Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1)

மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில் வந்து தெறிக்கும். அதனால் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும் அந்த ஹோட்டல் வாசல் சாலை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பிசினஸ் புள்ளிகள், பாலிவுட் ஸ்டார்கள், முக்கியமான அரசியல் வாரிசுகள், உயர் அதிகாரிகள் என அனைவருமே அதிகார வர்க்கம்தாம். அந்த பிரமாண்ட ஹோட்டலில் யார் யாருடன் வருகிறார், யார் யாருடன் போகிறார் என்கிற விபரங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை.

பாலிவுட்டில் மிக பிரபலமாக இருந்த கனவுக்கன்னி நடிகை ஒருவர் மாலை நேரம் ஒன்றில் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஐந்தாவது தளத்தில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அவர் எட்டாவது தளத்தில் இருந்த அறைக்கு முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாக சென்றார். ஏற்கனவே அந்த அறையில் இந்திய வருவாய் துறை அதிகாரி ஒருவர் காத்திருந்தார். இந்தியாவின் பொருளாதரத்தை நிர்ணயம் செய்யும் பங்குச்சந்தை உலகின் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் அவர். நடிகையும் அதிகாரியும் பரஸ்பர அறிமுகமாகி அடுத்த இரண்டு நொடிகள் கூட தாமதிக்காத அந்த அதிகாரி, சினிமாவில் தான் பார்த்து ரசித்த அந்த அழகியை, நேரில் பார்த்த அதிர்ச்சியில் அவரை இழுத்துப்பிடித்து அணைத்து, ஆசை தீர முத்தம் கொடுத்திருக்கிறார்.

அதோடு விடாமல், அவர் அழகை மிகவும் வர்ணனை செய்திருக்கிறார். அடுத்த பத்து நிமிடங்களில் அவர் ஆசைப்பட்ட அனைத்தும் நடந்து முடிந்து, களைப்பின் வியர்வை துளிகளின் ஈரம் காயும்முன்பே அந்த அறையின் கதவை உடைத்து வருகிறார் அன்னியர் ஒருவர். வந்தவர் கையில் அமெரிக்க மேட் பிஸ்டல் ஒன்று பளபளத்தது. அதற்கு பிறகு அந்த அதிகாரி வளைக்கப்படுகிறார்.

இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், பிசினஸ் மீட்டிங்குக்காக  பாங்காங் நாட்டில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தார், இந்தியாவில் இயங்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒருவர். அன்றைய மீட்டிங் முடிந்து பாத்ரூம் போன அந்த முதலாளியை, அங்கு வைத்து துப்பாக்கி முனையில் கடத்தினார்கள் இருவர். பிறகு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, இந்தியாவில் அவருக்கு இருக்கும் முக்கியமான சொத்துக்களின் பெரும்பாலான பங்குகள் எழுதி வாங்கப்பட்டன. இந்த இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்தது ‘டி’ கம்பெனியின் ஆட்கள்.

டி கம்பெனி என்பது தாவூத் இப்ராஹிம் என்ற நிழல் உலக தாதாவின் நிறுவனம். நிறுவனம் என்றதும் நம்மூரில் இயங்கும் சாப்ட்வேர் கம்பனியோ இல்லை, தயாரிப்பு நிறுவனமோ இல்லை. மாறாக இந்த நிறுவனத்தின் வேலைகள் அனைத்தும் அப்படியே அக்மார்க் உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட பிசினஸ்கள். ஆட்கள் கடத்துவது, ஆயுதம் விற்பது, கடத்துவது, போதைப்பொருள்கள் கடத்தி உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது என பெரிய சாம்ராஜ்யம் டி கம்பெனி. பல சமயம் டி கம்பெனிக்கு போர் அடித்தால் உலகமே உற்றுக்கவனித்துக் கொண்டு இருக்கும் ஒரு விஷயத்தின் முடிவை இவர்கள் தீர்மானிப்பார்கள். அதாவது அந்த விஷயத்தின் முடிவை பெட்டிங் கட்டி இயக்குவது. இதுதான் டி கம்பெனியில் முக்கியமாக பொழுது போக்கு அண்ட் பிசினஸ்.

ஒரு மாதத்தில் பாங்காங்கில் வளைக்கப்பட்ட தொழில் அதிபரின் நிறுவனத்தின் ஷேர்கள் சந்தையில் சக்கை போடு போட்டன. அதற்கு காரணம், நடிகை மூலம் வளைக்கப்பட்ட அந்த அதிகாரியின் கைவண்ணம்தான். ‘டி’ நிறுவனத்திற்கு இது ஒரு சின்ன வேலை. இந்த வேலையை துபாய் ஷேக் ஒருவருக்காக சும்மா டைம்பாஸ்க்கு செய்து கொடுத்தார் டி நிறுவனத்தின் தலைவர் தாவூத்.

