Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

முகநூல் முழுவதும் லெக்கின்ஸ் போஸ்ட்... ஆணாதிக்கம் என்று ஒரு பக்கம் கூச்சல், பெண் அடிமை என்று சாடல், தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் ஒரு வரம்பு மீறல் என்ற குற்றச்சாட்டு... டிவி சேனல்களில் விடாது இது பற்றிய சூடான விவாதங்கள்... இது விவாதத்திற்கு உகந்த பிரச்னையோ இல்லையோ,. இன்று இது ஒரு பிரச்னை என்று ஆகிவிட்டபடியால் இதை ஒரு சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது.

கலாசாரக் கேடு

இது ஒரு சிலரின் பார்வை. சரி நம் கலாசாரம்தான் என்ன? 1920– 1960களில் புடவை மட்டுமே நம் பெண்களின் கலாசாரமாக இருந்தது. அந்த புடவையும் முதலில் 9 கஜமாக இருந்தது. 1960க்குப் பிறகு 6 கஜமாக மாறியது. அப்போதும் இந்த மாற்றம் ஒரு கலாசார கேடாகத்தான் பேசப்பட்டது.ஆனால் அன்று ஊதி பெரிதுபடுத்த ஊடகங்கள் இல்லாமல் போனதால், இந்தச் சண்டைகள் வீட்டினுள் நடைபெற்றன. 1990க்குப் பிறகு புடவையும் மாறி சல்வார் ஆனது. 2000க்கு பிறகு ஜீன்ஸ்...லெக்கின்ஸ்... இன்னும் சொல்லவேண்டுமென்றால் அரை நிக்கர்... இது இளசுகளுக்கு. வீட்டில் மேக்ஸி அல்லது மிடி... ஆக காலத்திற்கு ஏற்றவாறு உடையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பாரம்பரிய பாவாடை தாவணி, இப்போது ஒரு ஃபேஷன் டிசைனர் ஆடையாக மாறிவிட்டது. யார் கண்டது கண்டாங்கி சேலைக்கூட வேறு உருவெடுத்து பாரம்பரிய உடையாக வரலாம்.

உணர்ச்சியை தூண்டுகிறதா?

கேரளாவில் வெகு சில ஆண்டுகள் முன்வரையில் முண்டு மேலே ஒரு சிறு துண்டு. இதுதான் உடை. அதை பார்த்த ஆண்களெல்லாம் வேண்டாத உணர்ச்சியோடுதான் திரிந்தார்களா?

இங்கே நான் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை சொல்கிறேன். நான் ஜெர்மனி சென்றிருந்தபோது, ஒரு நாள் டிராமில் பயணம் செய்தேன்.  திடீரென்று முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஆணும், அதே வயது பெண் ஒருவரும் முத்தமிட்டுக்கொண்டனர். சரி வெறும் பிரெஞ்ச் கிஸ் போல என்று நினைத்தேன். ஆனால் அப்படி இப்படி கமல்தனம் இல்லை. நம் ஊர் டபுள் ஏ சர்ட்டிபிகேட் கிஸ். அதைப் பார்த்து முகம் சிவந்தது நான் மட்டும்தான். அவர்கள் அருகிலேயே ஒரு 15வயது சிறுமி. எதிராக 80 வயது தாத்தா... டிராம் முழுவதும் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் வேறு வேறு நாட்டவர் . யாரும் அவர்களை பார்க்க கூட இல்லை.


இன்னும் சொல்கிறேன். அங்கே அணியப்படும் பெண்கள் உடை... எல்லோரும் எப்போதும் அணிகிறார்கள் என்றும் சொல்லமாட்டேன். ஆனால் வெளியே சென்றால் நிறைய கண்களில்படும். லோகட் மேல் டாப்... உள்ளே முழுவதுமாக தெரியும். பீச்சிற்கு சென்றால்... மாதத்தில் என்றோ ஒரு நாள் அடிக்கும் வெயிலில் தும்ளக்ஸ் (நிர்வாணம்) ஆக ஆண்களும், பெண்களும்... யாரும் நின்று கூட பார்ப்பதில்லை. பார்த்தாலும் யாரும் துணி எடுத்து மறைத்து, "கட்டையில போக... அக்கா தங்கச்சியுடன் பொறக்கலையா... ?" என்று பல்லைக் கடிப்பதில்லை.

நம் ஊரிலும் பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தில் பெண்கள் ரவிக்கை இன்றி திரிந்த காலங்கள் உண்டு. ஆண்களும் ஒரு லங்கோடுடன் திரிந்தனர். ஆக காலத்திற்கேற்ப, தேவைகளுக்கேற்ப உடைகளும் மாறி வந்துள்ளன.

கண்ணியம்

அடுத்து பேசப்படுவது கண்ணியம். அதாவது கண்ணியமான உடை. மற்றவர்களுக்கு 'சே' என்ற உணர்வைக் கொடுக்கக்கூடதாம்.'ரேப்' சிந்தனையை தூண்டக்கூடாதாம். கோயிலில் உள்ள சில சிலைகள் கூட உடையின்றி வெட்ட வெளியில் நிற்கின்றன.

தன் குடும்பம்

மற்றுமொரு விதமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு தந்தையாக, ஒரு அண்ணணாக, ஒரு கணவனாக, இது போன்ற உடை அணிவதை அனுமதிப்பாயா? ஒரு ஆண் மகன் கண்ணியமாக நினைத்தால் தன் குடும்பம் வேறு, அடுத்த பெண்களெல்லாம் வேறு என்று தோன்றுமா? நியாயங்கள் ஒரு தனி குடும்பத்திற்கு என்பது சரியா? அப்போது பிரச்னை எங்கே ஆரம்பமாகிறது. கண்ணியம், கலாசாரமெல்லாம் வெறும் பேச்சுக்கே. பிரச்னை சிந்தனையிலிருக்கிறது.

ஆக அசிங்கம், ஆபாசம்... பார்வையை பொறுத்த விஷயம். சரி... தப்பு சொல்ல ஒருவருக்கும் உரிமை இல்லை. கணவன், தந்தை, அம்மா... யாராயிருந்தாலும் அவர்களுடன் உள்ள ஈக்வேஷன், மரியாதை, கட்டுப்பாடு... இவற்றை பொறுத்து விதிமுறைகள் வழங்கப்படுகின்றன. அவரவர் மனதிற்கு தெரியும் அவர்களுக்கான நியாயமும் தர்மமும்.

செளகர்யம்

பெண்கள் இந்த விவாதங்களில் சொல்லும் காரணம், இந்த டைட் உடை தான் செளகர்யம், பாதுகாப்பானது. இதுவும் அபத்தமே. எல்லா உடையும் பழகிவிட்டால் செளகர்யமே. என் மனதிற்கு பிடித்திருக்கிறது என்று வேண்டுமானாலும் சொல்லலாம், யாரும் கேள்வி கேட்கமுடியாது.

ஆனால் ஒன்றை சொல்ல வேண்டும், குளிருக்கு உடலோடு ஒட்டிய உடை தேவைப்படும். நம் வெயிலுக்கு? காற்றோட்டமான உடையே சிறந்தது. உடல் நலத்தை மனதில் கொண்டு, நம் மனதிற்கு எதை காட்டலாம், எதை காட்டக்கூடாது என்று தோன்றுவதை வைத்து நம் உடையை தேர்வு செய்யலாம். பாரம்பரியம், கலாசாரம், அசிங்கம் என்று பேசி நியாயம் கற்பிக்க வேண்டாம்.

-லதா ரகுநாதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close