Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உறைந்த மரணம்... உலகை உலுக்கிய புகைப்படங்கள் - பகுதி 7

                                                            

நெற்றிப் பொட்டில் குண்டு பாய்ந்து மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கும் ஒரு ஸ்பெயின் நாட்டுக் குடியரசு போராளியின் புகைப்படம் இது. மரணிப்பதற்கு ஒரு சில விநாடிக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற போர்முனைப் புகைப்படக் கலைஞரான ராபர்ட் கபாவினால் (Robert Capa) எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம்.

சீருடை அணியாமல் சாதாரண உடையில் வலது கையிலிருந்து நழுவி விழும் துப்பாக்கியுடனும், துப்பாக்கி குண்டுகள் வைக்க அணிந்துகொள்ளும் தோல் பைகளுடன் குண்டடி பட்டு கீழே சரியும் இந்தப் போராளியின் பெயர் ஃபெடரிகோ போரல் கார்சியா (Federico Borrell García). 

1936. ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். கெரோ முரியனோ (Cerro Muriano) என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி ராபர்ட் கபாவால் எடுக்கப்பட்ட மிக முக்கியமான இந்தப் புகைப்படம் ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரத்தை உலகிற்கு காட்டியதோடு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சக்தி வாய்ந்த போர்ப் புகைப்படமாகவும் இருந்தது.

ஒரு துப்பாக்கித் தோட்டாவினால் உயிர் பிரியக் கூடிய முக்கியமான தருணத்தை மிகத் துல்லியமாகவும், வேகமாகவும் திகிலூட்டக் கூடிய வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலக அளவில் முக்கியமான புகைப்படமாகக் கருதப்பட்டாலும்,  1970 வாக்கில் புகைப்படத்துறையின் நம்பகத்தன்மையும் அதன் நேர்மையும் கடும் விவாதத்திற்க்கு உட்படுத்தப்பட்டு, உலக அளவில் பெரிய சர்சையை ஏற்படுத்தியதற்கும் இந்தப் படமே முக்கியக் காரணமாக அமைந்தது.

1936-1939 வரை நடைபெற்ற ஸ்பெயின் உள்நாட்டுப்போரை பாசிசத்திற்கு ஜனநாயகத்திற்குமானதாக நினைத்தது தேசியவாத இராணுவம். அதேசமயம் இந்தப் போரை முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்க்குமானதக குடியரசுக் கட்சி நினைக்க சித்தாந்தத்தின் அடிப்படைப் போராக இது மாறியது.

17 ஜூலை 1936-ல் ஆரம்பித்து 1 ஏப்ரல் 1939ல் முடிவடைந்த இந்தப் போரினால் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் இறந்ததுடன், நான்கரை லட்சம் பேர் வரை நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறினர் என்று கூறுகிறது வரலாற்றுப் பதிவுகள். 1930 ஆண்டு வாக்கில் ஸ்பெயின் வலது சாரி தேசியவாத அமைப்பு, இடது சாரி குடியரசுக் கட்சி என இரு பிரிவாகப் பிரிந்து கிடந்தது. அரசர்கள், முடியாட்சியாளர்கள், நில முதலாளிகள், ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் இராணுவம் ஆகியன தேசியவாத அமைப்பில் அங்கம் வகித்திருந்தன. தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், சோஷலிஸ்டுகள் மற்றும் விவசாயிகள் போன்றவர்கள் குடியரசுக் கட்சியில் இருந்தனர். உலக அளவில் பெருமந்த நிலையில் இருந்த பொருளாதாரம் ஸ்பெயினையும் விட்டு வைக்கவில்லை. இதனால் 1929-ல் அங்கே இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் இரானுவத்தின் சர்வாதிகார ஆட்சி நாட்டை ஆண்டுகொண்டிருந்தது.

இந்நிலையில் 1936-ல் அதே இராணுவப் புரட்சியின் மூலமாக குடியரசுக் கட்சியின் கைவசம் இருந்த ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்ற தேசியாவதிகள் செய்த முயற்சிக்கு ஜெர்மனியும் இத்தாலியும் ஆதரவு அளித்தது. அட்லாண்டிக் விரிகுடாவிலும் மத்திய தரைக்கடலிலும் அமைந்திருந்த ஸ்பெயினின் துறைமுகம் பூகோள ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அது நீர்மூழ்கிக் கப்பற்படை அமைக்க முக்கிய தளமாக தங்களுக்கு அமையும் என பாசிச நடுகளான ஜெர்மனியும் இத்தாலியும் நினைத்தது.

அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் இவ்விரு நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களைக் கொடுத்து அதன்மூலம் வலிமை மிக்க நாடுகளாக ஜெர்மனியும் இத்தாலியும் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. இப்படியான உள்நோக்கத்தோடுதான் ஜெர்மனியின் ஹிட்லரும் இத்தாலியின் முசோலினியியும் ஆயிரக்கணக்கில் படைகளையும், போர் தளவாடங்களையும் தேசியவாதத் தரப்பிற்கு படைக்கு கொடுத்து உதவி வந்தனர்.

மேலும் இதன் மூலமாக அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருந்த  கம்யூனிசத்தைக்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் ஜெர்மனியும் இத்தாலியும் நினைத்தது. இந்தக் காலகட்டத்தில் பிரான்சும் பிரிட்டனும் இதில் எந்த அணியிலும் சேராமல் போரில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவினை எடுத்ததால் உலக அளவில் ஸ்பெயினுக்கு வரக் கூடிய உதவிகளை இந்நாடுகள் தடுத்து நிறுத்தியது என்றாலும், ஜெர்மனியும் இத்தாலியும் அனுப்பிய போர் தளவாடங்களை இவ்விரு நாடுகளால் தடுக்க முடியவில்லை.

