Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கெயிட்டி'யை கட்டி எழுப்பிய ஆர்.வெங்கையா! - (தமிழ் சினிமா முன்னோடிகள் தொடர்-10)

சென்னையில் சினிமா தியேட்டர் கட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமைக்குரியவர் காலம் சென்ற ஆர்.வெங்கையா. சென்னையின் அடையாளப்படுத்தும் இடங்களில் முதலிடம் வகித்த அந்த தியேட்டர், கெயிட்டி. 1914 ல் சென்னையில் சினிமா படங்களை திரையிடுவதற்காக, அண்ணாசாலையை ஒட்டிய நரசிங்கபுரம் ரேடியோ மார்க்கெட் என்ற பகுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் இது அமைந்தது.

ரகுபதி வெங்கையா நாயுடு என்கிற ஆர்.வெங்கையா, ஒரு சிறந்த ஸ்டில் போடோகிராபர். பேசும்படங்கள் உருவாகாத காலத்தில் இவரது சிந்தனையால் விளைந்த சில தொழில்நுட்ப உத்திகள் பேசும்படத்திற்கான முன்முயற்சிகளாக இருந்தது. திரையில் மவுனப்படங்களை ஓடவிட்டு, அதேசமயம் பதிவுசெய்யப்பட்ட அதற்கு தகுந்த ஒலிப்பின்னணியை உருவாக்கி, ஒரே சமயத்தில் அதை மவுனக்காட்சியுடன் இணைத்து ஓட்டிக் காண்பித்தார். தனித்தனியே இயங்கும் இந்த உத்தியால், காட்சிகளுடன் ஒலி ஒன்றிணைந்து,  பார்வையாளர்களுக்கு பேசும்படங்களை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

வெங்கையாவின் இந்த முயற்சிக்கு பின்னணியாக அமைந்தது எது தெரியுமா?

1909-ஆம் ஆண்டில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட தகட்டிலிருந்து (படம் எடுக்கப்படும் அதே சமயத்தில்) ஒலிபரப்பப்படும் 'கிரானோ - மெகாகிராமபோன்' என்ற சினிமாக் கருவியைப் பற்றி, பத்திரிகைகளில் இவர் படிக்க நேர்ந்தது.

இங்கிலாந்து அரசர், அரசியாரின் அரண்மனைக்காக நியமிக்கப்பட்ட 'காமெண்ட்' கம்பெனியாரால் இதன் முதல் காட்சி காட்டப்பட்டது. வெங்கையா இக்கருவிகளை, சென்னை ஜான் டிக்கின்ஸன் கம்பெனி மூலமாகத் தருவித்தார். சென்னை டவுன் ஹாலில் (சென்னை மாநகராட்சி கட்டடம் அருகேயுள்ள வி.பி.ஹால்) தமது காட்சிகளைத் திரையிட்டார். 2 சிறிய ரீல்களைக் கொண்ட இந்த படம், 300 லிருந்து 400 அடிகள் வரையிலான நீளம் கொண்டவை.

அவ்வாறு அவர் திரையிட்ட 12 படங்களும் பெரும் வரவேற்பு பெற்றன. அவை 1.பனாமாவுக்குக் கீழ் (Under Panama) 2. ஊஞ்சல் பாட்டு (Swing Song) - 3. நெருப்பணைப்பவனின் பாடல் (Fire-man song) 4. கடல்பாம்பு (Sea Serpent) மெகாடோ (Mecado)-18 ஆகியவை ஆகும். மேலும் காட்சிப்படுத்திய படங்கள் அரசனின் பெட்டகம் மற்றும் முத்துக்குளித்தல் ஆகியவை.

படம் ஆரம்பமானவுடன் ஒலிபரப்பும் ஆரம்பமாகியது. அது அந்த ஊமைப் படத்திற்கு ஒலி உயிரோட்டத்தை கொடுத்தது. இந்தக் கருவிக்கான செலவு அக்காலத்தில் சுமார் முப்பதாயிரம் ரூபாய். 1910-ஆம் ஆண்டில் எஸ்பிளனேடில் ஒரு தற்காலிக பிரயாண கூடாரத்தை அமைத்து, இந்த படங்களை மக்களுக்கு காட்டினார். பெங்ளூர், பம்பாய், ஆந்திரா ஜில்லாக்களிலும் பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று, வெற்றிகரமாக அதை செயல்படுத்தி, பெரும் பொருள் ஈட்டினார்.

