Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அணு உலை அரசியல்! ( தொடர் -11)

’இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வு என்பது, இந்த உலகின் மிகப்பெரிய பணக்காரனின் சொத்துக்களை விடவும் பல ஆயிரம் மடங்கு மதிப்பு வாய்ந்தது என்பதை நாங்கள் மிகத்தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறோம்’ - சே குவேரா

முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு மத்திய அரசு பயந்தது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாதே!  பதறியடித்த பிரதமர் மன்மோகன் சிங், உடனடியாக முதல்வர் ஜெயலலிதாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார். தனது சார்பில் மத்திய அமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக அறிவித்து அதன்படியே அவர் வந்தார்.

அவர் வந்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது போன்ற தோற்றம் ஏற்படுவதையோ, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பெயரை தட்டிச் செல்வதிலோ முதல்வருக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனால் நாராயணசாமி வந்த அன்று இரவிலேயே அவசரமாக ஒரு அதிரடி முடிவை தமிழக அரசு எடுத்து, அடுத்த அதிர்ச்சியை மத்திய அரசுக்கு அளித்தது.

அதன்படி, உடனடியாக சென்னைக்கு வருமாறு போராட்டக் குழுவினருக்கு முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது.

அந்த இரவிலேயே அவர்களை அழைத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வரை சந்திக்கும் குழுவையும் முதல்வர் அலுவலகமே தீர்மானித்தது. அதில் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன், தூத்துக்குடி கத்தோலிக்க ஆயர் இவான் அம்புரோஸ், கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியஸ், இடிந்தகரை பங்குத் தந்தை ஜெயக்குமார், அய்யா வழியை சேர்ந்தவரான பாலபிரஜாபதி அடிகள், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்று இருந்தனர்.

இவர்களுடன், சென்னை மயிலை பேராயர் சின்னப்பா மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், செல்லப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், பச்சைமால் ஆகியோரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர், முதல்வரை மறுநாள் சந்தித்தது. ஒரு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் போராட்டக் குழுவினரின் கருத்துக்களை முதல்வர் ஜெயலலிதா மிக கவனமாக கேட்டுக் கொண்டார்.

முதல்வரிடம் அணு உலையின் தீமைகளை விளக்கும் பல புத்தகங்களை போராட்டக் குழுவினர் அளித்தனர். அதனை படித்துப் பார்ப்பதாக அவரும் புன்னகையோடு தெரிவித்தார்.

போராட்டக் குழுவினரின் மீது வீணான வதந்திகளை மத்திய அரசு பரப்புவதையும் அவர்கள் சுட்டிக் காட்ட தவறவில்லை. போராட்டக் குழுவை சேர்ந்த சுப.உதயகுமாரன் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கு புத்தகங்களை கூட காட்டி தங்களின் வங்கி இருப்பையும், எங்கிருந்தும் பணம் வரவில்லை எனபதையும் எடுத்துச் சொன்னபோது முதல்வர் அதனை மிகக் கவனமாக கேட்டதுடன், போராடும் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அத்துடன், தமிழக அமைச்சர்கள் குழுவுடன் சென்று பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

முதல்வரை சந்தித்த போராட்டக் குழுவினர் அவரிடம், ‘அமைச்சரவையை கூட்டி கூடங்குளம் திட்டத்தை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்’ என்றொரு கோரிக்கையையும் முன்வைத்தனர். அதனையும் ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. போராட்டக்குழுவினரிடம், ’உடலை வருத்தும் உண்ணாவிரத போராட்டத்தை உடனே முடித்துக் கொள்ளுங்கள்' என வலியுறுத்தினார். இதனால் போராட்டக் குழுவினரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

போராட்டக் குழுவை சேர்ந்தவரான சுப.உதயகுமார், 'முதல்வர் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் கடந்த 11 நாட்களாக நடந்த உண்ணாவிரதத்தை நாங்கள் கைவிடுகிறோம்’ என்றார் உற்சாகம் பொங்க.

அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பேராயர்கள், முக்கியஸ்தர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 25 பேர் இடம்பெற்றனர். இதில், அ.தி.மு.க எம்.பிக்கள் தம்பிதுரை, மைத்ரேயன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பா.ஜ.க துணை தலைவர் ஹெச்..ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி-யான டி. ராஜா, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான சரத்குமார் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர்.

