Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் அணு அரசியல்! ( தொடர் -10)

‘உங்களால் அதை சரிவர விளக்க இயலவில்லை என்றால் உங்களுக்கு அது குறித்த முழுமையான புரிதலோ ஆழ்ந்த அறிவு ஞானமோ இல்லை என்றே அர்த்தம்’- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தொடக்கம் முதலே ஏகத்துக்கும் குழப்பம். இந்த அணு உலையின் கட்டுமானப் பணியின்போது நடந்த விபத்துக்களில் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறின. சில விபத்துக்களை அணு உலை நிர்வாகம் வெளியே சொல்லாமல் மூடி மறைத்தது. பெரும்பாலான தொழிலாளர்கள், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் விபத்து குறித்த தகவல் வெளியே கசியாமல் உள்ளேயே முடங்கிப் போனது.

பலத்த பாதுகாப்பு நிறைந்த அணு உலையின் உள்ளே,  உ.பியை சேர்ந்த முகமது மீரஜ்கான் என்பவர் சுபோத் பஸ்வான் என்கிற போலியான பெயரில் வேலை செய்து வந்ததை, ஒன்றரை வருடத்திற்கு பிறகு கண்டுபிடித்தது, மத்திய தொழில் பாதுகாப்பு படை. அணு உலை தொடங்கப்படுவதற்கு முன்பே இப்படி பாதுகாப்பில் கவனக்குறைவு இருக்கும் சூழலில், இன்னும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்குமோ என சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அஞ்சினார்கள்.

அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடப்பது பற்றி முழுமையான தகவல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. போராடும் மக்கள் மீது போலீஸாருக்கு கோபம் மட்டுமே இருந்ததே தவிர, அவர்களின் போராட்டத்துக்கான காரணம் பற்றியோ, அதில் இருக்கும் நியாயம் பற்றியோ சிந்திக்கவில்லை. அதன் காரணமாகக் கூட முதல்வருக்கு தவறான தகவல்களை கொடுத்து இருக்கக் கூடும். அதனை நம்பிய ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆகவே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார். இதனால் மக்கள் அதிருப்தி அடைந்ததுடன், போராட்டத்தின் வேகமும் கூடியது. ஆளும் அரசும் தங்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பது மக்களுக்கு எரிச்சலை தந்தது.

இதனிடையே, போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் இருந்தது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ, பா.ம.க தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே போராட்ட களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். தேமுதிக தலைவர் விஜய்காந்த், இடிந்தகரைக்கு வந்து உண்ணாவிரதம் இருக்கும் மக்களை சந்தித்தார். போராட்டக் களத்தில் பேசிய அவர், ‘நானும் எங்களது கட்சியும் உங்களுக்கு எப்போதும் துணை நிற்போம். இந்த சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் உங்களுக்கு துணையாக இங்கேயே இருப்பார். மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை’ என்று மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி விட்டு சென்றார்.

அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழக எல்லையை கடந்தும் விரிவடையத் தொடங்கியது. அணு உலை குறித்த விவாதம், நாடு முழுவதும் எழுப்பப்படும் நிலைமை உருவானதை மத்திய காங்கிரஸ் அரசு ரசிக்கவில்லை. அதனால் போராட்டக்காரர்கள் மீது புழுதிவாரித் தூற்றும் முயற்சியில் தீவிரம் காட்டியது. அது எடுபடாமல் போனது. கேரளாவிலும் அணு உலைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க தொடங்கின. டெல்லி வரையிலும், ‘அணு சக்தி நமது நாட்டுக்கு தேவையா?’ என்கிற விவாதம் சாமானிய மக்களிடம் இருந்து எழத் தொடங்கியது.

சமூக ஆர்வலரான மேத்தா பட்கர், இடிந்தகரை கிராமத்துக்கு நேரில் வந்து,  போராடும் மக்களுக்கு தனது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தினார். போராட்டக் களத்தில் திரண்டு இருந்த பெண்களிடம்,  சிறப்பு கவனம் எடுத்து நீண்ட நேரம் பேசினார். அவர்களின் வாழ்க்கை நிலை, பொருளாதார சூழல், தொழில் உள்ளிட்ட பல விஷயங்களை நிஜமான அக்கறையுடன் கேட்டறிந்தார்.

அப்போது, அணு உலை மீது மக்களுக்கு இருந்த அச்சம், சோதனை ஓட்டத்தின் போது எழுந்த வெடிகுண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் குறித்தும் அப்பகுதி பெண்கள் அச்சத்துடன் விளக்கியதை கவனமாக கேட்டறிந்தார்.

