Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் அணு அரசியல்: தொடர் -12

‘நான் மெதுவாக முன்னேறிச் செல்கிறேன்.. ஆனால், நான் ஒருபோதும் கடந்து வந்த பாதையில் மீண்டும் திரும்பிச் செல்ல மாட்டேன்’

ஆபிரஹாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி.

கூடங்குளத்தில் அணு உலைப் பணிகள் தொடர முடியாதபடி பொதுமக்கள் போராட்டம் ஒரு பக்கம் நடந்து வந்த நிலையில், அணு உலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய மாநில அரசும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இதனால், அணு உலைகளுக்கான பணியில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது. போராட்டத்தை முடக்க மத்திய அரசும் அணுசக்தி துறையும் மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

பிரதமர் தலைமையில் தமிழக அரசு மற்றும் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையும் எந்த பலனையும் அளிக்கவில்லை.  இதனால், இடிந்தகரையில் நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. அத்துடன் போராட்ட வடிவங்களை மாற்றி அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் போராட்டக் குழு இறங்கியது. இடிந்தகரையை மையமாகக் கொண்டு நடைபெற்றுவரும் போராட்டத்தின் ஒவ்வொரு அசைவும் உலக நாடுகளை சேர்ந்த அணு உலைக்கு எதிரான மக்களைச் சென்றடையும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தை போராட்டக் குழு முழுமையாக கையாளத் தொடங்கியது.

முள்ளை முள்ளால் எடுப்பது என்பதுபோல அறிவியலின் தீமையை அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவது பரப்பியதால் கூடங்குளம் அணு உலையில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல் குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் கிளம்பத் தொடங்கியது. இதனை முடக்கும் வழிதெரியாமல் தவித்த மத்திய அரசு, இந்த போராட்டத்தில் பெருமளவில் பங்குபெறும் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து சமூக சேவைக்காக வரக்கூடிய பணத்தை தடுத்து நிறுத்தினால் இந்தப் போராட்டத்தை கைவிடுமாறு மத அமைப்பினர் வலியுறுத்துவார்கள் என நம்பிய மத்திய அரசாங்கம், அதற்கான நடவடிக்கையில் இறங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள பல தொண்டு நிறுவனங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. எந்த தவறுகள் நடந்ததற்கான ஆவணங்களும் அதில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், தொடர்ந்து தொண்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. சில தொண்டு நிறுவங்களை காரணமே இல்லாமல் முடக்கம் செய்யப்பட்டது. ஆனாலும், போராட்டத்துக்கும் அவர்களுக்கும் துளியும் சம்பந்தமே இல்லாத நிலையில் அதனை முடக்குவதால் போராட்டம் எப்படி முனை மழுங்கிப் போகும்?

அனைத்து அஸ்திரங்களும் பலன் அளிக்காத நிலையில், மத்திய அரசு திடீரென புதிய அஸ்திரத்தை கையில் எடுத்தது. இந்த முறை தமிழக அரசுக்கான நெருக்கடி. அதாவது, மின் பகிர்மானத்தில் குளறுபடி. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய மின்சாரத்தில் கணிசமான அளவை திடீரென குறைத்தது. இதனால் தமிழகம் மின் பற்றாக்குறையால் தத்தளித்தது.

எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. சிறு, குறு தொழில்கள் முடங்கின. தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தடுமாறினார்கள். தொழில்துறை மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யலாம் என்றால் அதற்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பவர்கிரீட் முட்டுக்கட்டை ஏற்படுத்தியது. குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மினசாரத்தை வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட போதிலும் அதனை அங்கிருந்து கொண்டுவந்து சேர்க்க வேண்டிய ப்வர்கிரீட் அமைப்பானது, ‘எங்களுக்கு அதற்கான கட்டமைப்பு வசதி இல்லை. போதிய மின்பாதை வசதி இல்லாததால் மிசாரத்தை வெளி இடத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்தில் சேர்க்க முடியாது’ என கைவிரித்தது.

