Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹலோ... மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ-2 (பீட்டர் அல்போன்ஸ் )

 

 கொந்தளிப்பான சூழலில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அந்த பேச்சாளர் பேசினார். அவரது பேச்சு, தமிழ்நாட்டில் ஒரு புதிய கட்சி உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழகத்தில் ஒரு கட்சி வேரூன்ற காரணமான அந்த பேச்சாளர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் இன்றைய தமிழ்மாநில காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ்.

இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பேச்சாளருமான பீட்டர் அல்போன்ஸ்,  திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரத்தில் பிறந்தவர். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திராவிட கட்சிகள் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக மாணவர்களை திரட்டினார். அதுதான் பீட்டர் அல்போன்ஸின் முதல் அரசியல் போராட்டம். அப்போது அவர் மாணவர்.

தெருமுனை கூட்டங்களை நடத்தி, 'மாணவர்கள் படிப்பை பாழாக்கக் கூடாது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. படிக்க வாய்ப்புள்ளவர்கள் இந்தி படிக்க வேண்டும்' என்று தைரியமாக மேடைகளில் பேசினார்.

கல்லூரியில் படிக்கும்போது, மதுரை பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார். 1971- ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது  மதுரையில் பழநெடுமாறன் முப்பெரும் விழா நடத்தினார். அதில் முன்னாள் முதல்வர் காமராஜர் மேடையில் இருக்கும் போது, பீட்டர் அல்போன்ஸ் முதன் முதலாக அரசியல் மேடை ஏறினார். காமராஜர் முன்னிலையில் நிகழ்ந்தது அவரது அரசியல் கன்னிப்பேச்சு.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் உதயகுமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் உள்ளிட்ட தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார் அந்த மேடையில். மானசீக தலைவராக கருதிய காமராஜர் முன்பு பேசியது மிகுந்த பெருமிதத்தை ஏற்படுத்தியது என்று கூறும் பீட்டர் அல்போன்ஸ், தம்முடைய மேடை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்... 

பேச்சுக்கலையை எவ்வாறு வளர்த்துக்கொண்டீர்கள்?


மாணவப் பருவத்திலேயே சில போராட்டங்களில் பங்கெடுத்து பேச ஆரம்பித்துவிட்டேன் என்றாலும் தேர்ந்த பேச்சாளனாக என்னை மாற்றியது சென்னை சட்டக்கல்லூரிதான். அப்போது சட்டக்கல்லூரியில் விவாதக்குழு என்று ஒன்று இருந்தது. அதில் ரவி ஆறுமுகம் ஐ.பி.எஸ்., சுகி சிவம் போன்றோர் பங்கேற்று பேசுவர். நான் தமிழ், ஆங்கிலம் என இரண்டு விவாதக்குழுவிலும்  இருந்தேன். வாரம் ஒருமுறை கூடும் இந்த குழுவில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்போம்.

என்னுடைய பேச்சுக்கலை வளர இது ஒரு காரணமாக அமைந்தது. பியூசி படித்தபோது எனக்கு முந்தைய சீனியராக இருந்தவர் வலம்புரிஜான். இப்படி அப்போதே வாதத்திறன் மிக்கவர்கள் மத்தியில் பேசிப் பழகியதால், பேச்சுக்கலை என்னுள் வளர்ந்தது என்று கருதுகிறேன். 

உங்களால் மறக்க முடியாத மேடை பேச்சு என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?

1996-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், ஊழல் நிறைந்த அ.தி.மு.க., அரசுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சமாதானப்படுத்த முடியாமல் தலைவர்கள் ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், அருணாசலம்  போன்றவர்கள் சென்னை திரும்பினர். அன்று தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளிப்புடன் இருந்தனர்.

அப்போது சத்தியமூர்த்திபவன் முன் திறந்தவெளியில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் உரையாற்றியதை இன்றளவும் மறக்க முடியாது. 'தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் முடிவு எடுத்திருக்கிறது. எனவே நாம் அகில இந்திய காங்கிரஸ் உடன் இணைந்திருக்க தேவையில்லை.

தமிழக நலனுக்கு ஆதரவாக உரிய முடிவை எடுக்க வேண்டும்' என்று 35 நிமிடங்கள் உணர்ச்சிமிக்க உரையாற்றினேன். அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் என் பேச்சை முழுக்க முழுக்க கை தட்டி வரவேற்றனர். இந்த பேச்சு தொண்டர்களின் உணர்வுகளை, தமிழக காங்கிரஸ் தலைவர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. இதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அதன்பிறகு நடந்ததை நாடறியும்.

மேடையில் பேசியதற்காக உங்கள் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கின்றவா?


ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96-ம் ஆண்டு கால கட்டத்தில் அவரது ஆட்சிக்கு எதிராக மேடைகளில் பல்வேறு கருத்துகளைப் பேசி இருக்கின்றேன். இதற்காக அ.தி.மு.க., அரசு என் மீது 14 அவதூறு வழக்குகள் தொடர்ந்தது.

மேடை பேச்சு காரணமாக உங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறதா?
 
1994-ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினேன். இந்த பேச்சு மறுநாள் செய்தி தாள்களில் வெளியானது. மறுநாள் இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு வந்தேன். நான் ரயில் ஏறும்போது, வழக்கத்துக்கு மாறாக ரவுடிகள் போன்ற தோற்றமுடைய சிலர் என் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தனர்.

