Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை...!- வாசன் விதைத்த பிரம்மாண்டம் ( தொடர்-12)

ஜெமினி பிக்சர்ஸ் என்ற பட விநியோக நிறுவனத்தை தொடங்கினார் வாசன். அந்நிறுவனம் சார்பில் பல தமிழ் படங்களை விலைக்கு வாங்கி விநியோகித்தார். இதனால் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தரமான படங்களை விநியோகம் செய்யும் என்ற நற்பெயர் மக்களிடையே பரவியது. 1939-ல் 'சிரிக்காதே' என்று பெயரிடப்பட்ட பல ஹாஸ்யங்கள் நிறைந்த முழு தமாஷ் படம் வெளியானது. இதன் விநியோக உரிமையை பெற்று தமிழ் நாடெங்கும் திரையிட்டார் வாசன்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி.எம். ஏழுமலை, டி.எஸ்.துரைராஜ், எம்.எஸ். முருகேசன், பி.எஸ்.ஞானம் போன்ற பிரபல நகைச்சுவை நடிகர்கள் நடித்த இப்படம், அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன் ஆகிய தனித்தனி கதைகளின் தொகுப்பு. 'சிரிக்காதே' என்ற பொது தலைப்பில் இப்படத்தை வெளியிட்ட வாசனின் வீட்டில் குபேரன் நிரந்தரமாக குடியிருக்கத் துவங்கினான். வாசன் திரையுலகின் மீது அதீத நம்பிக்கைகொண்டு வேகமாக இயங்க ஆரம்பித்தார்.

புதுமைக்கு இன்னொரு பெயர் எஸ்.எஸ். வாசன்

பத்திரிகை தொழிலில் ஓரளவுக்கு பணம், புகழ் ஈட்டிய வாசன், தன் திறமையை நீட்டிக்க வேண்டி தேர்ந்தெடுத்த துறை திரைப்படத்துறை.  விகடனில் வெளியான'தியாகபூமி' கதையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்தார் டைரக்டர் கே.சுப்ரமணியம். டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் விருப்பத்தை ஏற்ற வாசன் 'தியாகபூமி' படத்தை தயாரிக்க அனுமதியளித்தார்.

பிரபல எழுத்தாளரும் ஆனந்தவிகடனின் துணை ஆசிரியருமான கல்கி எழுதிய 'தியாகபூமி' கதை,  ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவரத் தொடங்கியபோதே ஏறத்தாழ சினிமா படப்பிடிப்பும் அப்பொழுதே தொடங்கியது. 'தியாகபூமி' படத்திற்கு பண முதலீடு செய்த வாசன்,  அதை விளம்பரப்படுத்த ஒரு புது யுக்தியை கண்டுபிடித்தார். சாதாரணமாக தொடர்கதையில் வரும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு படம் போடப்படுவது வழக்கம். ஆனால் 'தியாகபூமி' நாவலுக்கு வாசன் , திரைப்படத்தின் காட்சிகளையே 'விகடனில்' பிரசுரித்தார்.

இது நாவலுக்கு நிஜத்தன்மையை ஏற்படுத்தியது. அதேசமயம் படத்திற்கு' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது.

படத்தைப் பற்றிய மெகா விளம்பரமாகவும் இது அமைந்தது. அந்நாளில் யாருமே செய்திராத ஒரு புதுமை இது. வாசன் ஒவ்வொன்றையும், புதுமையாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பதில் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். வாசனின் புதுமை விரும்பும் மனம், ஏதாவது ஒன்றை புரட்சிகரமாகவோ, புதுமையாகவோ செய்து முடிக்கும். இது வாசனுக்கு இயல்பாக வாய்த்த திறமை.

'செய்யும் தொழிலே தெய்வம்' என்று கருதுபவரான வாசன், எந்த தொழிலைச் செய்தாலும் அதை முழுமையான ஈடுபாட்டுடன் நேர்த்தியாக செய்து முடிக்கும் மனோபாவத்திற்கு சொந்தக்காரர். ஆம் அவர் ஒரு Totalist. எதையும் பூரணமாக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுபவர். அதனால்தான் அவரால் இமாலய சாதனைகளை செய்ய முடிந்தது.

