Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் அணு அரசியல்: மினி தொடர் -பகுதி-8

‘‘சமாதானத்தை விளைவோர் கையில் ஆயுத பலம் இருந்தால் தான், உலகில் அமைதி நிலவும்’’

-எட்வர்ட் டெல்லர் (பேரழிவுப் பேராயுதம் நைட்ரஜன் குண்டு தயாரித்த விஞ்ஞானி)

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சுமார் 25 வருடங்களாக தொடர்ந்து போராடிய மக்கள் திடீரென கிளர்ந்து எழுவதற்கு பல காரணங்கள் இருந்தன. தொடக்கத்தில், அணு உலையின் கதிர் வீச்சு பற்றி எதுவுமே தெரியாத நிலையில் இருந்தார்கள். ஆனால், நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் வந்த இளைஞர்களிடம் கல்வி அறிவு வளர்ந்தது. இதனால் அணுக் கதிர் வீச்சு பற்றி சிந்திக்கவும், அது குறித்து கேள்வி கேட்கவும் செய்தனர். ரஷ்யாவிலும், ஜப்பானிலும் நிகழ்ந்த அணுக்கதிர் வீச்சின் அவலத்தை தொலைக்காட்சிகள் வாயிலாகவும் இணையம் மூலமாகவும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருந்தனர்.

2004-ல் ஏற்பட்ட சுனாமியும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன், 2011 ஆகஸ்ட் மாதத்தில் கூடங்குளம் அணு உலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் அணு உலையில் இருந்து இடிச்சத்தம் போன்ற பெரும் சத்தம் ஏற்பட்டதுடன், தரையில் அதிர்வு ஏற்பட்டதால் அணு உலைக்கு வெலு அருகில் இருக்கும் சுனாமி காலனியில் உள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பகல் மட்டும் அல்லாமல், இரவிலும் பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் பயந்தனர்.

அணு உலை செயல்படத் தொடங்கிய பின்னர் எப்போதும் இந்த அதிர்வும், பயங்கர சத்தமும் இருந்து கொண்டே இருக்குமோ என மக்கள் அஞ்சினர். அத்துடன், அணு உலையை குளிர்விக்க பயன்படுத்தப்படும் வெப்பநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படும் என அறிவிக்கப்பட்டதால் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் பறிபோகும் எனவும் மக்கள் அஞ்சினர். அணு உலை கட்டுமானப் பணிகள் தொடங்கி பல வருடங்கள் கடந்த பின்னரும், ஏற்கெனவே அறிவித்தபடி தங்களது கிராமம் எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ காணவில்லை என்பதை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் புரிந்து கொண்டதால் கூடுதல் அதிருப்தி அடைந்தனர்.

அணு உலையில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்காக அணுஉலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அணு விஜய் நகரியம் அமைக்கப்பட்டு அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. ஆனால், அணு உலைக்கு வெகு அருகாமையில் உள்ளவர்கள் சத்தத்திலும், அதிர்விலும் காலம் கழிக்கும் அவலம் ஏற்படும் என உணர்ந்து, ஏமாற்றப்பட்ட மனநிலைக்கு மக்கள் சென்றனர். மக்களின் அச்சத்தை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ‘அணு உலை இந்த மாதம் செயல்பட தொடங்கும்... இன்னும் 15 நாளில் இயங்கும்’ என்றெல்லாம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆளாளுக்கு அறிக்கை வெளியிடவும், செல்லும் இடத்தில் எல்லாம் பேட்டி அளிப்பதுமாக இருந்தனர்.

இவை அனைத்தும் மக்களின் கோபமாக கொப்பளித்து போராட்ட களத்தை தீவிரப்படுத்தியது. இடிந்தகரையில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தை தொடங்கிய நிலையில், இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து போராட்ட பந்தலுக்குள் குவிந்தனர். அணு உலைக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்ட 25 வருடங்களுக்கு முந்தைய மனநிலையில் இப்போது அவர்கள் இருக்கவில்லை. அணு சக்தி குறித்த முழுமையான புரிதல் அவர்களுக்கு இருந்தது. அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதனால் இடிந்தகரை கிராமம், போரட்ட களத்தின் தலைமையகமாக மாறியது.

போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் முழுமையாக பங்கேற்றதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பள்ளிகள் செயல்படவில்லை. படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் செல்லவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ரேஷன் கடைகள் கூட இயங்கவில்லை. இடிந்தகரை மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் தனித்தீவு போல மாறியது. போலீஸார் குவிக்கப்பட்டு இருந்த போதிலும், போராடும் மக்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிந்தகரைக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் கற்களை போட்டு மறித்து வைத்தார்கள். சில இடங்களில் சாலையில் குழிகள் வெட்டப்பட்டு இருந்தன.

இதனால் போலீஸாரால் இடிந்தகரைக்குள் செல்ல முடியாத நிலைமை உருவானது. போராட்டத்தின் வேகம் தீவிரம் அடைந்த நிலையில் அதனை அரசியல் கட்சியினர் தங்களது வாக்கு வங்கியாக மாற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள். இன்னொரு பக்கத்தில், போராட்டத்தின் வீரியத்தை குறைக்க அரசு எந்திரம் முழுமையாக களம் இறக்கப்பட்டது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான சுப.உதயகுமாரன், புஷ்பராயன், மைபா..ஜேசுராஜ் உள்ளிட்டவர்களுக்கு பக்க பலமாக அனைத்து சமுதாயங்களின் தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என பலரும் ஆதரவு தெர்வித்தனர்.