சுப.உதயகுமாரன் தலைமையிலான அக்குழுவினர் டெல்லி செல்லும் முன்பாக, சென்னையில் தமிழக தலைமைச் செயலாளரை சந்தித்து பிரதமரிடம் அளிக்க இருக்கும் மனு விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்து,  கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வலியுறுத்தி மனு அளிக்க இருப்பதாக, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் டெல்லி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதமரைச் சந்திக்க செல்வதற்கு முன்பாக போராட்டக் குழுவினரிடம் புதிய உத்வேகம் இருந்தது. தங்களது கோரிக்கையை பிரதமரிடம் எடுத்துச் சொல்லிக் கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்துவது குறித்து விரிவான திட்டங்களுடன் டெல்லி சென்றனர். ஆனால், இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்பதோ, இது ஒரு சம்பிரதாயமான சந்திப்பு மட்டுமே என்பதோ அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பிரதமரிடம் அவர்கள் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர், போராட்டக் குழுவினர் அச்சங்கள் பற்றியோ அல்லது தமிழக அரசின் சந்தேகங்கள் பற்றியோ பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

அதற்கு மாறாக, பிரதமர் அலுவலகத்தில் தயாராக அமர்த்தி வைக்கப்பட்டு இருந்த அணு சக்தித்துறை அதிகாரிகள் அறிவியல் வகுப்பு எடுக்கத் தொடங்கி விட்டனர். இங்கிருந்து சென்றிருந்த மக்கள் பிரதிநிதி களுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை என்கிற நிலைமை.  பிரதமரை சந்தித்தோம் என்பதை தவிர, இவர்களின் எந்த கோரிக்கையையும் ஏற்கப்படவில்லை. இதனால் இடிந்தகரை போராட்டம் மறுபடியும் தொடங்கியது.

உண்ணாவிரதம் நடைபெற்றதுடன் கடையடைப்பு, கடலுக்கு செல்லாமல் புறக்கணிப்பு என இந்த இரண்டாம் கட்ட போராட்டமும் அறப்போராட்டமாக தொடர்ந்ததால், போலீஸாரால் எதுவும் செய்ய இயலவில்லை.

இதனிடையே, கூடங்குளத்தை சுற்றிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து அணு உலைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அணு உலை அமைந்துள்ள வளாகத்தின் எதிரில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தடியடி நடத்தப்பட்டதில் மாற்றுத் திறனாளிகள் பலர் காயம் அடைந்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா மதுரையில் பேசும்போது, "இடிந்தகரையில் போராடும் மக்களில் ஒருத்தியாக நானும் இருப்பேன். மக்களின் அச்சத்தை போக்காமல் அணு உலையை திறக்க அனுமதிக்க மாட்டோம்” என உறுதிபட தெரிவித்த கருத்து, போராடும் மக்களுக்கு ‘டானிக்' போல இருந்தது. அரசின் இந்த அணு முறை காரணமாக தங்களின் கோரிக்கையான அணு உலையை மூடும் திட்டம் சீக்கிரத்திலேயே நிறைவேறும் என போராட்டக் களத்தில் இருந்தவர்கள் நம்பினர்.

ஆனாலும் போராட்டக் குழுவினர் தங்களின் வழக்கமான ஆதரவு திரட்டும் பணிகளை செய்து வந்தனர்.  அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமாரன் தலைமையில் புஷ்பராயன், சிவசுப்பிரமணியன், ஜெயக்குமார் ஆகியோர் கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வரான உம்மன்சாண்டியை சந்தித்து பேசினர். "கூடங்குளம் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால் அது கேரளாவின் தென்பகுதியையும் பாதிக்கும் என்பதால் நீங்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

அத்துடன், அணு உலைக்கான பணிகளை நிறுத்தி வைக்க தமிழக அரசு நிறைவேற்றியதுபோல கேரள அரசும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் உம்மன்சாண்டி அவர்களது கோரிக்கையை கவனமாக கேட்டுக் கொண்டதுடன், அதில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற்றார். பின்னர், போராட்டக்காரர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

கேரளாவின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனை சந்தித்த இக்குழுவினர், கூடங்குளத்தில் நடக்கும் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர் நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.

பின்னர், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப்பையும் இக்குழுவினர் சந்தித்தனர். திருவனந்தபுரத்தின் தலைமைச் செயலகம் முன்பாக கேரள மக்களால் நடக்க இருக்கும் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில், அம்மாநில அரசின் சார்பில் அமைச்சர் ஜோசப் பங்கேற்க வேண்டும் என போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். இப்படி அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இது மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யாவுக்கு செல்ல இருக்கும் சூழலில், அந்நாட்டு ஒத்துழைப்புடன் நடக்கும் அணு உலைக்கான பணிகள் முடங்கிக் கிடக்கும் விவகாரத்தை எப்படி சமாளிப்பது என அதிகாரிகள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அதனால் சில அதிரடி முடிவுகளை அரசு மேற்கொண்டது. அவை என்ன...

(அரசியல் தொடரும்..!)  

-ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

Displaying kudankulam_4.jpg

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close