தியாகபூமி கதை என்ன?

'தியாகபூமி' படத்தின் கதாநாயகி சாவித்திரியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும், கதாநாயகன் ஸ்ரீதரனாக கே.ஜே. மகாதேவனும் நடித்தனர். கதாநாயகி சாவித்திரி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அதிகம் படிப்பறிவு இல்லாதவள். கதாநாயகன் ஸ்ரீதரன் மேல் நாட்டிற்கு சென்று படித்தவன்.
 
ஏற்கனவே ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் காதல் வயப்பட்ட அவன், தனது தாயாரின் வற்புறுத்தலால், சாவித்திரியை மணக்கிறான். புகுந்த வீட்டில், சாவித்திரி பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். இதுபற்றி அவள், தன் தந்தை சம்பு சாஸ்திரிக்கு (பாபநாசம் சிவன்) எழுதும் கடிதங்களை, சித்தி எரித்து விடுகிறாள். மாமியார் வீட்டில் இருந்து விரட்டப்படும் சாவித்திரி, ஒரு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைக்கு (பேபி சரோஜா) தாய் ஆகிறாள். குழந்தையுடன் அவள் தற்கொலை செய்து கொள்ள முயல, அங்கே தந்தை சம்பு சாஸ்திரியின் குரல் கேட்க, குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகிறாள்.
 
அக்குழந்தையை, தன் சொந்த பேத்தி என்று அறியாமலேயே, சாருமதி என்று பெயரிட்டு வளர்க்கிறார், சம்பு சாஸ்திரி. சாவித்திரி, பம்பாய் சென்று தன் பணக்கார அத்தையின் உதவியினால் உயர் கல்வி பயில்கிறாள். ஏராளமான சொத்துக்களுடன், நாகரீக மங்கையாக 'உமாராணி' என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறாள்.

ஐந்தாண்டுகள் உருண்டோடுகின்றன. தன் மகள் என்று தெரியாமலேயே சாருமதியை சந்தித்து பாசம்கொள்கிறாள், உமாராணி (சாவித்திரி). மோசடி குற்றத்துக்காக கைது செய்யப்படும் ஸ்ரீதரனை மீட்கிறாள். தன் மனைவி சாவித்திரிதான் உமாராணி என்பதை அறியும் ஸ்ரீதரன், அவளுடன் மீண்டும் வாழ விரும்புகிறான்.
 
ஆனால், அவன் கோரிக்கையை சாவித்திரி நிராகரிக்கிறாள். அவள் தன்னுடன் வாழவேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடருகிறான், ஸ்ரீதரன். ஆனால் சாவித்திரியோ, 'கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை விரட்டி அடித்த அவருடன் இனி வாழமாட்டேன். வேண்டுமானால், நான் வசதியுடன் இருப்பதால் அவருக்கு ஜீவனாம்சம் தருகிறேன்' என்று கோர்ட்டில் கூறுகிறாள். இறுதியில், சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை செல்கிறாள், சாவித்திரி. ஸ்ரீதரனும், சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்கிறான். பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது.

1939-ம் ஆண்டு மே 20-ம் தேதி சென்னையில் கெயிட்டி, ஸ்டார் ஆகிய திரையரங்குகளில் 'தியாக பூமி' திரையிடப்பட்டது. கதை அமைப்பு, நடிப்பு, இயக்கம் எல்லாவற்றிலும் படம் சிறப்பாக அமைந்திருந்தது. டி.கே.பட்டம்மாளின் தேச பக்திப் பாடல்கள் கணீர் என்று ஒலித்தன.