பின்னர் போராடும் மக்களிடம் பேசிய அவர், "குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு இரண்டு தூதுவர்களை அனுப்பிய ஜெயலலிதா, இங்கே உயிரைப் பணயம் வைத்துப் போராடும் இந்த அபலை மக்களைச் சந்திக்க ஏன் வரவில்லை? அவர் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் இங்கே வந்திருக்க முடியுமே" என்றவர், உச்சகட்டமாக, “இந்த மக்களின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் பொறுப்பு. அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டியிருக்கும்” என எச்சரித்தார்.

நிலைமை விபரீதமாவதை தாமதமாக புரிந்து கொண்ட ஜெயலலிதா, சென்னையில் இருந்து கட்சி நிர்வாகியும்,  அந்த பகுதியை சேர்ந்தவருமான ஒரு வழக்கறிஞரை ரகசியமாக அனுப்பி, போராட்டக் களத்தின் உண்மை நிலையை அறிந்துவரச் செய்தார். அவர் வந்து ஆய்வு செய்த பிறகே இந்த போராட்டத்தின் உக்கிரமும், அதன் வலிமையும் முழுமையாக தெரிய வந்தது. இதில் ஆளாளுக்கு அரசியல் செய்வதும், இந்த விவகாரத்தால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களிடம் அ.தி.மு.க மீது அதிருப்தி பரவி வருவதும் தெரிவிக்கப்பட்டது.  சுதாகரித்துக் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து மற்றொரு அறிக்கை வெளியானது.

அதில், ‘மக்களின் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் வரை கூடங்குளம் திட்டத்தை தொடரக் கூடாது. மக்களின் எதிர்ப்பை பிரதமரிடம் தெரிவிக்க அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சியினர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்றார். அதோடு, கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிராக தானே முதல் கையெழுத்து போட இருப்பதாகவும் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார். ஜெயலலிதாவின் இந்த அறிக்கை மக்களுக்கு சற்று தெம்பை தந்தது.

அறிக்கையுடன் நில்லாமல் இது தொடர்பாக பிரதமருக்கு மிகக் காட்டமாக கடிதம் ஒன்றை எழுதினார், ஜெயலலிதா. அதில்  ''நாட்டின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், தலா, 1,000 மெகாவாட் திறன் கொண்ட, இரண்டு அணு மின் நிலையங்கள் அமைக்க, 1988 ல் இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.

2001ல், இந்திய அணு மின் கழகம் பணிகளை துவக்கி, முதல் மின் நிலையத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதி மக்கள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், அணு விஞ்ஞானிகளுடன் அரசு ஆலோசனை நடத்தியது. இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவித்ததை எடுத்துக் கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டுமென போராடிய மக்களை கேட்டுக் கொண்டேன். ஆனால், அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள், அப்பகுதி மக்களின் அச்சத்தை தீர்க்கவில்லை. எனவே, அப்பகுதியினர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இத்திட்டம், மத்திய அரசு மற்றும் இந்திய அணு மின் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவது, மத்திய அரசின் கடமை. ஆனால், மத்திய அரசு இதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இப்பிரச்னையில் தனக்கு சம்பந்தமே இல்லாததைப் போல, மத்திய அரசு நடந்து கொண்டு வருகிறது. அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்குவதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது. ஆனால், இப்பிரச்னை ஏதோ மாநில அரசு சம்பந்தப்பட்டது போல், கை கழுவி விடுவதாக அதன் நடவடிக்கைகள் உள்ளன.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம், இப்பிரச்னை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, இப்பிரச்னை தன்னுடைய துறை சம்பந்தப்பட்டது அல்ல எனக் கூறி கை கழுவி விட்டார். மேலும், இது பற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்வர் என்றும், மேம்போக்காக கூறி உள்ளதன் மூலம், இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்ற தொனியில், பொறுப்பற்ற முறையில் பதிலளித்து உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த, முக்கியத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஒரு அமைச்சர், கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வை நீக்கும் வகையில் எதையும் தெரிவிக்காதது வருந்தத்தக்கது. கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு, கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்திருக்க வேண்டும். இப்பிரச்னை பற்றி சம்பந்தப்பட்ட மக்களுடன் பேசி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், தன் கடமையில் இருந்து மத்திய அரசு தவறி உள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இப்பிரச்னையில் சுமுகத் தீர்வு எட்டப்படும் வரை, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம். தமிழக அமைச்சர்கள் மற்றும் போராட்டக் குழுவினர் உங்களை வந்து சந்தித்து மனு அளிப்பார்கள். அந்த கோரிக்கை மனுவில் நானே கையெழுத்திடுவேன்’’ என அதிரடியாக கடிதம் எழுதினார்.

முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு மத்திய அரசின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதை அடுத்தவாரம் பார்ப்போம்.......

-ஆண்டனிராஜ்
படங்கள்
: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

Displaying kudankulam_4.jpg

எடிட்டர் சாய்ஸ்

MUST READ