தாவூத்தின் டி கம்பெனியின் தலைமை அலுவலகம் துபாய் நாட்டில் இயங்குகிறது. அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளில் தேடப்படும் குற்றவாளி. உலக குற்றவாளிகளின் டாப் 10 பட்டியலில் முதல் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தாவூத். இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பு, ஆயுதம் கடத்தியது, ஆள் கடத்தியது என எக்கசக்க குற்றப்பின்னணி இருந்தாலும் இன்றளவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மோஸ்ட் வாண்டட் பெர்சன் தாவூத். 

யார் இந்த தாவூத் இப்ராஹிம்?

மும்பையில் சாதாரண போலீஸ் தலைமைக்காவலர் இப்ராஹிம் கஸ்காரின் மகன் தாவூத் இப்ராஹிம். 1955ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் மும்பையில் பிறந்தார் என்றாலும், இவரின் பூர்வீகம் உத்தரபிரதேசம் என்ற சலசலப்பும் உண்டு. சாதாரண பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத தாவூத்தின் பால்ய வாழ்க்கையில், அவரின் தந்தை மும்பையில் நடக்கும் பல்வேறு குற்றங்களை வீட்டில் வந்து சொல்லுவதுண்டு. அதில் அதிகமாக தங்க கடத்தல்கள், ஹேங் சண்டைகள் என மும்பையில் நடக்கும் பல்வேறு விஷயங்களையும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் உயர் அதிகாரிகள் திணறுவதையும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதே இப்ராஹிம் கஸ்கர், அவரின் உயர் அதிகாரிகள் மீது அளவுக்கு கடந்த பயம் கலந்த மரியாதையை வைத்து இருந்தார். பெரும்பாலும் இரவு நேரங்களில் இப்ராஹிம் கஸ்கருக்கு அவசர வேலைகள் வரும். அப்பொழுது அவர் உயர் அதிகாரிகளுக்கு பயந்து விழுந்தடித்து ஓடுவது தாவூத்துக்கு பிடிக்காது. அதோடு வேலை முடிந்து வந்ததும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு குற்றவாளிகள் எஸ்கேப் ஆன திரில் கதைகளை அப்படியே சொல்லுவார்.

அடிக்கடி போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரும், குற்றவாளிகளும் பெயரும் சரிசமமாக அடிபடும். அதனால் போலீஸ்-குற்றவாளி என இருவரும் ஸ்டார் என நம்ப ஆரம்பித்தார் தாவூத். எதிர்காலத்தில் அப்பா போல சாதாரண போலீஸ்காரராக இல்லாமல் உயர் அதிகாரி ஆகணும், அது நடக்கவில்லையென்றால் கடத்தல் தொழிலில் கொடி கட்டி பறக்கவேண்டும் வேண்டும் என்று தனது சகாக்களிடம் தாவூத் சொல்லுவதுண்டு.

தனது 14 வயதில் தாவூத் பள்ளியில் படிக்கும் பொழுதே செய்தித்தாளில் வரும் கடத்தல், ஹேங் வார்களை பற்றி படித்து அவற்றை கட் பண்ணி நோட்டில் ஒட்டி வைப்பது வழக்கம். அப்படியே காலத்தை கடத்திய தாவூத், உள்ளுரில் இருக்கும் முக்கியமான தாதாக்களை சந்திக்கப் போவதுண்டு. அவர்களும் க்ரைம் பிராஞ்ச் போலீஸ்காரரின் மகன் என்பதால் தாவூத் மூலம் ஏதாவது விஷயம் வரும் என்று தாவூத்திடம் பழகியதுண்டு. அப்படியே பழக்கத்தை உண்டாக்கிய தாவூத், மும்பையின் பிரபல வெள்ளிக்கட்டிகள், தங்கக்கட்டிகள் கடத்தும் முக்கிய புள்ளியான ஹாஜி மஸ்தான் என்பவரோடு பழக ஆசைப்பட்டான்.