கொழும்புவில் இந்தக் கருவியுடன் 500 அடிகள் கொண்ட மௌனப் படங்களான முத்துக்குளிப்பவன் (Pearl Fisher), சிகரெட் பெட்டி (Cigar Box), ராஜாவின் பெட்டி (Raja's Casket) கறுப்பு ராஜகுமாரி ஆகிய படங்களுடன் சுற்றுப்பயணம் செய்து இப்படங்களை திரையிட்டார்.

தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தினை பல நாடுகளுக்கும் சென்று இவர் திரையிட்டார். இதனால் பெரும் வருவாய் கண்டார் வெங்கையா. 1912-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய வெங்கையா,  தனக்கென நிரந்தரமாக ஒரு தியேட்டர் வேண்டும் என்ற எண்ணத்தில் கெயிட்டி தியேட்டரை ஆரம்பித்தார். யூனிவர்சல் சீரியல் படங்களான சர்க்கஸ் ஆட்டம் (எட்டிபோலோ நடித்தது) 'முறிந்த நாணயம்' 'பெரிய பரிசு' (பிரான்சில் போர்டு நடித்தது) ஆகியவைகளைத் திரையிட்டார்.

'மிலியன் டாலர் அற்புதம்', 'மைராலின் திடுக்கிடும் செயல்கள்', 'பிரம்மாண்ட எல்மோ', ஆகிய படங்களையும் இங்கு திரையிட்டார். தங்க சாலைத் தெருவில் கிரவுண் டாக்கீசைக் கட்டி எல்லா ஊமைப் படங்களையும் அங்குக் காட்டினார். கெயிட்டி தியேட்டரைப் பொறுத்தவரை, அதை வெறும் சினிமா அரங்கம் என்றில்லாமல்,  தமிழர்கள் அதை சென்னையின் முக்கிய அடையாளமாக கருதினர்.

மவுனப்படங்கள் காலத்திலேயே கிட்டத்தட்ட இருபதாண்டுகள், சென்னை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அரங்கமாக திகழ்ந்தது கெயிட்டி. பின்னாளில் பேசும் படங்கள் வெளிவந்தபோது இன்னும் புகழடைந்தது இந்த தியேட்டர்.

எழுபதாவது ஆண்டை கொண்டாடிய வேளையில் இந்த திரையரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, நவீனமாக ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டது. காலமாற்றத்தினால் புதிய படங்கள் திரையிடப்படாததாலும், சென்னையில் இன்னும் நவீனமான பல தியேட்டர்கள் உருவெடுத்ததாலும்  2005ஆம் ஆண்டு கெயிட்டி தியேட்டர் தன்னுடைய சேவையை நிறுத்திக்கொண்டது.

நூற்றாண்டை காண்பதற்கு ஒன்பது ஆண்டுகள் இருந்த நிலையில், கெயிட்டிக்கு நேர்ந்த இந்த துயரம் தமிழ் ரசிக நெஞ்சங்களை வருத்தம் கொள்ளச் செய்தது.

1913-ஆம் ஆண்டிலேயே குளோப் தியேட்டரை (தற்போது ராக்ஸி) கட்டி எழுப்பினார். இக் கட்டடத்தின் பின்புறம் ஸ்டார் ஆப் ஈஸ்ட் பிலிம் என்ற ஸ்டூடியோ துவக்கப்பட்டது. வெங்கையா படத் தொழிலில் 1929-ஆம் ஆண்டு வரை தியேட்டர் அதிபராக இருந்து, பின்னர் ஓய்வுபெற்றார். பிரபல இயக்குனர் ஆர்.பிரகாஷ் இவருடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுபதி வெங்கையா நாயுடு, 1941-ஆம் ஆண்டு இறுதியில் உடல்நலமின்றி காலமானார். தமிழ்சினிமா சரித்திரத்தில் வெங்கையாவுக்கு தனி இடம் உண்டு!

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close