Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகை உலுக்கிய புகைப்படங்கள் - பகுதி 9 - அகதிக் குழந்தை...

றவுகளையும் உடமைகளையும் இழந்த மக்கள், குடும்பத்தில் எஞ்சியிருக்கும் சொற்ப உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ள வேறொரு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயரும்போது, அவர்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

வாழ்க்கையில் அனைத்தையுமே இழந்துவிட்டோம் என்று நினைத்து அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு, எதிர்பாராமல் ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு தருணத்தில் எடுக்கப்பட்டதுதான் இந்தப் புகைப்படம்.

அல்பேனியா (Albania) நாட்டின் குக்கிஸ் கிராமத்தில் கொசோவா (Kosovo) உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) சார்பில்  அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தின் பின்னே இருக்கும் கதை நெகிழ்ச்சிகளால் நெய்த  ஒன்று.

உள்நாட்டுப் போரினால் குடும்பத்தை இழந்த ஒருவர் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு  பாதுகாப்பிற்காக அகதிகள் முகாமை நோக்கி ஓடி வருகிறார். முகாமை நெருங்கும்போது அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம். ஆம் போரில் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த இவரின் மனைவியும் உறவினர்களும் முகாமில் முள்வேலிக்கு அந்தப்பக்கம் உயிருடன் இருக்கிறார்கள். அதேபோல இறந்துவிட்டதாக தாங்கள் நினைத்த குழந்தையும் கணவரும் தப்பித்து வருவதைப் பார்த்துவிட்டு மனைவியும் முள்வேலியை நோக்கி ஓடி வந்து, இரண்டு வயதுக் குழந்தையான அகிம் ஷாலாவை (Agim Shala) முள்வேலிக்கு இருபுறமும் மாற்றிக் மாற்றிக் கொஞ்சிக் கொள்கிறார்கள்.

போரினால் பிரிந்த குடும்பம் ஒன்று சேருவதையும், அகதிகளாக தமது நாட்டின் எல்லையைத் தாண்டுவதையும் இந்த ஒரே புகைப்படத்தில் அற்புதமான பதிவு செய்திருக்கிறார் பெண் புகைப்படக் கலைஞர் கரோல் கசி (Carol Guzy). கசி எடுத்த இந்தப் புகைப்படம்தான் கொசோவா அகதிகளின் கண்ணீர்க் கதையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியது.

கொசோவா சுயமாக சுதந்திரத்தை அறிவித்துக் கொண்ட ஒரு நாடு. ஆனால் அதற்கு அந்த நாடு கொடுத்த விலை, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சரி பாதியினர் அகதிகளாக வெளியேறியது. செர்பியாவின் ஒரு பகுதில் கொசோவர்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் தங்களை தனி நாடாக அறிவித்துக் கொண்டனர்.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டாலும் செர்பியா, ரஷ்யா மேலும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆரம்பம் முதலே இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் காரணம்தான் உள்நாட்டுப் போர் தொடங்க மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

1929 இல் முதல் உலகப் போருக்குப் பின்னர், இன்றைய செர்பியா, குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, கொசோவா ஆகியவைகளைக் கொண்ட கூட்டுக் குடியரசாக யுகோஸ்லோவியா உருவெடுத்தது. ஒருங்கிணைந்த யுகோஸ்லாவியாவில் பெரும் மாகாணமாக இருந்தது செர்பியா. அந்த மாகாணத்தின் உள்ளேதான் தன்னாட்சி அதிகாரம் பொருந்திய அமைப்பாக கொசோவா இருந்தது. கொசோவாவுக்கு அண்டை நாடு அல்பேனியா என்பதால் கொசோவாவில் வசித்த 90 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் அல்பேனிய முஸ்லிம்களாக இருந்தனர் (உ.ம்:இலங்கையில் தமிழீழம்).

இந்நிலையில் யுகோஸ்லாவியா உடைந்தபோது பெரிய குழுக்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரிந்துவிட, கொசோவா மட்டும் பிரியமுடியாமல் மாட்டிக்கொண்டதால் செர்பியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இந்தக் காலகட்டத்தில் அதிகளவில் பரவிய இஸ்லாம் கொசோவாவிலும் பரவ தொடங்கியதால் அங்கு அல்பேனிய மொழி பேசும் மக்களும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கினர்.

ஆனாலும் செர்பியர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதால் இயல்பாகவே கொசோவாவில் வசித்த அல்பேனியர்களின் மீது அதிக அளவு ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். இதுவும்  உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுத்தது. அல்பேனிய இளைஞர்கள் பெருமளவில் ஒற்றைக் குடையின் கீழ் திரண்டு "கொசோவோ விடுதலை இராணுவம்" என்ற விடுதலை இயக்கத்தைத் தொடங்கி விடுதலைப் போரில் ஈடுபட்டனர்.

