Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 ஆம் தேதி தேர்வுக்கு 2 ஆம் தேதி இரவு கடிதம்: திருநங்கை பிரித்திகா சந்தித்த சவால்!

காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க,  பிரித்திகா யாஷினியை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த பிரித்திகா யாஷினி?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.

இப்படி தனிமையையும், தீண்டாமையையுமே தங்கள் வாழ்க்கையின் சீதனங்களாக ஏற்று சகித்து வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம், திருநங்கைகளின் வாழ்வில் எப்போதும் தொடர்கிறது.

விண்ணப்பித்த மறுகணம் முதல் தகுதிச்சுற்றின் கடைசி நொடிவரையில் அலைகழிக்கப்பட்டு, இன்னும் போராடிக்கொண்டிருக்கும் பிரித்திகா என்கிற பிரதீப் குமார், “இப்போது கிடைத்துள்ள நீதிமன்ற உத்தரவு எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது" என்கிறார் கண்களில் நம்பிக்கை வழிய.

“சொந்த ஊர் சேலம். பி.சி.ஏ முடிச்சிருக்கேன். என்னோட இருபதாவது வயசுலதான் நான் ஒரு பெண் என்கிற விஷயம் புரிய ஆரம்பித்தது. அப்பா, அம்மாக்கிட்ட சொன்னதும் அவங்க நம்பலை. டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணினோம். முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சியா இருந்தது. அவங்களுக்கு தொந்தரவா இருக்க வேண்டாமென்று நானாகவே வீட்டை விட்டு வெளியேறிட்டேன்" என்கிற பிரித்திகாவின் குரலில் சோகம் அப்புகிறது ஒரு நொடி.

தன் வாழ்க்கை திசை மாறியதில் தளர்ந்துவிடாமல் போராட ஆரம்பித்திருக்கிறார் பிரித்திகா. விடுதி வார்டன், தொண்டு நிறுவன ஊழியர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர் என தொடர்ந்த பணிகளுக்கிடையில் தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து செய்தார்.

தன் தளராத முயற்சியினால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு வரை போராடி வந்திருப்பவரை சந்தித்து, வாழ்த்து தெரிவித்துவிட்டு பேசினோம்.

திருநங்கையாக உங்களை உணர்ந்த நொடியில் உங்களது பெற்றோரின் மனநிலை?


“முதலில் அவர்கள் நம்ப மறுத்தனர். பின்னர் மெதுவாக இவற்றை நான் புரியவைத்தபோது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களால் என்னை ஒதுக்கவும் முடியவில்லை. அவர்கள் நல்லவர்கள். அதனால் நானே வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

நான் முதலில் கண்ட மருத்துவர் என்னை ஒரு பரிசோதனைக் கூட  எலியாக எண்ணி பல பரிசோதனைகள் மேற்கொண்டார். தினமும் நான் அவருக்கு என்னை பற்றிய மருத்துவக்குறிப்புகளை கூறுவேன். சொல்லப்போனால் என்னை வைத்துதான் அவர் திருநங்கைகளைப்பற்றி படித்து தெரிந்து கொண்டார்.  என்னை ஒரு காட்சிபொருளாக வைத்து அவர் மற்றும் பல டாக்டர்களுக்கு கருத்தரங்கு ஒன்றையும் நிகழ்த்தினார். எனக்கு அதுதான் திருநங்கைகளை பற்றிய இந்த சமுதாயத்தின் பார்வையை எனக்கு மெல்ல புரியவைத்தது.

பின்னர் நான் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன். அத்தகைய சிகிச்சைகள் பொதுவாக நான்கிலிருந்து ஐந்து மாதங்கள் வரை நடைபெறும். திருநங்கையரின் சாபமாக கருதப்படும் அந்த அறுவை சிகிச்சை காலங்கள், மிகவும் வேதனை தருபவை. இவற்றை பற்றிய முறையான ஆலோசனைகளும் திருநங்கைகளுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்படுவதில்லை. ஆகையால் பல திருநங்கைகள் இதற்கான வழிமுறைகள் தெரியாமல் வேதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

பள்ளி, கல்லூரியில் சக மாணவர்கள் எப்படி உங்களை எதிர்கொண்டார்கள்?

வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் என்னை கேலி செய்தனர். அச்சமயங்களில் அழுதிருக்கிறேன். பள்ளியில் அது பழகிவிட்டதால், கல்லூரியில் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. சான்றிதழ்களில் இருந்த பிரதீப் குமார் என்ற பெயரையும், என்னுடைய பெண் உடையையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி, பல இன்டர்வியூக்களில் வெளியேற்றிவிட்டார்கள்.  