தியாக பூமி' படத்துக்கு 'தடை'

'ஆணுக்கு பெண் அடிமை இல்லை' என்ற சீரிய கருத்தை மையமாக கொண்டிருந்ததால் படத்தை பெண்கள் மிகவும் விரும்பிப் பார்த்தனர். 'தியாக பூமி புடவை' 'தியாகபூமி வளையல்' என்ற பெயர்களில் சேலைகளும், வளையல்களும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. படம் சில நாட்கள் ஓடியது. அதற்குள் அது ஒரு சோதனையை சந்திக்க நேர்ந்தது.

படத்தில் இடம் பெற்றிருந்த சில உரையாடல்கள், தேசபக்தி பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் காரணமாக இந்தப் படத்திற்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு தடை விதிக்கப்போவதாக தகவல் வெளியானது.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இத்தகவல் தெரிந்து விட்டதால், படத்தை விடிய விடிய இடைவெளியின்றி, மக்களுக்கு இலவசமாக காட்ட எஸ்.எஸ்.வாசனும், டைரக்டர் கே.சுப்பிரமணியமும் ஏற்பாடு செய்தனர். மக்கள் வெள்ளம் சென்னை தியேட்டர்களின் வாசலில் மொய்த்தது. மக்கள் திரளால் கெயிட்டி தியேட்டரின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவமும் நடந்தது. சுதந்திரத்திற்கு பின் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை பின்னர் அகற்றப்பட்டது.

மும்பையை அதிர வைத்த முதல் தமிழ்ப் பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்

1941-ல் வெளிவந்த 'குமாஸ்தாவின் பெண்' படத்தின் விநியோக உரிமையை விலைக்கு வாங்கி, தமிழகத்தின்  பட்டி தொட்டிகளில் எல்லாம் படத்தை ஓட்டி பணம் சம்பாதித்தார் வாசன். இந்தப் படத்திற்காக 80 பிரிண்ட்கள் போடப்பட்டன என்பது கூடுதல் செய்தி.

தமிழ் சினிமாவில் 'பிரம்மாண்டம்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் எஸ்.எஸ்.வாசன்தான். 1948-ல் சந்திரலேகா படத்தை ஜெமினி ஸ்டுடியோவில் வாசன் தயாரித்தார். தயாரிப்புக்காக வாசன் செலவழித்த தொகை ரூ. 35 லட்சம்.

அந்நாளில் தென்னிந்தியாவில் தயாரான ஹிந்தி படங்களை, வட இந்திய தியேட்டர்களில் காட்சிப்படுத்த இரும்புத் திரை போட்டு வைத்திருந்தார்கள் இந்திப்பட தயாரிப்பாளர்கள். 1939-ல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் 'பிரேம் சாகர் . படத்தை சென்னையில் எடுத்து முடித்து, பம்பாய் தியேட்டர்களில் வெளியிட வெகு நம்பிக்கையுடன் சென்றார் டைரக்டர் கே.சுப்பிரமணியம். படம் வெகு பிரமாதமாக வந்துள்ளது என்று பம்பாய் பட உலக பிரமுகர்கள் மனதார பாராட்டினர். பிரேம் சாகர் பற்றிய இந்த விமர்சனம் பம்பாய் பட உலகில் காதோடு காதாகப் பரவியது.

தமிழகத்திலிருந்து இப்படி ஒரு அற்புதமான ஹிந்திப் படம் பம்பாய்க்கு திரையிட வந்திருக்கிறதா? அதை வெளியிட்டால் நம் படங்களின் கதி என்ன ஆவது, என்று பம்பாய் பல உலக ஜாம்பவான்கள் கூடிப் பேசினர். படத்தை திரையிட விடாமல் 'அரசியல்' செய்தனர். படத்தை திரையிட முடியாமல் தோல்வி முகத்தோடு சென்னை திரும்பினார் கே.சுப்ரமணியம்.

'பம்பாயில் தயாராகும் ஹிந்திப் படங்கள் தமிழத்தில்  வெளியாகி வெற்றிகரமாக ஓடும்போது, சென்னையில்  தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்கள் பம்பாய் திரையரங்குகளில் ஓடாவிட்டாலும், சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹிந்திப் படங்களாவது மும்பையில் ஓடக் கூடாதா' என எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட பிரபல தமிழ்ப் பட தயாரிப்பாளர்களின் மனதில் பெரும் ஆதங்கம் உருவானது.

சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை

வாசனுக்கு இது பெரும் வருத்தமாகவே இருந்திருக்கலாம். மனதில் இருந்த குறையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 1949-ல் வாசன் செயலில் காட்டினார். பதுங்கிய புலி பாய்ந்த கதையாக, வாசன் தன் தயாரிப்பான 'சந்திரலேகாவுடன்' பம்பாய்க்குச் சென்றார். பிரமிக்க தக்க வகையில் விளம்பரம் செய்து இபபடத்தை பம்பாயில் வெளியிட்டார். முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப் போன்று சந்திரலேகா வை கொண்டு பம்பாய் பட உலகிற்கு பயங்காட்டினார் வாசன்.

சந்திரலேகாவிற்கு கூட்டமோ கூட்டம்! வசூலோ வசூல்! பம்பாய் அதிசயித்தது, கல்கத்தா கலங்கியது, புது டெல்லி பிரமித்தது.

'சந்திரலேகா' ஹிந்தி பட உலகை பொறுத்த வரையில் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமைந்தது. 1939-ல் சுப்பிரமணியத்தால் செய்ய முடியாததை 1949-ல் சந்திரலேகாவை பம்பாயில் வெளியிட்டு சாதித்துக் காட்டினார் வாசன். அதன்பின்னர்தான் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள், சென்னையில் ஹிந்திப் படங்களை தயாரித்து அவற்றை பம்பாயில் வெற்றிகரமாக வெளியிட்டார்கள்.

ஏ.வி.எம்.செட்டியார் தனது 'பஹார்' (வாழ்க்கை) படத்தை ஹிந்தியில் வெளியிட்டு பெரும் பொருளிட்டீனார். இந்த நிகழ்வு முதல் ஏ.வி.எம்.செட்டியாரின் நெருங்கிய நண்பராகவும் மானசீக குருவாகவும் ஆனார் எஸ்.எஸ்.வாசன்.

பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற சந்திரலேகா, வாசன் அவரகளுக்கு கொடுத்த புகழை இன்றைய டிஜிட்டல் உலகில் பெற இருக்கிறது, சந்திரஹாசம். விகடனின் மூன்றாம் தலைமுறையின் இந்த முன்முயற்சி, விகடனுக்கு மட்டுமல்ல டிஜிட்டல் மீடியா உலகிற்கே புதியது. முடிவில்லா யுத்தத்தின் கதையாக 2000 பிரம்மாண்ட ஓவியங்களுடன் வாசகர்களை ஈர்க்க உள்ளது இந்த கிராபிக் நாவல்.

இங்கே க்ளிக் செய்க... 

வாசன் ஏலத்தில் எடுத்த ஸ்டுடியோ

பிரபல இயக்குனர் கே.சுப்பிரமணியம் தம் நண்பர்கள் சிலருடன் கூட்டுச் சேர்ந்து 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்" என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவை துவக்கி படங்களை தயாரித்துவந்தார். இந்த ஸ்டுடியோவில் இன்பசாகரன் என்ற படத் தயாரிப்பின்போது துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம் நடந்தது. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி அந்த ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது.  

படம் முழுவதுமாகத் தயாரிக்கப் பெற்று, வெளிவரும் நாளும் விளம்பரப்படுத்தப்பட்டுவிட்ட சூழலில் நிகழ்ந்த இந்த தீ விபத்தில் 'இன்ப சாகரன்' படத்தின் நெகடிவ்களும் எரிந்து போயின. பெரும் நட்டத்திற்கு ஆளானார் சுப்ரமணியம்.