ஹாஜி மஸ்தானுக்கு தமிழகம்தான் பூர்வீகம் என்பதால், அங்கு அவரை மதராசி ஹாஜி என்று அழைப்பதுண்டு. தவிர அங்கு நிலவும் ஊர் பிரச்னை நீறு பூத்த நெருப்பாக இருந்தது. கடத்தல் தொழிலில் மகாராஷ்டிராவினர் செய்ய முடியாத பல்வேறு வேலைகளை ஹாஜி மஸ்தான் கனகச்சிதமாக செய்து முடிப்பது வழக்கம். அதனால் மும்பை போலீஸ் வட்டாரம் நன்கு அறிந்து, அவரை கண்காணித்து வந்தது. ஹாஜி மஸ்தான் தனது வீட்டை விட்டு வெளியே போகாமல், அவரது சகாக்களை வைத்து அரபிக்கடலில் தங்கம் மற்றும் கருப்பு பணம் எனப்படும் ஹவாலா பணங்களை கடல் மூலம் பல்வேறு இடங்களுக்கு அரசாங்கத்திடம் சிக்காமல் கடத்துவதில் கில்லாடி. அந்தப் பணிகளை பெரும்பாலும் மார்வாடி சமூகத்தினர்களுக்கு செய்து கொடுப்பதால் மும்பையில் மிகப்பெரிய கடத்தல் மன்னனாக இருந்தார் ஹாஜி மஸ்தான்.

அப்படி, கடத்தலில் வரும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற மார்வாடி சமூகத்தினர், அந்த பணங்களை பாலிவுட் சினிமாவில் போட்டு சினிமா எடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். அப்படித்தான் சினிமா பிரபலங்கள் ஹாஜி மஸ்தானுக்கு அறிமுகம் ஆனதுண்டு. அதனால் சினிமாவில் பெரும்பாலும் ஹவாலா பணங்களை மொத்தமாக மாற்ற ஹாஜி மஸ்தான் அதிகம் தேவைப்பட்டார். அதனால்தானோ என்னவோ ஹாஜி மஸ்தான் பற்றி, அவரை ஹீரோவாக சித்தரித்து காட்டி ஹாஜி மஸ்தான் செய்யும் வேலைகளை கதைக்களமாக்கி, பிரபல நடிகரை வைத்து ஒரு முன்னணி இயக்குனர் சினிமா ஒன்று எடுத்தார். அந்தப்படம் பயங்கர வெற்றி பெற்றது மும்பையில்.

அதுவரை அரசல் புரசலாக தெரிந்த ஹாஜி மஸ்தான், அதன் பிறகு வெகுஜன மக்களுக்கு நன்கு தெரியவந்தார். அதன் விளைவாக   பாதுகாப்பு கருதி ஹாஜி மஸ்தான் தனது புகைப்படங்களை வெளியே வராமல் பார்த்துக்கொண்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தாவூத்திற்கு பிடித்துப்போனது. ஹாஜி மஸ்தானிடம் பழக ஆரம்பித்தான். அதோடு அவர்கள் கடத்தும் பணத்தை அவர்களிடமிருந்து கடத்த திட்டம் தீட்டினான் தாவூத்.

18 வயதான தாவூத்தின் முதல் சம்பவம்

கடத்தலில் கொண்டு வரும் தங்க கட்டிகளை மும்பையில் பிரபலமான மூன்று மார்கெட்டில் வைத்துதான் பிரித்து பல்வேறு நபர்களுக்கு அனுப்புவார்கள். கிராப்ஃபோர்டு, மோகத்தா, மணிஷ் போன்ற முக்கியமான மூன்று மார்க்கெட்தான் அது. இங்கு இருந்துதான் காய்கறிகள், அரிசி பருப்பு உள்பட பல்வேறு பலசரக்கு தானியங்களை மும்பையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு லாரி உள்பட சரக்கு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.  இந்த சந்தைகளில் எப்பொழுதும் கூட்டம் நெரிசலாக இருக்கும் என்பதால் கடத்தல்காரர்களுக்கு தொழில் செய்ய நல்ல இடமாக இருந்தது.

இதுபோன்ற ஒரு கருப்பு பணத்தை கொண்டு செல்லும் ஒரு குரூப்பில் இருந்து வந்த தகவலை வைத்து கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினான் சிறுவனான தாவூத். அதற்காக அவன், யூசுப்கான், அபுபக்கர், இஜாஸ்ஜிங்கி, அசிஸ் டிரைவர், அப்துல் முத்தலிப், சையது சுல்தான், சிர்கான், உள்பட ஏழு நபர்களை கூட்டாளிகளாக வைத்துகொண்டு திட்டம் தீட்டினான்.

திட்டத்திற்கு தேவையான ஒரு கார், கத்திகள், துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்களை வைத்துக்கொண்டு திட்டத்தை செயல்படுத்தும் இடமான தெற்கு மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பாலத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஒத்திகை பார்த்தனர். கொள்ளைக்கு தேதி குறித்து காத்திருந்து கொள்ளையடிக்கும் நாளும் வந்தது.