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் என்னதான் நடந்தது?

சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் திருநங்கையருக்கென ஒரு தனி வகையறா ஒதுக்கப்படவில்லை. என்னை அதில் பெண்ணாக பங்குபெறவே அனுமதித்தனர். முதலில் சான்றிதழ்களில் இருந்த என் பழைய பெயரை காரணம் காட்டி, என்னை சப் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதமுடியாதபடி என் ஹால் டிக்கெட்-ஐ இறுதிவரை தராமல் அலைக்கழித்தனர் .

பின்னர் நீதிமன்றத்திடம் முறையிட்டு எழுத அனுமதி பெற்றேன். ஆகஸ்ட் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற அந்த தேர்வுக்கான அழைப்பு, எனக்கு 2 ஆம் தேதி இரவுதான் வந்தது. முன் பயிற்சிகளின்றி அத்தேர்வில் பங்கு பெற்றேன். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் நடைபெற்ற 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றேன். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து நான் தோல்வியுற்றதாக அறிவித்தார்கள்.

மற்ற தேர்வு முடிவுகளைகாட்டிலும் தாமதமாக அறிவிக்கப்பட்ட இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்ய கோர்ட்டில் கோரிய மனுவில், மனிதாபிமான அடிப்படையில் நான் இப்பொழுது தேர்ச்சி பெற்று இறுதிச்சுற்றில் பங்கேற்க உள்ளேன்.  

திருநங்கை என்பதைத் தாண்டி, பொதுவெளியில் புழங்கும் பணிக்கு தயாராகிவிட்டீர்கள். ஆனால் இன்னமும் பல திருநங்கைகள் பீச்சிலும், ரயிலிலும் பிச்சை எடுக்கிறார்களே...?


மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தற்போது திருநங்கைகளின் நிலைமை மோசமாக உள்ளது. மெத்த படித்தவர்களும் வாழும் இந்த சமுதாயத்தில், திருநங்கைகளை பற்றிய புரிதல் இன்னும் அமைந்தபாடில்லை. வீட்டிலும் திருநங்கையாக ஒருவர் இருந்தால், அவர்களுடன் பிறந்தவர்களுக்கும் இத்தகைய குறைபாடு இருக்கும் என்ற தவறான கண்ணோட்டம் நிலவுகிறது.

மேலும் அவர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை ஆதாரங்கள் அனைத்தும் விலை ஏற்றப்படுகின்றன. வாடகைக்கு வீடு கேட்க போனால், 'மற்றவர்கள் உனக்கு வீடு தரவில்லை. நான் தருகிறேன். அதனால் எனக்கு விலையை இரண்டு மடங்காக கொடு' என்ற நிலைமையே  இப்பொழுது நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் எங்களைப்போல் உள்ளவர்களுக்கு சமூகத்தில் வழக்கமான வேலைகள் கொடுக்கப்படுவதில்லை.

தங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுகிற போதுதான், திருநங்கைள் இத்தகைய வாழ்வியல் கஷ்டங்களை சமாளிக்க  பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் துணிந்து விடுகின்றனர். இதற்கு சமூகத்தின் புறக்கணிப்பு ஒரு முக்கிய காரணம்.

  காதல், கல்யாணம் எல்லாம் திருநங்கைகள் வாழ்வில் எப்படி?


சுருக்கமாக சொல்வதென்றால் திருநங்கைகளின் வாழ்க்கையை ஒரே பழமொழியில் அடக்கி விடலாம். 'ஆவதும் ஆணாலே அழிவதும் ஆணாலே!'. பெற்றோர்கள், நண்பர்கள் சுற்றத்தார் என அனைவராலும் ஒதுக்கிவிடப்பட்ட என்னைப்போன்ற  திருநங்கையை ஒரு ஆண் துணை, ஒரு பெண்ணாக அங்கீகரித்து, அவளை  மனைவியாக ஏற்று,  திருமண வாழ்க்கை வாழ்ந்தாலும், அது வெறும் மறைமுக வாழ்க்கையாக மட்டுமே உள்ளது” என்கிறார் சோகமான குரலில்.

மனிதனை மனிதன் புறந்தள்ளும் இந்த சமூகத்தில், இவ்வாறு பல இன்னல்களை பொறுமையுடன் கடந்து சாதிக்கும் முயற்சியில் நிற்கும் பிரித்திகா யாஷினி போன்றவர்களுக்கு தரலாம் பல சல்யூட் பூங்கொத்துகள்.

வாழ்த்துகள் தோழி !

- ஸ்ரீ.தனஞ்ஜெயன்
படங்கள்:  ம.நவீ்ன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close