ஆனால், அங்கு போலீஸ்காரர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னைக்கு வந்து எழும்பூரில் இருந்து எம்.எல்.ஏ. விடுதிக்கு சென்று இறங்கினேன்.

விடுதியில் என் அறைக்கு செல்ல முயற்சிக்கும் போது அந்த அதிகாலை வேளையில், அங்கு போர்வையை போத்திக்கொண்டு சிலர் உட்கார்ந்திருந்தனர். அந்த பகுதியில் இது இயல்பான ஒன்று என்பதால் அது பற்றி கருத்தில் கொள்ளாமல் அவர்களை தாண்டிச்செல்ல முயன்றேன். அப்போது திடீரென போர்வையை விலக்கி எழுந்தவர்கள் என்னை உருட்டுக்கட்டைகளால் தாக்கத் தொடங்கினர். சில நொடிகளில் நான் சுதாரித்து விட்டேன்.

நான் சத்தம் போட்டதை அடுத்து எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வளாகத்தில் இருந்த போலீசார் ஓடி வந்தனர். பின்னர் அந்த ரவுடிக்கும்பல் ஓடிவிட்டது. இது குறித்து அப்போது காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவையில் பிரச்னை எழுப்பினோம். சாலை மறியலிலும் ஈடுபட்டோம்.

மாற்றுக் கட்சி தலைவர்களின் முன்பு மேடையில் பேசிய அனுபவம் உண்டா?


கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சென்னையில் துக்ளக் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது அந்த மேடையில் பா.ஜ.க., தலைவர் இல. கணேசன், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், ஆடிட்டர் குருமூர்த்தி  என பா.ஜ.க., ஆதரவு தலைவர்கள் நிறைந்திருந்தனர். அங்கு நான் மட்டும்தான் வேறு கட்சியைச் சேர்ந்தனாக இருந்தேன். எனக்கு அதில் பேசுவதற்கு தயக்கம் எல்லாம் இல்லை. நான் எனது உரையை ஆரம்பித்த போது முதலில் பார்வையாளர்கள் கூச்சலிட்டனர்.

பின்னர் நேரம் செல்ல, செல்ல பார்வையாளர்களை என் வசப்படுத்தினேன். 25 நிமிடம் நான் உரையாற்றி முடிக்கும் வரை பார்வையாளர்கள், என் பேச்சில் கட்டுண்டு இருந்தனர்.  மேடையில் இருந்த தலைவர்களும் என் உரையை பாராட்டினர். இதுவும் என்னால் மறக்க முடியாத மேடை. 

உங்களைக் கவர்ந்த பேச்சாளர்கள் யார்?


அவ்வை நடராஜன் எனக்கு பிடித்த பேச்சாளர்களில் ஒருவர். சுப. வீரபாண்டியன் பேச்சும் என்னை கவர்ந்துள்ளது. க.சுப்பு வின் மேடை பேச்சுக்கள் என்னால் மறக்கவே முடியாது. பேராசிரியர் க. அன்பழகன், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரது பேச்சுக்களும் என்னை ஈர்த்தவை.

உங்களுடைய மேடை பேச்சு பாணி எப்படி இருக்கும்?


என்னுடைய பேச்சுக்களில் எப்போதும் ஆங்கில கலப்பு இருக்கும். கொட்டேஷன்களை குறிப்பிட்டு பேசுவேன். கதைகள், சம்பவங்களை பேச்சில் பயன்படுத்துவேன். பார்வையாளர்களும், பேச்சாளர்களும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு சமநிலையில் வரும்போதுதான் மேடைப் பேச்சு வெற்றி பெறும். நமக்கு முன்பு பேசியவர்களின் பேச்சுக்களால் பார்வையாளர்களுக்கு அலுப்புத் தட்டியிருக்கக் கூடும். எனவே நாம் பேசும் போது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை வசப்படுத்த வேண்டும்.

இப்போது மேடை பேச்சு எப்படி இருக்கிறது?

மேடை பேச்சு என்பது இப்போது அரசியல் தலைவர்களின் மேடையாக மட்டும்தான் இருக்கிறது. அதாவது வாசன், ஜெயலலிதா, கருணாநிதி, சோனியா காந்தி, மோடி என தலைவர்கள் மட்டும் பேசுவதாக அரசியல் மேடை சுருங்கி விட்டது. பேச்சாளர்களுக்கான தனி மேடை என்பது குறைந்து விட்டது. பேச்சாளர்களுக்கு என்று கட்சி சாராத தனிக்கூட்டம் வந்த காலம் ஒன்று உண்டு. அரசியல் கூட்டங்களுக்கு முன்பெல்லாம் தனி ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது அரசியல் கூட்டங்களுக்கு கட்சி தொண்டர்கள் மட்டுமே வருகின்றனர்.

பொதுவான பார்வையாளர்கள் எண்ணிக்கை என்பது குறைந்து விட்டது. அரசியல் பேச்சாளர்களுக்கான மேடை என்பது இப்போது அரங்க கூட்டமாக மாறிவிட்டது. அதுவும் அடிக்கடி நடப்பதில்லை. அதற்கு பதில் இப்போது தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன. அரசியல் மேடை என்பது இப்போது தொலைக்காட்சி விவாதமாக மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து....

பொது மேடைகளில் மதமாற்றத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததால் பார்வையாளர்களிடம் இருந்து சலசலப்புகளைச் சந்தித்தவர். அவர் யார் ? அடுத்த வாரம் பார்க்கலாம்...

- கே.பாலசுப்பிரமணி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