Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் அணு அரசியல்: மினி தொடர் - பகுதி - 9

Displaying kudankulam_9.jpg
 

‘அறிவியல் அறிஞர்கள் அணுவை பிளந்தார்கள். இப்போது அணுவானது நம்மை பிளந்து கொண்டு இருக்கிறது’

- குயின்டின் ரெனால்ட்ஸ் (இரண்டாம் உலகப் போரை பதிவு செய்த பத்திரிகையாளர்)

ணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியதால் அரசு அஞ்சியது. போராட்டத்தை போலீஸ் துணையுடன் ஒரு மணி நேரத்தில் முடக்கிவிட முடியும் என்ற போதிலும், அதன் பக்கவிளைவு பயங்கரமானதாக மாறிவிடும் ஆபத்து இருந்தது. கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றிலும் மட்டுமே போராட்டம் உக்கிரமாக இருந்தது என்றாலும் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த மீனவ கிராமங்களில் இருந்து, போராடும் மக்களுக்கு தேவையான பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

அத்துடன் தமிழகம் முழுவதுமே அணு உலைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க தொடங்கியதால், இடிந்தகரையில் போராடும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் இறங்க முடியாமல் அரசு நிர்வாகம் முடங்கிக் கிடந்தது. உண்ணாவிரதம் ஒரு பக்கம் நடந்தாலும், அணு உலை முற்றுகை, சாலை மறியல், கடையடைப்பு, மீன்பிடிக்க செல்வதில்லை என அடுத்தடுத்த போராட்டங்களும் தீவிரம் அடைந்தது. இதனால் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின.

ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.திக., விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தி.மு.க.வும் தங்களின் ஆதரவை தெரிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சிலரும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார்கள். இன்னும் சிலர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். அணு சக்தி கொள்கையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த பாரதிய ஜனதா கூட ஆரம்ப கட்டத்தில் போராட்டத்தை ஆதரித்தது.

தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பா.ஜனதாவின் மூத்த தலைவரான அத்வானி, ‘மக்களின் அச்சத்தை போக்காமல் அணு உலை திட்டத்தை தொடரக் கூடாது’ என அதிரடியாக பேசினார். இப்படி ஆளாளுக்கு ஆதரவு தெரிவித்து, தங்களுக்கு சாதகமாக இந்த மக்களின் வாக்கு வங்கியை திசை திருப்ப முயற்சி செய்தார்கள். அரசியல்வாதிகளுக்கு, போராடும் மக்கள் வாக்கு வங்கியாக மட்டுமே தெரிந்தார்கள். ஆனால், இவர்களை சாதாரணமாக திசை திருப்ப முடியாது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை பாவம்!

ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வும் போராடும் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்தது. அதனால் இந்த பிரச்னையில் இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என நினைத்து, உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியது. அதில், ‘கூடங்குளம் அணு உலை தொடர்பாக சுற்று வட்டார மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்களின் அச்சத்தை போக்காமல் அணு உலையை தொடங்கக் கூடாது. மக்களின் சந்தேகங்களுக்கு அணு உலை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றியது.

அத்துடன் நிற்காமல் முதல்வர் ஜெயலலிதா, இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். மக்களின் பக்கமாக தமிழக அரசு இருப்பதாக அ.தி.மு.க.வினர் பெருமிதத்தோடு பொதுக்கூட்டங்களில் முழங்கினார்கள். ஆனால், போராட்டக் குழுவினரின் கோரிக்கை மிகத் தெளிவானதாக இருந்தது. அவர்கள் வலியுறுத்தியது ஒன்றே ஒன்றுதான். அது... ‘அணு உலையை மூட வேண்டும்’ என்பதாக மட்டுமே இருந்தது. இதற்கு மத்திய அரசு எப்படி செவிசாய்க்கும்? அதனால், போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது.

மத்திய உளவுத்துறையினர் தீவிரமாக களம் இறங்கி, போரட்டக் குழுவுக்குள் ஏதாவது பிரச்னை இருக்கிறதா? என்பது பற்றியும் யாருக்காவது சிறிய அதிருப்தி உள்ளதா? என்றும் அலசி ஆராய்ந்தார்கள். ஆனால், உள்ளூரில் அவர்களுக்கு உதவ ஒருவர் கூட கிடைக்கவில்லை. மத்திய உளவுத்துறை சார்பில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முடக்க தனியாக அதிகாரியையே நியமித்தார்கள். அவராலும் இடிந்தகரை போராட்டத்தை முடக்கவோ, தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

எந்த ரூட்டில் சென்றாலும் முட்டுக் கட்டையே அரசு நிர்வாகத்துக்கு வந்தது. போராட்டத்தை ஒடுக்குவதை விடுங்கள், போராட்டக்காரர்களிடம் பேசவோ, அவர்களின் மனஓட்டத்தை அறியவோ கூட முடியாத நிலைமை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை. என்ன செய்தால் போராட்டம் நிற்கும் என்பதை எவராலும் முழுமையாக சொல்ல முடியவில்லை. அதனால் உள்ளூர் உளவுத்துறையினர் முதல் மத்திய உளவுப்படையினர் வரையிலும், மேலதிகாரிகளுக்கு எதையும் தெரிவிக்க முடியாமல் பதறினார்கள்.

