Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ... மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ ( 1- நாஞ்சில் சம்பத்)

"ஹலோ...மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ... தலைவர் தென்காசியில் இருந்து வந்து கொண்டிருப்பதால் அதுவரை பேச்சாளர்........அவர்கள் பேசுவார்கள்" என்ற அறிவுப்புகளுடன் அரங்கேறும் அரசியல் மேடை தமிழகத்தில் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

முக்கிய தலைவர்கள் வரும் வரையோ அல்லது கட்சியின் கொள்கைகளை விளக்கும் பொதுக்கூட்டமோ எதுவானாலும் கட்சித் தொண்டர்களை பேச்சால் கட்டிப்போடுவதில் சிறந்த மேடைப் பேச்சாளர்களை தமிழகம் கொண்டிருக்கிறது. இன்றளவும் திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போகாமல், ஆட்சி அதிகாரங்களில் கோலோச்சுவதற்கு இந்த பேச்சாளர்கள் ஒரு முக்கிய காரணம்.

சமயங்களில் இறுதியில் பேசும் முக்கிய தலைவர்களை விடவும், இந்த பேச்சாளர்களின் உரை மக்களை ஈர்ப்பது உண்டு.

அப்படி தமிழக அரசியல் மேடைகளில் தம் அதிரடி பேச்சுகளால் மக்களை ஈர்த்த பேச்சாளர்களை பற்றிய தொடர் இது...

நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.

கன்னியாகுமரி மாவட்டம் மணலிக் கரையில் புனித ஜோசப் பள்ளியில் 3-வது படித்துக்கொண்டிருந்தான் அந்த சிறுவன். அப்போது நடந்த சுதந்திர தின விழாவில் எமிலி என்ற ஆசிரியை அந்த சிறுவனை பேசும்படி கூறினார். விழாவில், நேரு போன்று ஷெர்வானி உடைபோட்டுக்கொண்டு, நெஞ்சில் ஒரு ரோஜா மலரை குத்திக்கொண்டு ஆசிரியர் எழுதிக் கொடுத்த நேருவின் உரையைத் தடங்கல் இன்றி பேசி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கைதட்டல் பெற்றான் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் இன்றைய அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.

'தீர்ந்து போகாத திராவிட இயக்கம்', 'அ.தி.மு.க., எனும் ஆயிரம் காலத்துப் பயிர்' எனத் தொடங்கி அரசியல் மேடைகளில் அ.தி.மு.க.வின் கொள்கைகளை அனல் தெறிக்க பேசுகிறார் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். மாணவப் பருவத்திலேயே பேச்சாளராக அறிமுகம் ஆகி, தி.மு.க.வில் அரசியல் மேடை ஏறியவர். வைகோவோடு ம.தி.மு.க.,வில் பயணித்தவர். இப்போது அ.தி.மு.க., மேடை பேச்சாளராக முழங்கி வருகிறார். தமிழக அரசியல் அதிரடி பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் நாஞ்சில் சம்பத்.

மாணவப் பருவத்திலேயே பள்ளி அளவிலான பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றவர். கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டிகளிலும் அவர் பரிசு பெற தவறவில்லை. மாநில அளவிலான பேச்சுப்போட்டிகளில் மட்டும் 42 விருதுகளை பெற்றுள்ளார். கிருபானந்த வாரியாரிடம் இருந்து ஞான சிறுவன் விருதும்  பெற்றிருக்கிறார்.

திராவிட இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டவராதலால், ஈ.வி.கே.சம்பத் பெயரையே இவருக்கு வைத்தனர். பின்னர் நாளடைவில் ஊர்ப்பெயரும் சேர்ந்துகொள்ள நாஞ்சில் சம்பத் ஆனார்.

