Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலையும், மீனவர் கொலையும்! (நடுக்கடல்... நடுங்கும் உயிர்கள்- தொடர்-7)

தினசரி தங்கம் விலை நிலவரம் போல் மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றிய செய்திகளும், இலங்கை கடற்படையினரின் மீனவர் சிறை பிடிப்பு நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,  இதற்கான நிரந்தர தீர்வு குறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டியு) மாநில பொதுச்செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் முன் வைக்கும் யோசனைகளை காண்போம்.

‘‘கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்த புதிய பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்தார். இதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ‘மீனவர் பிரச்னை குறித்து பேசியதாகவும், அதற்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்திடவும் முடிவு செய்துள்ளதாகவும், மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என வலியுறுத்தியதாகவும்’ பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் இலங்கையிலோ இதற்கு நேர்மாறான நிலை உருவாகியுள்ளது.

இலங்கை வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் ‘தமிழக மீனவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும்  இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. 2010-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரில் இந்திய மீனவர்கள் காலம் கடத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே இந்திய மீனவர்களுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்’ என தீர்மானம் இயற்றிய துடன், இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இலங்கை மீனவர்களின் இந்த நம்பிக்கை இழப்புக்கு காரணம் இரு நாட்டு அரசுகளின் அரசியல் நடவடிக்கைகளே.

ஆழம் குறைவான கடல்பகுதி, தட்பவெட்பம், நீரோட்டம் போன்றவை மீன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் உள்ளதால் வருடம் முழுவதும் மீன் உற்பத்தி உள்ள பகுதி பாக்ஜலசந்தி கடல் பகுதியாகும். அதே நேரத்தில் இருநாட்டு மீனவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கும் பகுதியும் இதுதான். இலங்கையின் உள்நாட்டு போருக்கு முன்பு வரை உள்நாட்டு மீன்பிடிப்பில் 40%  மீன்கள் பாக்ஜலசந்தி பகுதியில் பிடித்ததாகும்.

போரின் காரணமாக இலங்கை தமிழர்களின் மீன்பிடி தொழில் குறைந்த நிலையில், தமிழக மீனவர்களின் மீன்பிடி அதிகரித்தது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி பாக்.ஜலசந்தி கடல்பகுதியில் 3780 விசைப் படகுகள், 15 ஆயிரம் மரவல்லங்கள், 20 ஆயிரம் சிறிய ஃபைபர் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதே போல் இலங்கை தரப்பில் 2500 கண்ணாடி இழை படகுகளும், 2200 மரவல்லங்களும், 160 மீன்பிடி கலன்களும் 43 இழுவை படகுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன்பிடி உற்பத்தி உயர்ந்தது போல் மீன்பிடி முறைகளும் மாற்றத்துக்கு உள்ளானது. சிறிய படகுகள் அதிக இழுவை சக்தி கொண்ட விசைப் படகுகளாக மாற்றப்பட்டன. சிறிய இழுவலைகள் ராட்சச வலைகளாக மாறின. அரசால் தடை செய்யப்பட்ட கொல்லிமடி, சுருக்குமடி போன்றவற்றின் மூலம் மீன்பிடிப்பதும் தொடர்ந்தது. இவற்றால் நெருக்கடிக்குள்ளானது பாக்ஜலசந்தியின் கடல்வளம்.

இதனை தடுக்க 2010- ம் ஆண்டு இந்திய-இலங்கை அரசுகளின் அனுமதியுடன் இருநாட்டு மீனவர்களிடை யேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 3-கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் மாநில மீன்துறை அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி தமிழக விசைப்படகுகள் ஆண்டுக்கு 72 நாட்கள் மட்டுமே மீன்பிடிப்பது, இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது, இலங்கையின் கரை பகுதியில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்குள் இந்திய இழுவை படகுகள் வரக்கூடாது, 5 ஆண்டுகளுக்குள் இழுவை படகுகளின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தி கொள்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடி உரிமை கேட்டுவந்த தமிழக மீனவர்களுக்கு, இலங்கை கடல் பகுதிக்கு உள்ளேயே சென்று மீன்பிடிக்கும் உரிமையை தரக் கூடிய இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசோ,  இலங்கை அரசோ சட்டரீதியாக அங்கீகரிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை அமலாக்குவது குறித்தோ, கண்காணிப்பது குறித்தோ எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. மேலும் இருநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையை ஏதோ நாட்டுப்புற பஞ்சாயத்து போல இருநாட்டு அரசுகளும் கருதியது.

இதனால் கைக்கு எட்டிய தீர்வு கரைக்கு வராமலே போனது. அடுத்ததாக இலங்கை மீனவர்களுக்கும், இந்திய நாட்டுப்படகு மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கொல்லிமடி, சுருக்குமடி மீன்பிடித்தலை தடுக்கவேண்டிய தமிழக மீன்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால் எளியவர்களின் தொழிலாக இருந்த மீன்பிடி இன்று வசதி படைத்தோரின் தொழிலாக மாறி கிடக்கிறது.

இந்நிலையில் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மீண்டும் இருநாட்டு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் இலங்கை மீன்வர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் வளத்தை அதிகரிக்கும் வகையிலும் பாக்ஜலசந்தி பகுதிக்கென தனியான மீன்பிடி நெறிமுறை சட்டத்தை வகுக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்ட வலைகளின் மூலம் மீன்பிடிப்பதை முழுமையாக தடுப்பது. விசைப்படகுகளின் அளவு மற்றும் இழுவைத் திறன் இயந்திரங்களின் அளவு, வலைகன்னிகள் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இரு நாட்டு மீனவர்களிடையே உள்ள நடுநிலையாளர்களை கொண்டு குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கவும், அதனை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் சட்ட ரீதியான ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

இலங்கை மீனவர்களின் முக்கிய கோரிக்கையான இழுவலை படகுகளை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள ஏதுவாக, இந்திய மீனவர்களிடம் உள்ள இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிக்கும் வகையில், புதிய மீன்பிடி கலன்களை மீனவர்களுக்கு மானியத்துடன் வழங்க போதுமான நிதி ஒதுக்க வேண்டும். இதற்கான திட்டத்தை பெயரளவில் செயல்படுத்தாமல் மீனவர்களின் மாற்றுவாழ்வாதார திட்டமாக இதனை செயல்படுத்த வேண்டும்.

இந்த திட்டம் செயலுக்கு வரும் வரையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்காமலும், சிறைபிடித்து செல்லாமலும் இருக்க ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதுடன் சிறிய விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்தி ஓய்வு எடுக்கவும் பாரம்பரியமாக இருந்து வந்த உரிமைகளையும் இந்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் பாக்ஜலசந்தி பகுதியில் அமைதியான மீன்பிடி தொழிலுக்கு வழி பிறக்கும்’’ என்றார்.

அலைகள் ஆர்ப்பரிக்கும்....


- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