இந்தச் சூழலில், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்த நாராயணசாமியை பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பி வைத்தார். பரபரப்பு பேட்டிகளால் அரசியல் சூட்டை உருவாக்குபவரான நாராயணசாமி, இந்த போராட்டத்தை முடித்து வைத்து விடுவார் என மன்மோகன் சிங் நம்பினார். அவரும் நெல்லைக்கு வந்து சேர்ந்தார். மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களாலும் மக்களின் மனநிலை பற்றி முழுமையாக சொல்ல முடியவில்லை. ‘மக்களுக்கு அணு உலை குறித்து அச்சம் ஏற்பட்டு விட்டது. இதனை போக்காவிட்டால் அணு உலையை திறப்பதே முடியாத காரியமாகிவிடும்’ என்பதை மட்டுமே அதிகாரிகளால் திரும்பத் திரும்ப சொல்ல முடிந்தது. அவர்களுக்கே பிரச்னையின் தீவிரம் புரியாதபோது, பிறருக்கு என்ன விளக்கம் சொல்லிவிட முடியும்?

இந்த பதில்களால் அதிருப்தி அடைந்த நாராயணசாமி, ‘நான் உடனே போராடும் மக்களை சந்திக்க வேண்டும். அதுவும் அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்க்கே நேரில் சென்று சந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அவரது இந்த முடிவைக் கேட்டதும், நெருப்பால் உடலில் சூடுபட்டது போல அதிகாரிகள் பதறினார்கள். ‘போராடும் மக்கள் மிகவும் கோபத்துடன் இருக்கிறார்கள். போலீசாரைக்கூட உள்ளே அனுமதிக்கவில்லை. காக்கி உடையில் ஆம்புலன்ஸ் டிரைவர் சென்றால்கூட உள்ளேவிட அனுமதிக்க மறுக்கிறார்கள். அதனால் நாங்கள் யாருமே இதுவரை அங்கு நேரில் செல்லவில்லை. இப்போது இருக்கும் சூழலில் நீங்களும் அங்கே செல்ல வேண்டாம்’ என்று ஆலோசனை சொன்னார்கள்.

உண்மையில் நெல்லை மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையினரோ, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து, 127 பேர் உண்ணாவிரதம் இருந்ததை கவனத்தில் கொள்ளவே இல்லை. அவர்களை சந்திக்க ஒரு தாசில்தாரைக் கூட அனுப்பவில்லை. ஆனால், அவர்களாகவே ‘போராட்டக்காரர்கள் அதிகாரிகள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை‘ என்கிற தகவலை பரப்பி விடுவதில் அக்கறை காட்டினார்கள். போராட்டத்தை நிறுத்த சிறு துரும்பைக்கூட மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நகர்த்தவில்லை என்பதே நிஜம்.

இந்த நிலையில், நாராயணசாமி போராட்டக்களத்துக்கு செல்ல விரும்பினார். காரணம், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் அசைன்மென்டை அவருக்கு மத்திய அரசு கொடுத்து இருந்தது. அதனை விரும்பி ஏற்றுக் கொண்ட அவரும், இடிந்தகரைக்கு செல்ல முடிவு செய்தார். நெல்லை மாவட்ட ஆட்சியரும், கவல்துறை கண்காணிப்பாளரும் அவரிடம், ‘நாம் இடிந்தகரை கிராமத்துக்குள் செல்ல வேண்டாம். அது நல்லதல்ல. போராட்டக்குழுவை சேர்ந்த ஒரு சிலரை மட்டும் ராதாபுரம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்று அட்வைஸ் செய்தார்கள். அதனை போராட்டக் குழுவினரின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்கள். போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரனிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் கிராம குழுக்களின் தலைவர்களையும், தனது சக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களையும் அழைத்து, அதிகாரிகள் தெரிவித்த தகவலை சொன்னார். கூட்டத்தில் இருந்தவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டத்தை வழி நடத்துபவர்களை தனியே அழைத்து மிரட்டவோ அல்லது அவர்களை கைது செய்யவோ அதிகாரிகள் நடத்தும் நாடகமாக இருக்குமோ என பொதுமக்களும் சந்தேகித்தனர்.