நாஞ்சில் சம்பத்தின் உரைகள் அடங்கிய வீடியோக்கள், யூடியூப் இணையதளத்தில் ஹிட் அடிக்கின்றன. திருவாரூரில் தமிழ் மொழி குறித்து அவர் ஆற்றிய உரையை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கின்றனர். கட்சி வேறுபாடுகளை மறந்து கமெண்ட்களையும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். 3 தலைமுறைகளைக் கடந்து வெற்றிகரமான பேச்சாளராக நாஞ்சில் சம்பத் திகழ்கிறார்.

அவரது பேட்டியில் இருந்து...

முதன் முதலாக எங்கு அரசியல் மேடை ஏறினீர்கள்?


1984-ம் ஆண்டு குமரி மாவட்டம் திருவட்டாறு அருகில் உள்ள ஆற்றூரில், தி.மு.க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நான் பார்வையாளராகச் சென்றிருந்தேன். அப்போது அந்த கூட்டத்துக்கு அழைக்கப் பட்டிருந்த தலைமை கழகப் பேச்சாளர் போலீஸ் கண்ணன் வரவில்லை. எனவே, கோடிட்ட இடத்தை நிரப்புவது போல திடீர் பேச்சாளராக என்னை அந்த மேடையில் பேச சொன்னார்கள். என் மனதில் குற்றால குதூகலம் பொங்கியது. இளமையில் கண்ட கனவு நிறைவேறியது.

இந்த மேடைதான் எனக்கு தொடக்கமாக அமைந்தது. 1989-ம் ஆண்டு வரை குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டங்களில் எல்லாம் பேசி அந்நாள் மேடைகளில் என் பெயர் பரிச்சயம் ஆனது.

இன்றளவும் மறக்க முடியாத அரசியல் மேடை என்று எதைக் கருதுகிறீர்கள்?

1986ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கோவையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் படத்தை திறந்து வைத்து நான் பேசினேன். இந்த உரையை என்னால் மறக்க முடியாது.

1989ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காரியா பட்டியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கலைஞர் வரும் வரை தொடர்ந்து பேசவேண்டும் என்று கூறினர்.  இரவு 10 மணிக்கு பேசத்தொடங்கினேன். மறுநாள் காலை ஏழரை மணிக்குத்தான் கலைஞர் வந்தார். அதுவரை சுமார் ஒன்பதரை மணி நேரம் விடாமல் மேடையில் உரையாற்றினேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத உரை.

இந்த மேடையில் நான் பேசுவதற்கு முன்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கலைமாமணி முத்துக்கூத்தர், பாதை மாறாத பாட்டுப் பயணம் என்ற தமது புத்தகத்தில் இந்த உரையைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

மேடைப் பேச்சுக்கள் காரணமாக உங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?


என் மீது வெவ்வேறு காலக்கட்டங்களில் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 1991-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மொழிப்போர் நினைவு நாள் குறித்து பேசினேன். 'மொழி விடுதலையைத் தராவிட்டால் வீதியில் நடமாட முடியாது' என்று ஆவேசமாகப் பேசினேன். இதற்காக என் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேடையில் பேசியதற்காக, கடந்த தி.மு.க., ஆட்சியில் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. என்னைப் போல எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் யாரும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். பல்வேறு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு, சேலம் தவிர பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, வேலூர், சென்னை உள்ளிட்ட மத்திய சிறைகளில்  சிறைவாசத்தை அனுபவித்திருக்கின்றேன்.

பொதுவாக அரசியல் பேச்சாளர்கள் உணர்ச்சிவயப்பட வைப்பவர்கள். அப்படி மேடையில் பேசும்போது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறதா?


சென்னை அருகே பொழிச்சலூரில்  பேசிக் கொண்டிருந்தேன். ஈழத்தமிழர்களுக்கு தி.மு.க., என்னென்ன துரோகங்களை இழைத்தது என்று பட்டியல் போட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, தி.மு.க., ஆட்கள் மேடையின் மீது தாக்குதல் நடத்தினர். நான் சென்ற கார் மீதும் தாக்குதல் நடத்தினர். மின்சாரத்தை துண்டித்துவிட்டனர். பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒளியில் மைக் இல்லாமல் பேசினேன்.

