Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அட்டாக்' பாண்டி அடையாளம் காட்டும் ராமகிருஷ்ணன் யார்?

'அவரை ஏன் விசாரிக்காமல் விட்டார்கள்?' - கைதுக்கு முன் அட்டாக் அளித்த பரபரப்பு பேட்டி!' என்ற தலைப்பில் அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியை கடந்த 24 ஆம் தேதி விகடன் டாட் காமில் வெளியிட்டிருந்தோம்.

அதில், "எடுத்த எடுப்பிலேயே 'கோபாலகிருஷ்ணனை (பெயர் மாற்றப்பட்டு உள்ளது!) ஏன் போலீஸ் விசாரிக்கவில்லை? அவரை ஏன் காப்பாற்றுகிறார்கள்' எனக் கேள்வி எழுப்பினார் அட்டாக்" என்றும் குறிப்பிட்டிருந்தோம். தற்போது அட்டாக் போலீசின் விசாரணை வளையத்திற்குள் வந்துவிட்டார்.

இந்நிலையில் அட்டாக் அந்த பேட்டியில் குறிப்பிட்ட, நாம் கோபாலகிருஷ்ணன் என பெயர் மாற்றிய அந்த நபர் பெயர் ராமகிருஷ்ணன். இவர் வேறு யாருமல்ல. துரை தயாநிதியின் பி.ஏ-வான ராமகிருஷ்ணன்தான்.

‘‘விஜயபாண்டியையும் ஆரோக்கிய பிரபுவையும் மதுரை அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தார்கள். அப்போது ராமகிருஷ்ணனை பற்றி இருவரும் ஸ்டேட்மென்ட் கொடுத்தார்கள். நேர்மையான இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி என்பவர் உடனே ராமகிருஷ்ணனை அழைத்து விசாரித்தார். அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது நள்ளிரவு மூன்று மணிக்கு டி.எஸ்.பி-யான கணேசன் என்பவர், இன்ஸ்பெக்டரிடம்  பேசியிருக்கிறார். ‘டி.சி., கமிஷனர் எல்லாம் பிரஷர் கொடுக்குறாங்க. ராமகிருஷ்ணனை உடனே அனுப்பிவிடுங்கள். அவரைத் தொட்டால் பெரிய பிரச்னைகள் வரும்’ எனச் சொல்கிறார். அதன்பிறகு ராமகிருஷ்ணனை எந்த விசாரணையும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

‘ஹை கமாண்ட் ரெகமென்ட்’ எனச் சொல்லி அவரை விடுவிக்கிறார்கள். ராமகிருஷ்ணனை தொட்டால், பின்னால் என்ன வரும்னு போலீஸுக்குத் தெரியும். ஒருநாள் இரவு முழுவதும் ராமகிருஷ்ணனை ஸ்டேஷனில் வைத்துவிட்டு ஏன் விட்டுவிட்டார்கள்? அதற்கான காரணம் என்ன? விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஸ்டேட்மென்ட்டில் ராமகிருஷ்ணன் பெயர் இருந்தும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குற்றத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது உலகத்துக்குத் தெரிய வேண்டுமா, இல்லையா? இதில் நாங்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம்.

‘பொட்டு சுரேஷ் இருந்தால் நம்ம ஆட்கள் இருக்க முடியாது’ எனச் சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன். அவர் பேசிய உரையாடல்கள் நம்பர் எல்லாமே போலீஸில் இருக்கிறது. அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒருநாள் இரவு முழுவதும் ராமகிருஷ்ணனை ஜட்டியோடு நிற்கவைத்து விசாரித்தவர்கள், கடைசியில் ஏன் ரிமாண்ட் செய்யாமல் விட்டார்கள்? என்னோட இருந்த என் உறவினர்களை மட்டுமே கைதுசெய்திருக்கிறார்கள். ஏன் மற்றவர்களைப் பிடிக்கவில்லை?” என அந்த அளித்த பேட்டியில் சொன்ன அட்டாக், "அண்ணன் பி.ஏ-வான பிரபுவை பற்றியும் விரிவாகச் சொல்வேன்’’ எனச் சொல்லியிருந்தார்.

‘பொட்டு’ சுரேஷுக்கும் தனக்குமிருந்த மோட்டிவ்-ஐ வைத்து, தன்னை மட்டும் சிக்கவைத்திருப்பதாகச் சொல்கிறார் ‘அட்டாக்’ பாண்டி. அதாவது, ‘பொட்டு’ சுரேஷுக்கு வெளியில் தெரியாமல் நிறைய எதிரிகள் இருந்திருக்கிறார்கள் என்பதே ‘அட்டாக்’ பாண்டி சொல்ல வந்த கருத்து. ‘அந்தக் கோணத்தில் போலீஸ் ஏன் விசாரணை நடத்தவில்லை?’ என்பதுதான் ‘அட்டாக்’ பாண்டியின் ஆதங்கம்.

ராமகிருஷ்ணனுக்கு போலீஸில் அத்தனை செல்வாக்கா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு வந்தவர் ராமகிருஷ்ணன். எப்படியோ அழகிரி மகன் துரை தயாநிதியின் நட்பு வட்டத்துக்குள் சென்றவர் அப்படியே தன் எல்லையை விரிவுபடுத்தி, துரை தயாநிதிக்கு எல்லாமும் அவர்தான் என்றாகிவிட்டார். பாரம்பர்யமான மதுரை பேட்மின்டன் அசோஸியேஷனில் நுழைக்கப்பட்டு அதன் செயலாளராக ஆனார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அசோஸியேஷனை தன் வசமாக்க போலியான ஆவணங்களைத் தயாரித்தார் என்று தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. இவர் தம்பிக்கு, அழகிரி சிபாரிசில் அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி வாங்கினார்.

ராமகிருஷ்ணனுக்கும் ‘பொட்டு’ சுரேஷுக்கும் யார் பெரிய ஆள் என்பது குறித்த தகராறு இருந்தது. ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினால் அந்த விசாரணை துரை தயாநிதி, அடுத்து அழகிரி என்று செல்லும். ‘‘ ‘அட்டாக்’ ஆட்களிடம் ராமகிருஷ்ணன் தொடர்பில் இருந்ததையும், அப்போது நடந்த செல்போன் உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ராமகிருஷ்ணனை மட்டும் போலீஸ் ஏன் காப்பாற்ற நினைக்கிறது?’’ என கேள்வி எழுப்புகிறார்கள் ‘அட்டாக்’கின் நண்பர்கள்.

மேலும் அட்டாக் போலீஸ் கஸ்டடியை ஏன் நீட்டிக்க வேண்டும் என்பதற்கு சுப்ரமணியபுரம் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, விரைவு நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்த மனுவில் சொல்லப்பட்ட காரணங்களை பார்க்கும்போது, போலீஸின் விசாரணை வளையம், ஸ்டாலின், அழகிரி, துரை தயாநிதி என்ற வட்டத்துக்குள் மட்டுமே நிற்கிறதே தவிர, அட்டாக் தரப்பினர் சந்தேகம் கிளப்பி வரும் துரையின் நண்பர் ராமகிருஷ்ணன் பற்றி எதையும் போலீஸ் குறிப்பிடவில்லை.

ராமகிருஷ்ணனின் பின்னணியில் சில போலீஸ் அதிகாரிகள் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் 'அட்டாக்' ஆதரவாளர்கள்!

நீதிமன்ற விசாரணையில் உண்மை தெரியத்தானே போகிறது!
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