Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் அணு அரசியல்: மினி தொடர் -பகுதி-7

‘ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணு குண்டுகளை வீசியது போர்க் குற்றமே’

- ஜார்ஜ் வால்ட் (அமெரிக்க அறிவியல் அறிஞர்)

கூடங்குளம் அணு உலைப்பணிகளை விரைந்து முடிக்க முடிவெடுத்த அணு உலை நிர்வாகம், அதற்காக மக்களை தயார் செய்யும் வேலையில் தீவிரம் காட்டியது. மக்களிடம் இருந்த எதிர்ப்பை போக்கி, அவர்களின் ஆதரவைப் பெற முடிவு செய்து, உள்ளூர் பத்திரிகைகளின் துணையுடன் அணு உலை குறித்த தகவல்களை பரப்ப முடிவு செய்தது. ஆனால், தங்களின் செயலே மக்களின் எதிர்ப்பு உணர்வை முழுமையாக தூண்டிவிடும் என்பது, பாவம் அப்போது  அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை.

அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அதில் இருந்து மீள்வது எப்படி? என்கிற பாதுகாப்பு ஒத்திகையை அணு உலை நிர்வாகம் நடத்த வேண்டியது, சர்வதேச வரைமுறை. ஆனால், நமக்குதான் எந்த வரைமுறையும் கிடையாதே! இருந்த போதிலும், பாதுகாப்பு ஒத்திகை நடத்தி மக்களை சிரமப்படுத்துவதற்கு பதிலாக, அதுபற்றி செய்தித்தாள்களில் எழுத செய்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என முடிவு செய்தார்கள் போலும். திடீரென செய்தியாளர்களை அழைத்த அணு உலை நிர்வாகம்,  முதல் அணு உலைக்குள் அழைத்து சென்று, அங்குள்ள இடங்களை சுற்றிக் காட்டியதுடன், அணு உலை எப்படி செயல்படப் போகிறது என்பதை விளக்கினார்கள்.

மூன்றாம் தலைமுறை அணு உலையில் குளிர்விப்பான்கள் பற்றி விளக்கம் கொடுத்தார்கள். நீர் மூலமாக குளிர்விப்பது, அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் காற்றின் மூலமாகவே குளிர்விக்கும் ஏற்பாடு என அனைத்தையும் சுற்றிக் காட்டினார்கள். டர்பைன் சுழல்வதன் மூலமாக மின் உற்பத்தி ஏற்படும் சாத்தியக்கூறு உள்ள இடங்களை காட்டினார்கள். அணு உலையின் மீது ஏற்றி அங்குள்ள கட்டுமானங்களை எல்லாம் பார்க்க வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக சில நாளிதழ்களில், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கட்டுரை எழுதச்செய்தனர்.

அதன்படி, ‘அணு உலையில் சிக்கல் ஏற்பட்டால் நீண்ட சங்கொலி எழுப்பப்படும். உடனே மக்கள் தங்களின் வீடுகளின் ஜன்னல் உள்ளிட்டவற்றை அடைத்துவிட வேண்டும். அத்துடன், உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறி அணு உலையை விட்டு வெகு தொலைவுக்கு தப்பிச் செல்ல வேண்டும்’ என குறிப்பிட்டனர். இதனை படித்த மக்கள் அச்சம் அடையவில்லை. மாறாக கோபம் அடைந்தனர். அபாயத்தின் அடையாளமாக நீண்ட சங்கொலி கேட்டதும், தங்களின் குழந்தைகளையும், ஆடு, மாடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து வேகமாக எப்படி நகரத்தை விட்டு வெளியேறி, வெளியூருக்கு செல்ல முடியும்?

அணு உலை நிர்வாகம் தங்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைக்க தயாராகி வரும் பேராபத்து, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருப்பதை மக்கள் புரிந்து கொண்ட தருணம் அது. அவர்களுக்கு அந்த சமயம் எரிச்சலும், கோபமும் அதிகமாக வந்தது. சொந்த ஊரிலேயே அகதியாகப் போகும் ஆபத்து தங்களை சூழ்ந்து நிற்பதை உணரத் தொடங்கினர். அது வரையிலும், அணு உலை எதிர்ப்பாளர்கள் பேசியதைக் கேட்டு எள்ளி நகையாடிய மக்கள் கூட, தாங்கள் எதிர்கொள்ளப் போகும் அபாயகரச் சூழல் மனக்கண் முன்பாக வந்து சென்றதும் அஞ்சத் தொடங்கினார்கள்.

இதனால், மக்களிடம் தன்னெழுச்சியாக போராட்டக் குணம் மேலோங்கியது.  கூடங்குளத்தை சுற்றிலும் சுமார் 26 கிராமங்கள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்காலம் என்ன? அனைவரையும் 30 கி.மீ தூரத்துக்கு அப்பால் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுமா? அல்லது அணு உலையில் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அனைவரையும் வெளியேற்ற இயலுமா? என்கிற கேள்விகளால் உந்தப்பட்ட மக்கள், அணு உலையை மூடக்கோரி வீதிக்கு வந்து போராடினார்கள்.

மக்கள் அணு உலையை முற்றுகையிடுவது, சாலை மறியலில் ஈடுபடுவது என எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. ‘அனுமதி இல்லாமல் வீதிக்கு வந்து போராடினால் அல்லது சாலையை மறித்தால் கைது செய்வோம்’ என போலீஸ் எச்சரித்தது. காவல்துறையின் இந்த அச்சமூட்டும் செயலுக்கு மக்கள் அஞ்சவில்லை. மாறாக, கூடுதல் உத்வேகத்துடன் கிளர்ந்து எழுந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். ஆனாலும், போராட்டத்தின் வேகம் குறையவில்லை.