அதனால், ‘யாரும் அங்கே செல்லக் கூடாது. இடிந்தகரையில் இத்தனை நாட்களாக நாம் உண்னாவிரதம் இருந்தும் ஒருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. நம்மில் பலர் மயங்கிச் சரிந்த செய்திகள் ஊடகக்களில் வந்தபோதும் அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ இரக்கம் காட்டவில்லை. நமது நோக்கம் ஒன்றுதான். அணு உலை அகற்றப்பட வேண்டும். அணு உலையால் நித்தமும் சாவைதைவிடவும், இப்படி உண்ணாவிரதம் இருந்து செத்துப்போவோம். நம்மை தனி நாடுபோல பிரித்து வைத்து இருக்கும் இந்த அரசாங்கம், அதன் பிறகாவது நல்ல முடிவை எடுக்கட்டும்’ என பெண்களும் குழந்தைகளும் சொன்னதைக் கேட்ட பின்னர் போராட்டக் குழுவினர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி ராதாபுரத்துக்கு தங்களால் வர முடியாது என்கிற தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் இனி பிரச்னை இல்லை என்று அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் நாரயணசாமி, ‘அவர்கள் வராவிட்டால் என்ன? நாம் இடிந்தகரைக்கு சென்று அவர்களை சந்திப்போம்’ என்றதும் அதிகாரிகள் வெலவெலத்துப் போனார்கள். ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லியும் நாராயணசாமி பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் அவரை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

போராட்டக் களத்தில் உண்ணாவிரதம் இருந்து பல நாட்கள் ஆனதால் மக்கள் கந்தல் துணிபோல சுருண்டு கிடந்தாலும், மன உறுதி மட்டும் குறையாமல் இருந்தது. அந்த சமயத்திலும், ‘எங்களை இதுவரை கண்டுகொள்ள மறுத்த அதிகாரிகள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது. காவல்துறையினர் போராடும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது தினமும் ஒரு வழக்கு பதிவு செய்கிறார்கள். மக்களுக்கு எதிராக செயல்படும் அவர்கள் உள்ளே வர வேண்டாம். நாராயணசாமி மட்டும் வந்துவிட்டு செல்லட்டும்’ என்றார்கள். அதற்கும் நாராயணசாமி ஒப்புக் கொண்டார். அதன்படி, அவருடன் சென்ற மாவட்ட ஆட்சியர் ராதாபுரத்திலேயே ஒதுங்கி நின்று கொண்டார். மாவட்ட எஸ்.பி.யும், அவரது சிறப்பு அதிரடிப்படைகளும் இடிந்தகரை கிராமத்தின் எல்லையிலயே நின்று கொன்டன.

நாராயணசாமி, நெல்லை காங்கிரஸ் எம்.பி.யான ராமசுப்பு மற்றும் சில காங்கிரசார் மட்டுமே போராட்டக் களத்துக்கு சென்றனர். போராட்டப் பந்தலில் உண்ணாவிரதம் இருந்தபடியே படுத்துக்கிடந்த மக்களை கண்டதும் நாராயணசாமி கலங்கிப் போய்விட்டார். இவ்வளவு நெஞ்சுரத்துடன் இருக்கும் மக்களா? என்கிற ஆச்சர்யம் அவருக்கு ஏற்பட்டது. உண்ணாவிரத பந்தலை வலம் வந்தவர், போராட்டக் குழுவினரிடம் பேச முற்பட்டார். ஆனால், யாரும் எதுவும் பேச முன்வரவில்லை.

உடனே, அங்கிருந்த மைக்கில் பேச முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மக்கள் அனுமதிக்கவில்லை. அமைதி எங்கும் நிறைந்து இருந்தது. வந்தார்... சென்றார் என்கிற நிலையிலேயே அவரது பயணம் அமைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் அவரிடம், ‘இங்கு வந்து நிலைமையை நேரில் பார்த்தது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டதும், ‘மக்களின் நிலையை நேரில் பார்த்தேன். அதனை பிரதமரிடம் எடுத்து சொல்வேன். மத்திய அரசை பொறுத்தவரை மக்கள் நலன்தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று தெரிவித்து விட்டு சென்றார்.

பின்னர் 10 கி.மீ தொலைவில் இருக்கும் ராதாபுரம் சென்று மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு நடந்த இந்த ஆலோசனையில், தமிழக அரசின் நிலைப்பாட்டை அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினார்கள். அனைத்தையும் கேட்ட பின்னர் வெளியே வந்த அவரை மீண்டும் செய்தியாளர்கள் சந்தித்தபோது, ‘எங்களுக்கு நாட்டு நலன்தான் முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு அணுசக்தி அவசியமாக இருக்கிறது. அதனால் அணு உலைப்பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர் தனது கருத்தை மாற்றும் அளவுக்கு அணு உலை அரசியல் சக்தி வாய்ந்ததாக மாறிப் போயிருந்தது. நாராயணசாமி வந்து சென்ற பிறகு, தமிழக அரசும் தனது பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. அதனால் முதல்வருடன் சந்திப்புக்கு ஏற்பாடானது. அதில் நடந்தது என்ன..? அடுத்த வாரம் பார்க்கலாம்!

- ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Displaying kudankulam_4.jpg

Displaying kudankulam_1.jpg

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