Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 7)

 

நவம்பர் 21, 2014. நள்ளிரவிற்கும், அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரம். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. மறுநாள், 142 அடியை தழுவி வந்த நீரானது விவசாயியின் முகம் துடைத்தது. தென் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டது. தமிழக - கேரள எல்லையில் நவம்பர் 21 ஆம் தேதி மாலையே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ‘142’ அடியை நினைவு கூறும் வகையில் சீரியல்  பல்புகளால் பிரம்மாண்டமாக அமைத்த விளக்குகள் லோயர் கேம்ப்-பிலுள்ள பென்னிக்குக் மணிமண்டபத்தை பளீரிடச் செய்தது. 

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடிய காலத்தில், இப்போது அணையை காப்பாற்றியதாக சொல்லிக்கொள்ளும் கட்சியினரின் ஆதரவு துளி கூட இல்லை.  இருந்தாலும் அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பு வந்ததும், ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடி அறிக்கைவிட ஆரம்பித்தன. முல்லை பெரியாறு போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டபோது அமைதி காத்த அரசியல் இயக்கங்கள், அறுவடைக்காலத்தில் அரிவாளை (அறிக்கைகளை) எடுத்துக்கொண்டு வந்தன.

142 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தாலும், பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்துவது தான் நம்முடைய இலக்கு. அதேவேளையில் அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டத்தில் ஏற்பட்ட இழப்புகளும் ஏராளம். அந்த இழப்புகளை அறிந்தால் தான் இந்த வெற்றியின் ருசி தெரியும்.   

136 அடியாக நீர்மட்டத்தினை குறைத்ததால் இழந்தவை :


முல்லை பெரியாறிலிருந்து வரும் நீர், மின்சாரம் எடுக்கப்பட்டு நீரானது வைகை அணைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பேரணை, வாடிப்பட்டி , சோழவந்தான் வழியாக கல்லந்திரி வரையிலும், மற்றொரு கால்வாயான திருமங்கலம், இடைய மேலூர் – குறிச்சி கண்மாய் வரையிலும் கொண்டு செல்லப்படுகிறது.

152 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்தால், கம்பம் பகுதியில் 17 ஆயிரம் ஏக்கரில் இருபோக சாகுபடி, பேரணையிலிருந்து வாடிபட்டி , சோழவந்தான்  வழியாக கல்லந்திரி வரை 1,85,000 ஏக்கரில் இருபோக சாகுபடி , இடைய மேலூர் – குறிச்சி கண்மாய் வரையும் 20,000 ஏக்கரில் ஒருபோக சாகுபடி என 2.44 லட்சம் ஏக்கர் விவசாய பரப்பில் ஒருபோக , இருபோக விவசாயம் செய்யப்பட்டது. அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதும், ( 152-136=16 அடி நீரை தமிழகம் பயன்படுத்த முடியாமல் போனது ) தீபாவளி தள்ளுபடியை போல மேற்சொன்ன  பாசன பரப்பு கணிசமாக குறைந்துபோனது.

முல்லை பெரியாறு நீரினை நம்பி,  இடைய மேலூரிலிருந்து – திருப்பத்தூர் வரையிலான  விரிவுபடுத்தப்பட்ட கால்வாய், இதுவரை முல்லை தண்ணீரை பார்க்கவே இல்லை. மேற்சொன்ன விவசாய நிலங்கள், முல்லை பெரியாறு நீர் பொய்த்துபோனதை கண்டு விவசாயம் கைவிடப்பட, அந்த விளைவினை மறைமுகமாக ஆதரித்த கிரானைட் கொள்ளை முதலாளிகள், விவசாய நிலங்களை குவாரிகளாக்கினர். 

கிரானைட் குவாரிகள் செயல்பட்டதாக சொல்லப்படும் பகுதிகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திலேயே, இன்னும் சரியாக சொன்னால் அணையின் நீர்மட்டத்தினை 136 அடியாக குறைக்கப்பட்ட பின்னரே, குவாரிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

வெள்ளாமை நிலத்தினை கிரானைட் முதலாளிகளுக்கு கொடுத்த விவசாயிகள், தங்களை திருப்பூர் சாயப்பட்டறை தொழிற்சாலைகளுக்கு தாரை வார்த்தன. ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற சாயப்பட்டறை தொழில் அதிகமுள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர், ஒரு காலத்தில் முல்லை பெரியாறை நம்பி விவசாய செய்து வந்த ஐந்து மாவட்ட விவசாயிகளே. இத்தகைய செயற்கை பேரழிவுகளுக்கு பின்னால்தான், அணையின் நீர்மட்டத்தின 142 அடியாக உயர்த்தியுள்ளோம்.

இப்படி கடந்த நவம்பர் மாதத்தில் பெற்ற நீரினை முறையாக தேக்கி வைக்காததால், அதற்கடுத்த மாதங்களிலேயே வந்த பஞ்சத்தையும் நாம் அனுபவித்தோம். பெரியாறினால் பாசனம் பெறும் பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட குளங்களும், வைகை அணையினை தொடர்ந்திருக்கும் 384 குளங்கள் ஆகியவற்றை முறைப்படி பாரமரித்து தேக்கியிருந்தாலே அதற்கடுத்து வந்த பஞ்சத்தை தவிர்த்திருக்கலாம்.

1960 களுக்கு பின் நீர் மேலாண்மைக்காக எந்தவொரு திட்டத்தினையும் கொண்டுவராமல், மற்றவர்கள் ஆரம்பித்த திட்டங்களின் மீது தங்களுடைய அரசியலை மட்டும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் கட்சிகள்தான்  இன்னும் நம்மை ஆட்டிப்படைக்கின்றன.

இந்த நிலையில்,  கடந்த மே மாதம் அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக தேக்கிக்கொள்ளலாம் என வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நாதன் தலைமையிலான குழு அணையினை சோதனை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் அவ்வப்போது கேரளா இடைஞ்சலை கொடுத்து வருகிறது.

அணைப்பகுதிக்கு கேரள வனத்துறை, தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான படகு மூலம்தான் அணைக்கு செல்ல அனுமதி என்ற நிலையில், இடுக்கி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வான பிஜூ மோள், கேரள பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறைக்கு சொந்தமான படகில் அணைப்பகுதிக்கு சென்று, அணைக்கட்டு நிபுணர் போல பார்வையிட்டார்.

அதையும், அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும், தேனி மாவட்டத்துக்கு சொந்தகாரருமான  ஓ.பன்னீர் செல்வம் பார்த்துக்கொண்டு பேசாமல்தான் இருந்தார்.

தங்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் முல்லை பெரியாறில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது என  அ.தி.மு.க பெருமை அடித்துக் கொள்கிறது. உண்மையில் இந்த முல்லை பெரியாறு வெற்றி அவர்களுக்கு மட்டும்தான் சொந்தமானதா ?

பார்ப்போம்....

- உ.சிவராமன்
படங்கள்
: வீ.சக்தி அருணகிரி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