அதனால், போராட்டத்தை திசை திருப்புவதற்காக போராட்டக்காரர்கள் குறித்து தவறான வதந்திகளை பரப்பும் முயற்சிகள் நடந்ததன். முதலில் இந்த போராட்டத்தை சாதிரீதியாக திசை திருப்பும் முயற்சி நடந்தது. ‘மீனவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிற சமூகத்தினர் பங்கேற்கலாமா?’ என அவதூறு பரப்ப மத்திய உளவுத்துறையும், அணுசக்தி துறையும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும் ஈடுபட்டன. ஆனால், இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட சுப.உதயகுமாரன் மீனவர் அல்ல என்பதால் இந்த அவதூறு எடுபடவில்லை.

பின்னர், வெளிநாட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால், போராட்டத்திற்காக மீனவ கிராமங்களில் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. படகுகளில் சென்று மீன் பிடித்து வருபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் 10 சதவிகிதம் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி வசூல் செய்யபப்ட்டது. இந்த தொகைகளுக்கான முறையான கணக்கும் பராமரிக்கப்பட்டது. அதனை போராட்டக் குழுவினர், செய்தியாளர்கள் முன்பாக தூக்கிப் போட்டு, ‘இந்த கணக்கை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம்’ என சவால்விட்டனர்.

அத்துடன், ‘எங்களுக்கு எந்த வெளிநாட்டில் இருந்து பணம் வரவில்லை. அப்படி நிரூபித்தால் எந்த தண்டனையையும் ஏற்கத் தயார். மத்திய அரசுக்கு தெரியாமல் எந்த வெளிநாட்டிலும் இருந்தும் பணத்தை பெற முடியாது. அதனால் அரசை நடத்திவரும் காங்கிரசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கட்டும். இது போன்று அவதூறு பரப்பினால் சட்டரீதியாக அவர்களை எதிர்கொள்வோம்’ என உதயகுமாரன் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் கூட, பிரதமராக இருந்தவரான மன்ம்மோகன்சிங் உள்ளிட்ட உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள் கூட திரும்பத் திரும்ப இப்படி அவதூறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினார்கள். அதிலும் அரசு நிர்வாகத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், போராட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த சுப.உதயகுமாரன், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் போன்றோர் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிற விவரத்தை போராட்டக் குழுவினர் தெரியப்படுத்தி, அரசின் அவதூறு பிரசாரத்தை முறியடித்தனர். பின்னர், போராட்டக் குழுவினருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கிறது எனத் தெரிவித்து போராட்டத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை எவரும் நம்பத் தயாராக இருக்கவில்லை.

இந்த நிலையில், அணு உலைக்கு எதிராக போராடிய மக்களை திசை திருப்ப முடியாமல் அரசு நிர்வாகத்தினரும், அணு உலை நிர்வாகத்தினரும் திணறினர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சோர்வடைந்து தினமும் சிலர் மயக்கமடையத் தொடங்கினர். ஆனால், அணு உலையில் பணிகள் தொய்வின்றி நடந்தது. இது போராட்டக்காரர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தக் கூட யாருமே முன்வராத நிலையில், அணு உலை நிர்வாகம் பணிகளை தொடர்வது அவர்களின் கோபத்தை கிளறியது.

இதனால், உணாவிரதம் ஒரு பக்கம் நடந்தாலும் அணு உலைக்கு முன்பாக முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இடிந்தகரையில் உண்ணாவிரதம் நடக்கும் நிலையில் அணு உலையை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனை கட்டுப்படுத்த பத்தாயிரம் போலீஸார் குவிக்கபப்ட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தபோதிலும் அவர்களின் போராட்டத்தில் துளியும் வன்முறை இருக்கவில்லை. அணு உலைக்குள் செல்ல முயன்ற பணியாளர்களின் வாகனத்தை உள்ளே விட மறுத்ததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் உள்ளிட்ட ஒருவரும் செல்ல முடியாத நிலமை ஏற்பட்டது.

மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சிய அணு உலை நிர்வாகம் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனாலும், அதனை கண்காணிக்கும் பணிகளை அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் ஈடுபட்டனர். இதற்காக அணு உலையின் பிரதான வாயிலின் எதிரில் போரட்டக் குழுவினரின் சார்பில் பந்தல் போட்டு, அங்கேயே சிலர் தங்கி இருந்து, அணு உலை நிர்வாகத்தின் செயல்களை கண்காணித்தனர். மக்களின் கோபத்தையும், எதிர்ப்பையும் அடக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறின.

இந்த நிலையில், மக்களின் ஆதரவை இழக்க மத்திய, மாநில அரசுகள் விரும்பவில்லை. அதனால் இதில் அரசியல் செய்யலாம் என இரு அரசுகளும் முடிவு செய்தன. அதனால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு சில முடிவுகளை எடுத்தது. காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்த நாராயணசாமியை உண்ணாவிரத போராட்டம் நடந்த இடிந்தகரைக்கே பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பி வைத்தார். அரசியல் அஸ்திரங்களுக்கு இடிந்தகரையில் பலன் கிடைத்ததா? என்பது பற்றிய விவரங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்...

-ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Displaying kudankulam_4.jpg

Displaying kudankulam_1.jpg

எடிட்டர் சாய்ஸ்

MUST READ