடுத்தவர்களின் துணையில்லாமல், என்னால் எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில், உயிருள்ள ஒரு ஜடப் பொருளாகவே மாறிவிட்டேன்’’ - காரைக்கால் மாவட்டம் மண்டபக்தூர் கிராமத்தை சேர்ந்த மீனவர் சௌந்தர்ராஜனுக்கு, இலங்கை கடற்படையினரால் நேர்ந்த துயரத்தின்  பதிவுதான் இது.

நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு இளைஞனுக்கு நடந்த கொடுமை அல்ல இது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக கடலோர மாவட்டங்களில், வயிற்றுப் பசிக்காக வாழ்க்கை போராட்டம் நடத்தி வரும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் அழுகுரல். வானிலை நிலவரம், தங்கம் விலை நிலவரம், அணைகளின் நீர்மட்டம் போன்ற அன்றாட செய்திகளின் வரிசையில், நாள் தவறாமல் இடம் பிடிப்பது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலும் ஒன்றாக உள்ளது.

இந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் போன்ற கடலோர மாநிலங்களில் உள்ள மீனவர்கள் சந்திக்காத பிரச்னைகளை ஒட்டு மொத்த தமிழக மீனவர்களும் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களின் மீன்பிடி தொழில் மீள முடியாத பிரச்னைகளுடன் இருந்து வருகிறது.

அண்டை நாடு என இந்திய அரசால் சொல்லப்படும் இலங்கை கடற்படையினரின் கண்மூடிதனமான நடவடிக்கைகளே இந்த பிரச்னைகளுக்கு காரணம். 1983 ஆம் ஆண்டு, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீன் பிடி கூலி தொழிலாளியான முனியசாமியை தங்களது துப்பாக்கி குண்டுகளுக்கு முதல் பலியாக்கிய இலங்கை கடற்படையினர், இன்றுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊனப்படுத்தப்பட்டுள்ளனர்.

30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். இத்தனைக்கு பின்னரும் தங்களது தாக்குதல்களை இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலை சகித்துக் கொண்டு, நமது மீனவர்கள் கடலுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

உயிரை பணயம் வைத்து ஏன் இந்த தொழிலில் ஈடுபட வேண்டும். வேறு தொழில் தெரியாதா அல்லது வேறு கடல் பகுதிதான் இல்லையா? நமக்கு தோன்றும் இந்த கேள்விகளை மீனவர்கள் முன்வைத்தால் அவர்களின் பதில் என்ன?

அலைகள் ஆர்ப்பரிக்கும்...

இரா.மோகன்
படங்கள்:
உ.பாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close