சோவியத் யூனியனான ரஷ்யா குடிரசுக் கட்சிக்கான அடிப்படைத் தேவைகளை மட்டுமே கொடுத்து வந்ததது. ஆனால் ஜெர்மனியும் இத்தாலியும் தேசியவாதப் படைக்கு போரில் வெற்றியடையத் தேவையான போர் தளவாடங்களைக் கொடுத்து உதவிக் கொண்டிருந்தது. இதனால் ரஷ்யாவால் ஜெர்மனி மற்றும் இத்தாலி கொடுக்கும் உதவிகளால் தாக்குபிடிக்க முடியாமல் போனது. இதனால் 1939 ஏப்ரல் 1-ல் ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆதரவு அளித்த தேசியவாதப்படை வெற்றியடைந்தது. தொடர்ந்து வலதுசாரி  சர்வாதிகாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ  (General Francisco Franco)  தலைமையில சர்வாதிகார நாடாக ஸ்பெயின் உருவானது. இவர் நவம்பர் 20 1975-ல் தான் இறக்கும்வரையில் வரை ஸ்பெயினை தன்னுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வைத்திருந்தார்.

ஆகஸ்ட் 1936-ல் ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் உச்சத்தில் இருந்தபோது தங்களது புகைப்படம் மூலமாக அதைப் பதிவு செய்ய ராபர்ட் கபாவும், உலகத்தின் முதல் பெண் போர் புகைப்படக் கலைஞரான  கெர்டா பொஹோரில்  (Gerta Pohorylle) என்கிற கெர்டா தாரோவும்  (Gerda Taro) அங்கு செல்கின்றனர். வியூவ் (View) மற்றும் லைஃப் (Life) பத்திரிக்கைகளுக்காக புகைப்படம் எடுக்க சென்ற ராபர்ட் கபாவிற்கு வயது இருபத்தி இரண்டு, தாரோவுக்கு 26.  புகைப்படக் கலைஞர் ராபர்ட் கப்பா என்ற  என்ரி ஃப்ரைடுமேன் (Endre Friedmann) ஹங்கேரி நாட்டின் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

இந்தப் புகைப்படம் எடுத்த சூழல் குறித்து ராபர்ட் கபா, ‘’ஒரு இருபது போராளிகளுடன் அப்போது பதுங்குகுழியில் நான் பதுங்கி இருந்தேன். இந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது என்னால் கேமராவின் வியூவ் ஃபைண்டரால் மூலமாகப்  பார்த்து எடுக்க முடியவில்லை. எங்களுடன் பதுங்குகுழியில் இருந்த கார்சியா என்ற இந்தப் போராளி மேலே செல்லும்போது, என் தலைக்கு மேல் நான் வைத்திருந்த 35mm லைக்கா II (35 millimeter Leica II) என்ற கேமராவினால் தொடர்ந்து அவரை நான்  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது உருவானதுதான் இந்தப் படம்’’ என்று பதிவு செய்திருக்கிறார்.

போர் நடந்த காலகட்டத்தில் எந்த ஒரு புகைப்படக்காரர்களுக்கும் பத்திரிக்கைக்காரர்களுக்கும்  போர் முனைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பத்திரிக்கை மற்றும் புகைப்படக் கலைஞர்களால் போரின் உண்மை நிலையைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் போர்க் கொடுமையால் மக்கள் ஓடிச் செல்வது போன்ற படங்களையும், போரின்போது ஏற்படும் சம்பவங்களைப் போன்று செட்டப் செய்தும் எடுத்தப் புகைப்படங்களையுமே பிரசுரிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதனால் ராபர்ட் கப்பா எடுத்த உலக முக்கியம் வாய்ந்த இந்த புகைப்படமும் நாடகப்படுத்தப்பட்ட செட்டப் புகைப்படம் என்ற சர்ச்சை பெரிய அளவில் உருவானது.

1947-ல் ராபர்ட் கப்பா மற்றும் டேவிட் சிம் செய்மர், ஹென்ரி கார்ட்டன் பிரசோன், ஜார்ஜ் ராட்ஜர்  (David "Chim" Seymour, Henri Cartier-Bresson, George Rodger) ஆகியோர் சேர்ந்து மேக்னம் (Magnum) என்ற உலகத்திலேயே முதல் கூட்டுறவு புகைப்பட நிறுவனத்தை (photographic cooperative) உருவாக்கினார்கள். பின்னாட்களில் மிகவும் சக்திவாய்ந்த புகைப்பட நிறுவனமாக உருவெடுத்த இந்நிறுவனம் பல புகழ் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல உலகப் புகழ் பெற்ற புகைப்படங்கள் உருவாவதற்கான தூண்டுகோலாகவும் மாறியது.

நியூயார்க், பாரிஸ், லண்டன், டோக்கியோ போன்ற நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட  தொடங்கியதோடு  மிகவும் துணிச்சலாக எடுக்கக் கூடிய புகைப்படங்களுக்கு ராபர்ட் கப்பா கோல்டு மெடல் (Robert Capa Gold Medal) என்ற பெயரிலான விருது அமெரிக்கா வெளிநாட்டு பிரஸ் கிளப் (Overseas Press Club of America) சார்பாக வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ராபர்ட் கபாவின் இந்தப் புகைப்படத்தின் மீது பல அறிஞர்கள்  ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்தப் புகைப்படம் ராபர்ட் கபாவினால் நாடகத்தன்மை (செட்டப்) கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் இன்றளவும் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
                                                                                                                                   
-ஜெ.முருகன் புகைப்படம் பேசும்...

 

முந்தைய தொடர்களைப் படிக்க...

  

 

 

 

 

 

 

 

 

 

                                                                                                                                                                                             

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close