காரை அசிஸ் ஓட்டுவதும், ஆயுதங்களை தாவூத் மற்றும் சையது சுல்தான் பயன்படுத்துவது என்று திட்டம். இதில் சையது சுல்தான் கட்டுமஸ்தான உடம்புக்காரன். மிஸ்டர் மும்பைக்கு தயாராக இருந்தான். பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து ஆணழகன் பட்டம் வாங்கி இருக்கிறான். அவனது ஆசை, கனவு எல்லாம் மிஸ்டர் மும்பை, மிஸ்டர் மகாரஷ்டிரா, அப்படியே மிஸ்டர் இந்தியா என்று அவனது கனவுகளின் தூரம் மிக அதிகம். அதற்கு பணம் தேவை என்பதால் இந்த வேலையை செய்ய அவன் முன் வந்தான்.

சோர்ஸ் சொன்னபடி ட்ரக் ஒன்று பணத்தை ஏற்றிக்கொண்டு கிராப்போர்டு மார்கெட் பகுதியை கடந்து மெல்லோ சாலை வழியாக வருவதாக தகவல். கர்னக் பந்தர் பாலம் அருகில் வைத்து கொள்ளை அடிக்க திட்டம். வண்டி முகமது அலி சாலையை கடந்ததும், அந்த வண்டியின் பின்புறம் தாவூத்தின் ஆட்கள் பின் தொடர வேண்டும் என்பது தாவூத்தின் கட்டளை. வண்டியில் டிரைவர் உள்பட இரண்டு மார்வாடிகள் வரை வருவதாகவும் தகவல் வந்தது. அவர்களும் தங்களுக்கு பாதுகாப்புக்கு என்று இரும்பு பைப்பில் கைப்பிடி போட்டு ராடு உள்பட துப்பாக்கி வரை வைத்து இருப்தாக கூடுதல் தகவல் வேறு தந்து இருந்தனர்.

மதியம் இரண்டு மணியளவில் சீறிப்பாய்ந்த அந்த வண்டியை முட்டி மோதி சிறிய விபத்து போல உண்டாக்கி, உள்ளே இருந்தவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுத முனையில் மடக்கினர் தாவூத்தும் சையதும். மற்றவர்கள் அந்த வண்டியில் இருந்தவர்களை பேச விடாமல் மடக்கினர். அவர்களிடம் தாவூத் 'இனி ஒரு வார்த்தை பேசினால், அடுத்து வார்த்தைகள் பேசமுடியாது. பெட்டி எங்கே' என்று மிரட்டினான். டிரைவர் பயந்து போய்  சீட்டின் பின்புறம் இருந்த இறுக்கி கட்டி சீல் வைக்கப்பட்ட கருப்பு பெட்டியை காட்டினான். கைப்பற்றினார்கள் தாவூத் அண்ட் கோ.

பெட்டியை உடைத்து பணக்கட்டுகளை பையில் போட்டுகொண்டவர்கள், அவர்களை தாக்கி  விட்டு அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டனர். வேறு வழி தெரியாமல் பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசுக்கு போனார்கள். பைதோனி காவல் நிலையத்தில் குற்ற எண் 725/1974 என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தாவூத் மற்றும் அவனின் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூன்று வாரங்கள் கழித்து தாவூத் தனது 19வது பிறந்தநாளை கொண்டாடும் பொழுது அன்றைய அனைத்து செய்திதாள்களிலும் மும்பை மெட்ரோபாலிட்டன் கார்ப்பரேசன் வங்கி வண்டியை மடக்கி ரூபாய் 4,75,000 கொள்ளை என்று செய்தி வந்தது. அதோடு இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உள்பட்ட நபர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வந்ததோடு, அந்த கொள்ளையின் மாஸ்டர் பிளான் தாவூத் என்ற செய்தி வந்தது. ஒரே சம்பவத்தில் மும்பை முழுவதும் ஃபேமஸ் ஆனான் தாவூத் இப்ராஹிம்.

அதன்பிறகு தான் தெரிந்தது தாவூத் கொள்ளையடித்தது ஹவாலா பணம் இல்லை. அரசு கோஆப்ரடிவ் வங்கியின் பணம் என்று.

அதன் பிறகு மும்பை போலீஸ் கவனம் தாவூத் பக்கம் திரும்பியது. அதுவரை நேர்மையான போலீஸ்காரராக இருந்த தாவூத்தின் தந்தை  இப்ராஹிம் கஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதோடு அவர் அவமானம் தாங்காமல் தானே முன்வந்து தனது வேலையை ராஜினாமா செய்தார்.

அடுத்து நடந்தது என்ன?

தோட்டாக்கள் பாயும்...

சண்.சரவணக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close