இதனால் ஸ்டூடியோவின் பங்குதாரர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல, கோர்ட் உத்தரவுப் படி, ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்தது. டெண்டர் மூலம் ஏலத்தொகை கோரப்பட்டது. அந்த ஸ்டுடியோவை விலைக்கு வாங்க எண்ணிய வாசன், அதற்காக அளித்த டெண்டரில் அதிகபட்சத் தொகையை குறிப்பிட்டிருந்தார். (86 ஆயிரத்து 423 ரூபாய், 1 அனா 9 காசு). ஸ்டுடியோ வாசன் கைக்கு வந்தது.

ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த இடத்தை புதுப்பித்து புது ஸ்டுடியோவை அவ்விடத்தில் நிர்மாணித்த எஸ்.எஸ்.வாசன், 'மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோ' என்று தன் ஸ்டுடியோவிற்கு பெயர் சூட்டினார். ராஜா சர்.முத்தையா செட்டியாரைக் கொண்டு துவக்கப்பட்ட அந்த ஸ்டுடியோ, 1940 முதல் செயல்பட தொடங்கியது. '' ஜெமினி ஸ்டுடியோ " மூவிலேண்ட் என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ சென்னை மவுண்ட் ரோட்டில் உருவானது.

தற்பொழுது அண்ணா மேம்பாலத்தருகே 'ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸ்' என்ற பெயரில் பலமாடி கட்டடங்களை உள்ளடக்கிய குடியிருப்பு ஒன்று வானை பிளந்து கொண்டு நிற்கின்றதல்லவா? அங்குதான் முன்பு ஜெமினி ஸ்டுடியோ இருந்தது

புதிதாக ஆரம்பித்த  ஜெமினி ஸ்டுடியோவை மற்ற சினிமா தயாரிப்பாளர்களின் படப்பிடிப்பு தேவைகளுக்காக வேண்டி வாடகைக்கு விடவே வாசன் விரும்பினார். ஆனால் அவர் எண்ணம் பலிக்கவில்லை. 1940-களில் 'திண்டுக்கல்லில்' சினிமா தியேட்டர் நடத்தி வந்த வி.கோபாலகிருஷ்ணன் என்பவர் தம் நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து 'மதன காமராஜன்' என்று ஒரு சினிமா படம் தயாரித்துக்கொண்டிருந்தனர். நிதி நெருக்கடியால் படம் பாதியிலே நின்றது.

சஞ்சலமடைந்த கோபாலகிருஷ்ணன் தனது நண்பர்கள் நால்வருடன் சென்னை புறப்பட்டார். சென்னை வந்தடைந்த அவர்கள் நேரே வாசன் வீட்டிற்கு சென்றனர். வீட்டிலிருந்த வாசனின் காலில் விழுந்து வணங்கி, நின்று போன படத்தயாரிப்பை தொடர்ந்து நடத்தி முடித்துக் கொடுக்கும் படி, ஒரு விண்ணப்பத்தை அவர் முன் வைத்தனர்.

படத்தயாரிப்பாளர்கள் தன் காலில் விழுந்ததை கண்ட வாசன் பதறிப் போய் விட்டார். ''எதற்கு இதெல்லாம்; நான் உதவி செய்கிறேன்" கவலையில்லாமல் போங்கள் என்றார் வாசன். 

படத் தயாரிப்பாளர்

கோபாலகிருஷ்ணனை தனியே அழைத்த வாசன் “ உங்க சினிமா ஆர்வம் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க ஜெமினியிலேயே தங்கி விடுங்கள்.எனக்கு உதவியாக இருங்கள்” என்றார். திண்டுக்கல் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கிய 'மதன காமராஜன்' படத்தை ஜெமினியே தயாரிக்க நேர்ந்தது.

இதுதான் ஜெமினியில் உருவான முதல் தயாரிப்பு. 1941- ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான 'மதன காமராஜன்' அதே ஆண்டு நவம்பரில் திரையிடப்பட்டது. பல திரையரங்களில் பல மாதங்கள் ஓடியது. படம் சூப்பர் ஹிட் வாசனுக்கு நல்ல வருவாய் கொடுத்தது.

வாசனின் அடுத்த முயற்சி என்ன...

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close