அதன் பின்னர், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், ‘கூடங்குளம் அணு உலை தரமற்ற உதிரிப் பொருட்களால் கட்டமைக்கப்பட்டு இருப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்துடன், அணு உலையை அமைப்பதற்கு முன்பாக, இந்த இடத்தில் நிலத்தியல் தன்மை பற்றி ஆய்வு நடத்தப்படவே இல்லை. அணு உலை அமைந்திருக்கும் இடமானது சுனாமியால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. மேலும், இந்தபகுதியில் பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, அணு உலையை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது’ என தெரிவித்தனர்.

வழக்கம் போலவே, அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் போராட்டத்தின் வேகம் தீவிரம் அடைந்தபடியே இருந்தது. போராடும் மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து சேர்ந்தார்கள். காரணம், அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்படப் போவது அவர்களும்தானே! தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆர்ப்பாட்டம், அணு உலை முற்றுகை, சாலை மறியல் என நடத்தி வந்த போராட்டத்தை முறைப்படுத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர்.

போராட்டக் களத்தின் தலைமையகமாக, இடிந்தகரை கிராமத்தை அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தேர்வு செய்தனர். அங்குள்ள தேவாலயத்தின் முன்பாக இருந்த பெரிய மைதானத்தில் ஒரே நாளில் பந்தல் போடப்பட்டது. அதில், உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் தலைமையில், 12 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதென முடிவு செய்தனர். அதற்கான நபர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஆனால், அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரம் காட்டிவரும் ஒட்டு மொத்த மக்களுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்க ஆயத்தம் ஆனார்கள். முடிவில், 127 பேர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். 2011-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இடிந்தகரையில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம், உலகம் முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் அளவுக்கு இருக்கும் என அதில் பங்கேற்றவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

‘அணு உலையால் சாவதை விடவும், பட்டினி கிடந்து அறவழியில் உயிரை விடுவோம்’ என்பதில் மக்கள் பிடிவாதமாக இருந்தனர். உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாக உண்ணாவிரத பந்தலில் 5000 பேர் குவிந்திருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 2000க்கும் அதிகமான மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. பள்ளிக் குழந்தைகள் பள்ளிகளை புறக்கணித்து விட்டு, போராட்டக் களத்தில் குழுமினார்கள். பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மக்களின் இந்த போராட்டத்தை அறிந்ததும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், எழுத்தாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராடும் மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கினர். ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ, போராடும் மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை பதிவு செய்தார். ‘தங்கள் நலனுக்காக மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த தமிழகத்தின் நலனுக்காக இந்த மக்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு உலைக்கு எதிராக போராடி வரும் இந்த மக்களுக்கு கடைசி வரையிலும் நாங்கள் துணையாக இருப்போம்’ என தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டம் உக்க்கிரமாக இருந்ததால், போராட்டக்காரர்கள் உடல் அளவில் சோர்ந்து போனார்கள். நான்காம் நாளில் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று குளுக்கோஸ் ஏற்றும் நிலைமை உருவானது. இதனை பார்த்த மக்கள் கோபம் அடைந்தனர். தங்களின் சகாக்கள் உண்னாவிரதம் இருந்து மயக்கம் அடையும் நிலையிலும், அரசின் சார்பில் யாருமே வந்து எட்டிப் பார்க்காததால் அதிருப்தி அடைந்த மக்கள், திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராடும் மக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவரான வெள்ளையன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததோடு, தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார். பாதுகாப்பான பூமி தேவை என்பதை விளக்கிய அவர், 'போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஒருநாள் (2011, செப்.20-ம் தேதி) அடையாள கடையடைப்பு நடத்தப்படும்' என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார். இப்படி இடிந்தகரையில் போராடும் மக்களுக்கு  தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகியபடியே இருந்தது.

தே.மு.தி.க.வும் போராடும் மக்களுக்கு ஆதரவை தெரிவித்தது. அக்கட்சியின் சார்பாக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான மைக்கேல் ராயப்பன், போராட்டக் களத்தில் வந்து மக்களோடு அமர்ந்து தங்களின் ஆதரவை தெரிவித்தார். அத்துடன், விஜயகாந்த் நேரில் வந்து போராடும் மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். அப்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணிக் கட்சியாக இருந்த தே.மு.தி.க.வை கலந்து ஆலோசிக்காமல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பாகவே ஜெயலலிதா, பத்து மேயர் சீட்டுக்கும் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.

இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் தொடங்கி இருந்த சூழலில், விஜயகாந்த் இடிந்தகரைக்கு வந்து போராடும் மக்களுக்கு ஆதரவாக பேசியது, முதல்வரான ஜெயலிதாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் கடுப்படைந்த ஜெயலலிதா, உண்ணாவிரதம் நடந்து வரும் நான்காம் நாளில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘கூடங்குளம் அணு மின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு சிலர் தவறான தகவல்களை தெரிவித்து மக்களை குழப்புகிறார்கள்’ என குறிப்பிட்டார். முதல்வரின் இந்த அறிக்கை போராடும் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் போராட்டக் களத்தில் இருபதுக்கும் அதிகமானோர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக தகவல் வந்தது.

இந்த விவரங்கள் முதல்வரான ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், மத்திய அரசை அவர் மிகக்கடுமையாகச் சாடி இருந்தார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதிய அந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் மிகக் கூர்மையாக கவனிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததால், அதனை திசை திருப்ப அரசு துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்த வாரம் பார்ப்போம்...

-ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Displaying kudankulam_4.jpg

Displaying kudankulam_1.jpg

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close