இதனால் மின்தட்டுப்பாடு என்பது தமிழகத்தை வாட்டி வதைத்தது. நகரப்பகுதிகளில் நான்கு மணி நேரமும் கிராமப் பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தது. எப்போது கரெண்ட் வரும் எப்போது போகும் என்பதே தெரியாமல் இருந்தது. இரவு நேரங்களில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்டோர் அவதிப்பட்டனர். அத்துடன் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியது. இது ஒட்டுமொத்த மக்களிடமும் தமிழக அரசு மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடக்கத்தில், இந்த சதி பற்றி அறிந்ததும் மிகவும் கோபம் அடைந்தார், முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக காட்டமான அறிக்கை வெளியிட்டு மத்திய அரசை கண்டித்தார். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி தனது கண்டனத்தை பதிவு செய்தார். ஆனால் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவே இல்லை. தமிழகத்தில் நிலவிய அசாதாரண மின்வெட்டு காரணமாக இங்கு தொழில் நிறுவங்களை நடத்தி வந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களை நோக்கி சென்றன.

கூடங்குளம் அணு உலைக்காக மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. சாமான்ய மக்களுக்கு இதன் பின்னணியில் இருந்த அரசியல் புரியவில்லை. அதனால் தமிழக அரசை ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடுமையாக குறைகூறத் தொடங்கினார்கள்.

மத்திய அரசின் இந்த நெருக்கடி மட்டும் அல்லாமல் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியையும் கணிசமாக குறைத்தது. இதற்கான பின்னணி எது என்பது தமிழக அதிகாரிகளுக்கும் அரசுக்கும் தெரியும் என்பதால் அணு உலை போராட்டத்துக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கு எதிர்ப்பே இல்லாத நிலையில், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி என்பது புரியாமல் அதிகாரிகள் தவித்தார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியானது அணு உலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனாலும், கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் அவர்களால் எந்த எதிர்ப்பு போராட்டத்தையும் நடத்த முடியவில்லை. அதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் காங்கிரஸ் கட்சியானது மத்தியில் தங்களது கட்சி ஆட்சியில் இருப்பதால் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அறிக்கைகளை வெளியிட்டன. சென்னையில் உள்ள சில காங்கிரஸ் கட்சியினரை நெல்லைக்கு வரச்செய்து அணு உலைக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து அறிக்கைகள் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால், அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வலுக்க தொடங்கியிருந்தது. இடிந்தகரைகரையைச் சேர்ந்த குழந்தைகள்கூட போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதுவது என்பதையும் தாண்டி ரஷ்ய ஒத்துழைப்புடன் அணு உலை அமைக்கப்படுவதால் அந்நாட்டு அதிபருக்கும் கடிதம் எழுதினார்கள்.

அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான சுப. உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோர் இடிந்தகரையில் போராட்டம் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். ‘ஆண்டவனே.. அணு உலையை மூட அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடு..’ என தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டன. அத்துடன் விஜயாபதி கிராமத்தில் உள்ள விஸ்வாமித்திரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தார்கள். இடிந்தகரையில் ஊர்வலம், போராட்டம், உண்ணாவிரதம் என அறவழியில் எதிர்ப்பு தொடர்ந்தபடியே இருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவுக்கு பயணமாக புறப்பட்டார். அவரது இந்த பயணத்தின்போது ராணுவம், அறிவியல் தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பல அம்சங்களில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்தது.

அத்துடன், முக்கிய அம்சமாக அணு உலை தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட இருந்தது. அவர் அங்கு செல்வதற்கு முன்பாக போராட்டம் முடிவுக்கு வந்தால் நல்லது என அணுசக்தி துறையினரும் அதிகாரிகளும் விரும்பினார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டபடி ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் அளித்த பேட்டியில், கூடங்குளம் அணு உலைகுறித்து விரிவாக பேசினார். அவர் என்ன சொன்னார், என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்...

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