1998-1999 வரை நடந்த இந்த உள்நாட்டுப் போரில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர். இதில் மூன்று லட்சத்து எழுபதாயிரம் பேர் அல்பேனிய அகதிகளாகவும், மீதமுள்ளவர்கள் மாசிடோனியா (Macedonia), மொண்டெனேகுரோ, மற்றும் போஸ்னியாவில் (Montenegro and Bosnia) நாடுகளில் தஞ்சமடைந்தனர். அதே சமயம் 4 லட்சத்திற்கும் மேலான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகினர் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

கொசோவாவை விட்டுப் பெருமளவு வெளியேறியதால் அவர்களின் வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் செர்பியர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்கள்மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்திக் கொண்டே இருந்தனர். இதனால் கொசோவாவிற்கு ஆதரவாகக்  களம் இறங்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (North Atlantic Treaty Organization) நேச நாடுகள், 24 மார்ச் 1999 அன்று செர்பிய இராணுவத்தின் மீது வான் வழித் தொடர் தாக்குதல்களை நடத்தியது. 11 வாரம் நடந்த இந்தத் தாக்குதலினால் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததோடு கொசோவா, ஐக்கிய நாட்டு சபைகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தது.

கரோல் கசி எடுத்த இந்தப் புகைப்படம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளி வந்ததும் மேற்கு உலகங்களின் பார்வை கொசோவாவிற்கு ஆதரவாகத்  திரும்பவும், கொசோவாவை நோக்கி பத்திரிக்கையாளர்கள் படையெடுக்கவும் காரணமாக அமைந்தது.

1956 மார்ச் 7 ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) பிறந்தவர் புகைப்படக் கலைஞர் கரோல் கசி. இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளியான தாயின் பராமரிப்பிலேயேதான் வளர்ந்தார். இவரின் நண்பர் ஒருவர் புகைப்படக் கலைஞராக இருந்ததால் இவருக்கும் அதன் மேல் காதல் வர, புகைப்படக் கல்லூரியில் சேருகிறார். ஆனால் புகைப்படக்கலைஞராக ஆகிவிட்டால் வறுமையில்தான் சாக வேண்டும் என அனைவரும் பயமுறுத்த அதில் பெயில் ஆகிவிடுகிறார். அதனால் மறுபடியும் செவிலியருக்குப் படித்தார். புகைப்படக் கல்லுரியில் பெயிலாகிவிட்ட கரோல் கசி எடுத்த இந்தப் புகைப்படம் 2000 ஆம் ஆண்டின் புலிட்சர் பரிசை வென்றது. மேலும், இதுவரை இவர் 4 முறை புலிட்சர் பரிசையும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

ஐ.நா சபையின் கட்டுப்பாட்டில் இருந்த கொசோவா 17 பிப்ரவரி 2008 ஆம் ஆண்டு தன்னைக் குடியரசு பெற்ற நாடாக (Republic of Kosovo) அறிவித்துக் கொண்டது. இதன்படி ஐநா சபையில் அங்கம் வகிக்கும் 108 நாடுகள் கொசோவாவுடன் அரசியல் உறவை வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் செர்பியா மறுத்ததோடு 2013-ல் ஏற்படுத்தப்பட்ட பிரஸ்ஸல்ஸ் ஒப்பந்தப்படி கொசோவாவை தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட சிறப்பு மாநிலமாக அறிவித்தது.

மேலும் ஐ.நாவில் வசிக்கும் மீதமுள்ள 85 நாடுகள் கொசோவாவை தனி நாடாக  ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் ஒலிம்பிக் மற்றும் உலக வங்கி போன்றவைகளில் தனி நாடாகவே பங்கு கொள்கிறது. ரஷ்யா, சீனா, ஸ்பெயின், மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், கொசோவாவின் பிரகடனத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டாலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்தது. வழக்கம்போல இந்தியா கொசோவாவின் பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா மௌனம் காத்ததற்கும், இலங்கைக் கடுமையாக எதிர்த்ததற்கும் காரணம் சொல்ல வேண்டுமா என்ன ? எது எப்படியோ, உலகில் கடைசியாக குடியரசு பெற்ற நாடாக இன்றுவரை கொசோவா இருக்கிறது.  நாளை ?

 

புகைப்படம் பேசும்...

-ஜெ.முருகன்

முந்தைய தொடர்களைப் படிக்க...

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close