Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அம்மா' ஒரு யோகி!: ஜெயலலிதா புகழ் பாடும் கனிமொழியின் முன்னாள் கணவர்!

திபன் போஸ். சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் பிரபலமான பெயர்.  பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர், கிரானைட்ஸ் குவாரிகளின் உரிமையாளர் என மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வந்த அதிபன் போஸ், இப்போது ஆன்மிகத் துறவி என்றால் ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

கனிமொழியின் முன்னாள் கணவர் என்றால் சட்டென புரியும்!

இல்லறத்திலிருந்து வெளியேறி ஆன்மீகவாதியாக  மாறிவிட்ட  போஸ், அமெரிக்காவில் 1 லட்சம் சீடர்களுடன் ஆன்மிகத்தை பரப்பிவருகிறார்.

தற்போது தமிழகத்திலும் கிளை பரப்ப ஆயத்தமாகிவருவதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக, தான் எழுதிய 'மிஸ்டிரி ஆஃப் கான்ஸியஸ்னஸ்' என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  வைத்து வெளியிடவும் பகீரத பிரயத்தனம் செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

பெரம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் உள்ள அன்னை சித்தர் ராஜ்குமார் சாமிகளை சந்திக்க வந்திருந்த அதிபன் போஸை நேரில் சந்தித்தோம்.

வசதியான குடும்பத்தை சேர்ந்த நீங்கள் திடீரென ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் ?
 
சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. கனிமொழியுடன் திருமணம் நடந்த பிறகு என் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து, என் ஆத்மா என்னை விட்டு வெளியேறியது போன்று உணர்ந்தேன். அந்த இறப்புக்கு நிகரான சம்பவத்தில் நான் இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்குள் புகுந்ததாக கருதினேன்.

அதற்கு பிறகுதான் முழுமையான ஆன்மிகத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இன்று வரை ஆன்மிகத்தில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் எனக்கு ஆசிரமங்கள் இருக்கின்றன. அதில் ஒரு லட்சம் சீடர்கள் ஆன்மிகத்தை பரப்பி வருகிறார்கள்.

கனிமொழிக்கும், உங்களுக்கும் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட என்ன காரணம்,  இப்போதைய உங்களது குடும்ப வாழ்க்கை பற்றி?

அது முடிந்து போன கதை. அதை மீண்டும் கேட்க வேண்டாம். கனிமொழியை திருமணம் செய்வதற்கு முன்பே, 'என்னை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது, நீயும் அரசியலில் ஈடுபடக்கூடாது, என்னை எந்த விஷயங்களிலும் நிர்பந்திக்கக்கூடாது' என்று சில நிபந்தனைகளை போட்டேன். அதை ஏற்றுக்கொண்டபின்தான் திருமணம் நடந்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே அதை சரியாக கனிமொழி கடைபிடிக்கவில்லை. அதற்கு பிறகு நாங்கள் ஒருமித்த கருத்துடன் விலகிக் கொண்டோம். அதற்கு பிறகு  மீண்டும் திருமணம் செய்தேன்.

அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். இரண்டு குழந்தைகளை தத்து எடுத்தேன். மூன்றாவது ஒரு திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறேன். என் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக போகிறது. இது எந்த வகையிலும் ஆன்மிக பணியை பாதித்ததில்லை. அதற்கு என் குடும்பம் தடையாகவும் இருந்ததில்லை. எந்த சிக்கலும் இல்லாமல், முழு மனதோடு ஆன்மிக பாதையில் ஈடுபட்டு வருகிறேன்.

ஆன்மிக புத்தகங்களெல்லாம் எழுதியிருக்கிறீர்களாமே?

என்னுடைய இருபது ஆண்டு ஆன்மிக பணிகளில் உள்ள சிறப்பு அம்சங்களையும், மனதை ஒருநிலைப்படுத்துதல், மனிதன் என்பவன் யார் என பல விஷயங்களை அதில் சொல்லியுள்ளேன். அதுமட்டுமில்லாமல், ஆன்மிகத்தில் ஒரு மனிதன் எந்த விதத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும், அவ்வாறு ஈடுபட்டால் என்னென்ன நிலையை அடைவான் என்பதோடு, சிறு உயிர்களுக்கு வயிறார உணவு அளித்தாலே அவன் மோட்சம் அடைவான் என்றும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

அமெரிக்காவில் ஆசிரமத்தை தொடங்கினாலும் தமிழகத்திலும் எனது ஆன்மிக பணியை துவங்க ஆசைப்படுகிறேன். தமிழகத்தில் பல்வேறு  நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. அதனால்தான் அவர் முன்னிலையில் எனது புத்தகத்தை வெளியிட முதல்வரிடம் நேரம் கேட்டிருக்கிறேன். நல்ல முடிவு சொல்வார் என்று நம்புகிறேன்.

ஏன் இந்த திடீர் அதிமுக பாசம்... திமுக மக்களுக்கு நல்ல திட்டங்கள் செய்யவில்லையா?

கனிமொழியின் கணவர் என்பதை விட்டு விடுங்கள்; அது முடிந்து விட்டது. இப்போது நான் ஒரு ஆன்மிகவாதி. தமிழ்நாட்டில் பிறந்த நான், இந்த நூலை தமிழ்நாட்டில் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது.  தானத்தில் பெரிய தானமான அன்னதானம் திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக நடத்தி வருகிறார்.

யோகி போன்ற ஒருவரால்தான் இதையெல்லாம் செய்ய முடியும். அதேபோல்தான் மத்தியிலும் மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். அவரும் ஒரு யோகிதான். அவரின் யோக திட்டத்தால் இந்தியா மற்ற நாடுகளுக்கு உதாரணமாக சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

நான் இருபது நாடுகளை தேர்ந்தெடுத்து அதில் யோகாவை பரப்ப நினைத்தேன். ஆனால் மோடி உலக நாடுகளை இணைத்து யோகா தினமாகவே கொண்டாடி விட்டார். இதுவரையிலும் நான் கண்டிராத பிரதமர் மோடி. மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். மாநில அரசின் செயல்பாடுகளை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அம்மா உணவகம் சிறப்பானது, இது மட்டுமில்லாமல் பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

- எம்.திலீபன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close