தாம்பரத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறச் செல்லும் முன்பு, தி.மு.கவினர் என்மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். போலீசார்தான் என்னை காப்பாற்றினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நான் கருணாநிதி அரசை விமர்சனம் செய்து பேசினேன். இதனால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

மதுரை சிறைச் சாலையில் 'அட்டாக்' பாண்டி தலைமையிலான ரவுடிகள் என்னை கொலை செய்ய முயன்றனர். நான் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். என்னை திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

உங்களைக் கவர்ந்த பேச்சாளர் யார்?

ஒருவரல்ல; பலர். அரசியலில் நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், கவிஞர் குடியரசு, விடுதலை விரும்பி, க.சுப்பு, திருச்சி செல்வேந்திரன், கோவை ராமநாதன் ஆகியோரது உரைகள் என்னை கவர்ந்தவை. மாணவராக இருந்த காலத்தில் வாரியார், கி.வா.ஜெகநாதன் ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டேன். பேராசிரியை இளம்பிறை மணிமாறனும் என்னை கவர்ந்த பேச்சாளர்களில் ஒருவர்.

இலக்கிய மேடைகளில் உங்கள் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்கள்?

அரசியல் மேடை தவிர இலக்கிய மேடைகளிலும் பேசி வருகின்றேன். பட்டிமன்ற நடுவராக, பள்ளிகளில் தன்னம்பிக்கை உரைகளும் நிகழ்த்தியிருக்கின்றேன். விருத்தாசலத்தில் 2002-ம் ஆண்டு 10 நாட்கள் நடைபெற்ற சிலப்பதிகாரச் சொற்பொழிவில் பேசினேன். ராமாயணம், மகாபாரதம் பற்றி பலர் சொற்பொழிவாற்றி உள்ளனர். ஆனால், சிலப்பதிகாரம் பற்றி பேசினால்தான் தமிழர்களின் மான உணர்ச்சி கிளர்ந்து எழும் என்று பேசினேன். இந்த தொடர் சொற்பொழிவு 5 நாட்களை கடந்தபோது, மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் மெய்யப்பன் அவர்கள், எனக்கு 'இலக்கிய சிற்றர்' என்ற விருது கொடுத்தார்.

பேச்சில் யாருடைய பாணியை பின்பற்றுகிறீர்கள்?


யாருடைய பாணியையும் நான் பின்பற்றியதில்லை. மேடைகளில் மெதுவாக பேசத்தொடங்கி, பின்னர் நாலுகால் பாய்ச்சலில் குதிரை மாதிரி பாய்ந்து,  பாய்ந்த பிறகு ஒரு தென்றலாக உருமாறி, யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஒரு நகைச்சுவையைச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்து,  உச்சஸ்தாதியில் உரத்தக் குரலில் பேசி,  அதே வேளையில் மெல்லிய குரலில் ஏற்றி, இறக்கி பேசுவது என்னுடைய பாணி.

யாருடைய மேடை பேச்சு பாணியையும் நான் பின்பற்றுவதில்லை. மேடை  பேச்சை வளர்த்துக்கொள்ள தினமும் தேடுதலோடு இருப்பேன். தினமும் மனனம் செய்கின்றேன். புதிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற வேட்கையோடு இருக்கின்றேன்.  கேளிக்கை, களியாட்டம் என்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை.

படிப்பது, எழுதுவது இதற்காகவே என்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கிறேன். தாகமும், வேகமும் என்னை ஆட்கொண்டிருக்கிறது. அடுத்ததாக 24 மணி நேரம் விடாமல் உரையாற்றி சாதனை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றேன். அது இலக்கிய மேடையா, அரசியல் மேடையா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை.


கொந்தளிப்பான சூழலில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அந்த பேச்சாளர் பேசினார். அவரது பேச்சு, தமிழ்நாட்டில் ஒரு புதிய கட்சி உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. அவரைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

- கே.பாலசுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close